Sunday 19 August 2018

கலவை ப்ருந்தாவனம்

செவிலிமேடு நரசிம்மர் :
பல்லவ மன்னனின் செவிலித்தாய் வசித்ததால் செவிலிமேடு. செவ்வல்லி மலர்கள் நிறைந்திருந்த இடம். காஞ்சிக்கருகே பாலாற்றங்கரையில் உள்ளது. 1200 வருடங்கள் பழைமையானது.  தாயார் சௌந்தர்ய வல்லி. உத்சவரின் பெயர் சௌந்தர்ய வரதர். முச்லீம் படையெடுப்பின் போது காஞ்சி வரதராஜப் பெருமாள் வந்து தங்கிய தலம். இதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் வரதர், சித்திரா பௌர்ணமியன்று செவிலிமேடு வந்து தரிசனம் தருகிறார்.
காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு ஸ்ரீ இராமானுஜர் திருமஞ்ஜன தீர்த்தம் கொண்டு வந்த சாலைக்கிணறு செவிலிமேடு நரசிம்மர் ஆலயத்திற்கு அருகில் உள்ளது. இங்கிருந்து 6 கி. மி. தொலைவில் ஐயங்கார் குளம் என்னும் ‘நட வாவி’ குளம் உள்ளது. குளத்தின் எல்லா நீரையும் இறைத்து விட்டால், கீழே ஒரு மண்டபம் தெரியும்.  வரதராஜப் பெருமாள் சித்திரா பௌர்ணமியன்று அந்த மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.
கலவை ப்ருந்தாவனங்கள் :  காஞ்சி காமகோடி பீடத்தின் 66 மற்றும் 67 பீடாதிபதிகளின் அதிஷ்டானங்கள் :
காஞ்சியிலிருந்து தூசி, நமண்டி, ராண்டம் வழியாக 45 கி.மி. தூரம். நாராயண சதுர்வேதி மங்கலம். காஞ்சி சங்கர மடத்தின் 66வது பட்டம், சந்திர சேகரேந்திர சரஸ்வதி VII, இங்கே, மாக கிருஷ்ண அஷ்டமியில் சித்தி அடைந்தார்.  அவரின் சிஷ்யர், மஹாதேவேந்திர சரஸ்வதி V, இங்கே, பால்குன ஷுக்ல ப்ரதமையில் சித்தியடைந்தார். இவ்வூரில் சங்கர மடமும், தர்மசம்வர்தினி சமேத திருக்கரிசநாதர் ஆலயமும், கரிவரதப்பெருமாள் ஆலயமும் உள்ளன. சங்கரமடத்தால் நடத்தப்படும் முதியோர் இல்லமும், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லமும் இருக்கின்றன. தவத்திரு சச்சிதானந்த ஸ்வாமிகளால் நிர்வகிக்கப்படும் கமலக்கண்ணியம்மன் கோயிலும் உள்ளது.
ஆரணி :
பெரியநாயகியம்மன் சமேத புத்ரகாமேஷ்டி ஈச்வரர் கோயில்.  ஸ்தல வ்ருக்‌ஷம் பவழமல்லி. ஜமதக்னி மகரிஷியின் கமண்டலத்திலிருந்து பெருகிய நீர் கமண்டலநதியாக ஓடுகிறது. தர்மாரண்ய க்ஷேத்ரமெனப் பெயர் பெற்ற இந்த இடத்தில் தசரத மஹாராஜா புத்ரகாமேஷ்டி யாகம் செய்து ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களை அடைந்தார். பிள்ளை இல்லாதவர்கள், ஆறு திங்கட்கிழமைகள் விரதம் இருந்து, புத்ரகாமேஷ்டி ஈச்வரரை பூசிக்க வேண்டும்.  முதல் திங்கட்கிழமை, ஒரு குழந்தைக்கு உணவளிக்க வேண்டும். அடுத்தடுத்த திங்கட்கிழமைகளில், முறையே 2, 3, 4, 5, 6 குழந்தைகளுக்கு  உணவளிக்க வேண்டும். இப்படி ஒரு மண்டலம் பூசித்து பயனடைந்தோர் ஏராளம்.
ஏரிக்குப்பம் :
ஆரணியிலிருந்து படவேடு செல்லும் வழியில் உள்ள தலம். 6.5 அடி உயரமுள்ள லிங்கத்தில் யந்திர வடிவில் சனிபகவான் அருளும் கோயில்.  லிங்கத்தில், மேற்பகுதியில் சூரிய சந்திரரும், நடுவில் காகமும், நமசிவாய மந்திரமும், ஷட்கோணத்தில் பீஜாக்ஷரங்களும், லக்ஷ்மி மந்திரங்களும் உள்ளன.  கூரையில்லாத சன்னிதி. மாட்டுப்பொங்கலன்று 108 குடம் பாலபிஷேகம் நடைபெறுகிறது. 
வாழைப்பந்தல் :
முனுகப்பட்டிலுள்ள பச்சையம்மன் கோயில். சுதை சிற்பம். ஈச்வரன், மன்னார்சாமி.  அம்பிகை தவம் செய்தபோது வாழையிலைகளால் பந்தலிட்ட இடம், எனவே வாழைப்பந்தல்.  பூசைக்கு பிள்ளையாரும் முருகனும் நீர் கொண்டு வந்தனர். நேரம் மிகுந்தபடியால் அம்பிகை கைத்தடியால் தோண்ட நீர் பெருகியது. எனவே இப்பகுதி முக்கூடல் எனப்படுகிறது. சிவலிங்க ஸ்தாபனம் செய்து,  அம்பிகை  பூசித்த  சிவன்,  ’முக்கூடல் சுயம்பு லிங்கம்’.     தவத்திற்கு     
இடையூறு செய்த அசுரர்களை அழிக்க காளியோடு விஷ்ணு வாமுனி வடிவிலும், சிவன் செம்முனி வடிவிலும் வந்தனர். சப்த ரிஷிகளும் போர்வீரர் வடிவில் வந்தனர். பல குடும்பங்களுக்குக் குலதெய்வமாக விளங்கும் இக்கோயில் தமிழகத்தில் உள்ள எல்லா பச்சையம்மன் கோயில்களுக்கும் முதன்மையானது.
செய்யாறு ;
காஞ்சியிலிருந்து 30 கி.மில், பாலகுசாம்பிகா சமேத வேதபுரீச்வரர் திருக்கோயில்.  சுயம்பு லிங்கம். ஸ்தல விருக்ஷம் பனை மரம். ஈச்வரன் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் வேதத்தை உபதேசித்ததால், வேதபுரீச்வரர் என்று அழைக்கப்படுகிறார். தக்ஷன் தன் யாகத்தில் சிவநிந்தனை செய்ததைப் பொறுக்காத அம்பிகை இங்கு தவம் செய்தாள். நீருக்காக முருகன் வரவழைத்த நதி சேய் + ஆறு, சேயாறு எனவும், சிவந்த நிறமுள்ளதால் செய்+ஆறு செய்யாறு எனவும் அழைக்கப்பட்டு இன்று செய்யாறு என வழங்கப்படுகிறது. சிவன் கோயிலைச் சுற்றி இருந்த எல்லா பனைமரங்களும், குலை தள்ளாத ஆண்மரங்களாக இருந்தன. திருஞானசம்பந்தர் இந்தத் தலத்திற்கு வந்தபோது ‘பதிகம்’ பாடி பெண்மரங்களாகும்படி செய்தார். இன்றும் அவை பெண்மரங்களாகத் திகழ்கின்றன. ஈசன் சன்னிதியில் ஆண்பனை, பெண்பனையின் கீழ் லிங்கம், சம்பந்தர் ஆகிய சிற்பங்களைக் காணலாம். இது பொறாத சமணர்களுடன் ‘புனல்வாதம்’ செய்து வெற்றி கண்டார். சமணர்கள் ‘ஆபிசார யாகம்’ செய்து பாம்பு ஒன்றை அனுப்பினர்.  ஈசன், பாம்புபிடாரன் வடிவெடுத்து, அந்தப் பாம்பை அடக்கினார். ஈசன் ‘நாகலிங்கம்’ என்னும் பெயருடன் காட்சியளிக்கிறார்.
இத்தலத்தில் நந்தி ஈசனை நோக்காமல் வாயிலை நோக்கி உள்ளது. தொண்டைமான் அரசன் தன் எதிரியோடு போரிட நேர்ந்தபோது ஈசன் நந்தியை அனுப்பி போரில் வெற்றி காண வைத்தார். அதன் காரணமாக நந்தி திரும்பி உள்ளார்.  இறைவன் வேதத்தை உபதேசித்தபொழுது மற்றவர் இடைஞ்சல் செய்யா வண்ணம் நந்தி திரும்பி உள்ளதாகவும் ஒரு செய்தி உள்ளது.
குரங்கணில் முட்டம் ;
காஞ்சியிலிருந்து வந்த்வாசி செல்லும் வழியில் தூசியிலிருந்து 2 கி. மி. தொலைவில் உள்ளது. இறையார் வளையம்மையுடன் வாலீச்வரர் அருளும் தலம். சுயம்பு லிங்கம். மேற்கு பார்த்த சந்நிதி. ஸ்தல வ்ருக்ஷம் இலந்தை. தீர்த்தம் காக்கைமடு என்னும் வாயஸ தீர்த்தம். வாலி மலர்களை பறிக்காமல், மரத்தையே இறைவனுக்கு மேல் கொண்டுவந்து உலுக்கி அதன் மூலம் ஈசன் மேல் மலர்களைப் பொழிந்துள்ளான். அதனால் சிவனுக்கு ‘கொய்யாமலர் நாதர்’ என்று பெயர். மார்கண்டேயனின் உயிரைக் கவர யமன் வீசிய பாசக்கயிறு, சிவன் மீதும் வீழ்ந்ததால், ஈச்வரன் யமனை எட்டி உதைத்தார். பிழை பொறுக்க வேண்டி, யமன் இங்கு காக்கை உருவில் ஈசனை வழிபட்டான். அப்போது ஏற்படுத்திய தீர்த்தம் காக்கை மடு. காக்கைக்கு தமிழில் முட்டம் என்னும் சொல் இருக்கிறது. அகலிகையிடம் முறை தவறி நடந்துகொண்டு அந்த பாவம் தீர இந்திரன் அணில் வடிவில் சிவனை வழிபட்டான். வாலி, இந்திரன், யமன் ஆகியோர் முறையே குரங்கு, அணில், காக்கை உருவில் வழிபட்டதால் இவ்வூர் ‘குரங்கணில்முட்டம் எனப்படுகிறது. இந்திரன், யமன் போன்றோரின் பாவம் தீர்ந்ததால் இத்தலம் எல்லா பாவங்களையும் போக்கும் தலமாக விளங்குகிறது.

ஸ்ரீசரணம் அன்பர்கள் 19.08.2018 அன்று தரிசிக்க திட்டமிட்டத் தலங்கள். இவற்றில் ஆரணி, செய்யாறு மற்றும் குரங்கணில்முட்டம் ஆகியத் தலங்களை  நேரமின்மைக் காரணமாக தரிசிக்க இயலவில்லை.  விரைவில் தரிசனம் பெற் இறையருள் கூட்டும்.