ஆசிரியர்களின் திறன்மேம்பாடு
(23.08.2022
அன்று வித்யாலய ப்ரவேசத்தின் அங்கமாகக், குடியாத்தம், அம்பாலால் ஜெயின் ஸரஸ்வதி வித்யாலயாவில்
நிகழ்த்திய உரை).
1. ஆசிரியர்
என்பவர் தேசத்தை வளர்ப்பவர். முழுமையாகக் கற்பித்தலும், முறையாகக் கற்பித்தலும், மும்முரமாகக்
கற்பித்தலும் அவர்தம் கடமை.
1) முழுமையாகக் கற்பித்தல்
– மாணவன் முழுமையாகத் தெரிந்து
கொள்ளும் வகையில் கற்பித்தல்.
2) முறையாகக் கற்பித்தல்
– எது முதலில், எது அடுத்தது என்று அறிந்து
கற்பித்தல்.
3) மும்முரமாகக்
கற்பித்தல் – ஈடுபாட்டுடன் கற்பித்தல்.
ஆசிரியத் தொழில், என்பது வருங்காலத்திய நல்ல குடிமக்களை உருவாக்கும்
பணி. கற்பித்தலோடு, தானும் கற்கும் ஒரு வழி.
2. ஆசிரியர் என்பவர்
கர்மயோகத்தைக் கடைப்பிடிப்பவர். பலனில் ஆசையற்று,
தன் கடமையைச் செவ்வனே செய்பவர். பகவத் கீதா
போட்டியில், பங்கு கொண்ட அனைவருக்கும் நிச்சயம் பரிசு உண்டு. பங்கு பெறுவதே வெற்றி. இத்தகைய மனப்பாங்கை மாணவரின் மனதில் பதிய வைத்தல்
ஆசிரியரின் முதல் கடமை.
3. கல்வியில் சீர்திருத்தம்,
பாடத்திட்டங்கள், பாடங்கள், மற்றும் பாடம் நடத்தும் வழிமுறைகள், ஆகியவ்ற்றில் செய்யப்படுவதல்ல. பாடம் மட்டுமே மேன்மையான மாணவர்களைஉருவாக்காது.
கல்வி என்பது, ‘மனிதனுக்குள் உள்ள முழுமையை வெளிக்கொணர்தல்’ என்றார் சுவாமி விவேகானந்தர். இது சொல்வதற்கு எளிது. செய்வது கடினம். தேசம், ஆசிரியரைச் சார்ந்திருக்கிறது. ஏனென்றால், அவரே, தேசத்தினுடைய மேம்பாட்டிற்கான கிரியா ஊக்கி.
4. தேசம் மேம்பட, நமது கல்வி திட்டத்தில், ஆசிரியர்களின்
அறிவு, கற்பிக்கும் திறன், மற்றும் ஒழுக்கத்தை நிலைநாட்ட வேண்டும். ஆசிரியர், பாடத்தை நடத்துபவரல்ல. மாணவர்கள், தேசத்தின் நவீன சிற்பிகள் எனத் தகவமைப்பதே
ஆசிரியர் நோக்கம். பாடத்தை மட்டும் நடத்தும்
ஆசிரியர், மாணவனை, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவனாகச் செய்து வெற்றி பெறும் வழியைக்
காட்டலாம். ஆனால், நல்ல ஆசிரியர், மாணவனின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில், தனது கடமையைத்
திறம்படச் செய்தவர் ஆவார்.
5.
ஆசிரியர், மாணவர்களூக்கு, ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, மாணவர்களின் இளவயதிலேயே,
அவர்கள் மனம் பலதிசைகளில் செல்லாது, குவிந்த நோக்குடன் லட்சியத்தை அடையச் செய்பவர். இது நடக்காத வரை, மாணவ்ர்களின் உள்ளம், வெளிக்கவர்ச்சிகளில்
ஈடுபட்டு அழியும். இந்தக் கொலைக்கு நாம் உடந்தையாக
இருக்கக் கூடாது. மாணவர்கள், தகுதியற்றவ்ர்
பின் செல்லாதவாறு தடுக்கும் திறமையை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், இந்த நோக்கத்திற்காகவே பயிற்சி பெறுகின்றனர். பெற்ற பயிற்சியை நடைமுறைப்படுத்தாமல் இருத்தல் பாவமல்லவா?
6. என் பள்ளி நாள்களில், எனக்குச் சின்னஞ்சிறு வயதில்
பாடம் சொல்லித் தந்த ஸ்ரீமதி ஜெயலட்சுமியை, இன்றும், என் அறுபதாம் வயதிலும், நினைத்துப்
பார்க்கிறேன். மிகச் சிறிய வயதில், எனக்குக்
கல்வியை அறிமுகம் செய்த, ஆசிரியரின் நட்பான அணுகுமுறையும், ஒழுக்கமும், கல்வியின் பால்
மாணவர்களுக்கு ஈடுபாட்டை வளர்த்தலும் ஆகிய குணங்கள், வளர்ந்த பின்னரும், அவரை, மறக்கவொண்ணாப்
பெண்மணியாகச் செய்து விட்டன.
7. பதின்ம வயதுகளில், கற்பித்த பல ஆசிரியர்களை நினவுகூறுகிறேன். அவர்தம் பெயரும், அவர்கள் வகுப்பெடுத்த முறையும்,
அவர்கள் கூறிய அறிவுரைகளும் என்றென்றும் போற்றத்தக்கவை. ஓர் ஆசிரியர், தம் ஆசிரியரை தனக்கு உதாரணமாகக் கொள்ளத்
தகும். ஆசிரியர், தன் மாணவனின் படிப்பிற்கும்,
அதற்கும் மேலாக, மாணவரின் குண மேம்பாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையானவர். மாணவரை நல்லகுடிமகனாக வடித்தெடுப்பதே ஆசிரியர் தொழில். நம் எல்லோருடைய நல்ல குணங்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும்
நம் ஆசிரியரே காரணம். எளிய வாழ்க்கையும்,
ஆழ்ந்த புலமையும், கற்றதை மற்றவர்க்கு எடுத்துச் சொல்லும் திறமையும் நமக்குப் பெருமை
தருபவை.
8. மாணவரின் வளர்ச்சி, ஆசிரியரின் வளர்ச்சியைப் பொறுத்தே
அமையும். ஆதலால், ஆசிரியர்களின் வளர்ச்சிக்குத்
தேவையானவற்றைச் செய்வது நம் முன்னே முதலில் நிற்கும் எதிர்பார்ப்பு ஆகும். தானும் வளர்ந்து, மாணவரையும் வளரச் செய்பவரே நல்லாசிரியர். மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ள மாணவனையும் உயர்த்துவதே
ந்ம் லட்சியம்.
9. ஸம்ஸ்க்ருத ச்லோகம் ஒன்று, அன்னை பார்வதியைப் பற்றி,
‘ஸ்வயம்
பஞ்சமுக: புத்ரௌ கஜானனஷடானனௌ ।
திகம்பர: கதம் ஜீவேத் அன்னபூர்ணா ந சேத் க்ருஹே ॥‘
என்று கூறுகிறது. இதன் பொருள்: பரமசிவனுக்கு
ஐந்து முகங்கள். அவர் பிள்ளைகளான விநாயகருக்கு
யானை முகம், முருகனுக்கு ஆறுமுகங்கள். பரமசிவன்
ஆடையுமில்லாத திகம்பரர், ஏழை. இப்படிப்பட்டவர்களுக்கு,
வயிறார உணவு எப்படிக் கிடைக்கும்? வீட்டில்
அன்னபூரணியாகிய அன்னையிருக்கக் கவலையில்லை.
அவள், தன் திறமையை, பெயரின் மூலமாகவே வெளிப்படுத்துகிறாள். வாரி வழங்கும் வள்ளலாக, அன்னபூரணி திகழும்போது,
சாப்பாட்டிற்கு என்ன குறை? மற்றவர்கள், திறமை குன்றியவர்களாக இருந்தாலும், ஒருவன்,
தன் செயல்பாட்டால், அக்குறைகளெல்லாம் ஒழியும்படிச் செய்ய முடியும் என்பதே இந்தச் சுலோகத்தின்
துணிபு.
நாமும்,
அன்னபூரணியாக, மாணவரின் கல்வியையும், ஒழுக்கத்தையும் ஓங்கச் செய்து, அவர்களை மேம்படச்
செய்வோமாக.