Sunday 22 April 2018

ஷடாரண்ய க்ஷேத்ரங்கள்


ஷடாரண்ய க்ஷேத்ரங்கள்
ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கல்யாணத்திற்கு வந்த ரிஷிகள் காஞ்சிபுரநகர சந்தடிகளை  விரும்பாமல் அமைதியான இடத்தில் தங்கியிருக்க விரும்பினார்கள்.  காஞ்சிக்கருகில் ஆறு காடுகளில் தங்கினார்கள். ஆறுகாடு  என்பது ஆற்காடு என மருவியது. வால்மீகி, வசிஷ்டர், பரத்வாஜர், அத்ரி, அகஸ்தியர், கௌதமர் என்னும் ஆறு ரிஷிகள், ஆறு விதமான காடுகளில் தங்கி சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்தார்கள்.  ஒவ்வொரு லிங்கமும் அந்தந்த ரிஷியின் பெயரைத் தாங்கி இன்றளவும் விளங்குகின்றன.  பாலாற்றின் இரு கரைகளிலும்,     மேற்புறம் மூன்றும், கீழ்புறம் மூன்றும் என ஆறு சிவ ஸ்தலங்கள் உள்ளன.  இவையேயன்றி மேலும்,  இராணிப்பேட்டைக்கு அருகில் நவ்லாக் பண்ணையில் விசுவாமித்திரர் பூசித்த அபிராமி சமேத விஸ்வாமித்ரேஸ்வரர்  கோயிலும், காரைக்கு அருகே அவரக்கரையில் காச்யபர்  பூசித்த பர்வதவர்த்தினி சமேத காச்யபேஸ்வரர் கோயிலும் உள்ளன,
மேல் விஷாரம் :
எட்டி மரக்காடு.  வால்மீகி  மகரிஷி வழிபட்ட தலம்.  திரிபுரசுந்தரி சமேத வால்மீகேஸ்வரர்.கோயிலில் வால்மீகி ரிஷி நின்றபடி சிவனை வணங்கும் சிலை உள்ளது.  எட்டி மரம் விஷ வ்ருக்ஷம்.   விஷ வ்ருக்ஷம் என்பது விஷாரம் என மாறியது. மேற்குப் பகுதியைச் சேர்த்ததால் மேல் விஷாரம் என்று அழைக்கப்படுகிறது.
வேப்பூர் :
வேப்பங்காடு. வசிஷ்டரிஷி பூஜை செய்த கோயில்.   பால குசாம்பிகா சமேத வசிஷ்டேஸ்வரர். வசிஷ்டர் நின்ற நிலையில் சிலை உள்ளது.வேம்புக்கு 'நிம்ப வ்ருக்ஷம் என்று பெயர்.  அதனால் இவ்விடம் 'நிம்ப வனம் எனப்படுகிறது. இராமபிரானின் குருவான வசிஷ்டர் பூஜை செய்ததால் இக்கோயில் 'குருஸ்தலம்' எனக்  கொண்டாடப்படுகிறது,  அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற ஸ்தலம்.
புதுப்பாடி : 
மாங்காடு. மாமரங்கள் நிறைந்த வனமாகையால் 'ஆம்ர வனம்'. பரத்வாஜர் பூசித்த இறைவன்.  தர்ம சம்வர்தினி சமேத பரத்வாஜேஸ்வரர்.  பரத்வாஜர் நின்ற நிலையில் சிவனை பூஜிக்கிறார்,
காரை : 
'கஷ்டங்கள் போக்கும் காரைக்காடு' என்று உலக வழக்கு உள்ளது,  காரைச் செடிகள் நிறைந்த காடு.  கௌதமரிஷி பூஜித்த சிவன்  க்ருபாம்பிகா  சமேத கௌதமேஸ்வரர்.  கௌதமரின் அமர்ந்த நிலையிலுள்ள விக்ரஹம்  உள்ளது. 
வன்னிவேடு :
வன்னி மரங்கள் நிறைந்த காடு. அகஸ்தியர் பூஜை செய்த கோயில்.  புவனேஸ்வரி சமேத அகஸ்த்யேஸ்வரர்.   அமர்ந்த நிலையில் அகஸ்தியரின் சிலை உள்ளது, லிங்கத்தில் அகஸ்தியரின் விரல் அடையாளம் உள்ளது.  உத்திரட்டாதி நக்ஷத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய கோயில்.  இறந்தவர்களுக்கு இக்கோயிலில் மோக்ஷ தீபம் ஏற்றுவது விசேஷம்.  துர்கை அம்மன் சந்நிதியில் அம்மனின் காலடிச் சுவடுகள் உள்ளன.
குடிமல்லூர் :
மல்லிகைக்காடு. அத்ரி மகரிஷி வழிபட்ட ஸ்தலம்.  த்ரிபுரசுந்தரி  சமேத அத்ரீஸ்வரர்.  அமர்ந்த நிலையில் அத்ரியின் சிலை உள்ளது,  இவ்வூரில் உள்ள மற்றொரு சிவன் கோயில் ஸ்ரீ பூமிநாதேஸ்வரர் கோயில் ஆகும். இந்தக் கோயில் வாஸ்து பூஜைக்கு உகந்தது.
ஸ்ரீசரணம் அன்பர்களே !  கடந்த 22.04.2018 அன்று நாம் தரிசித்தத் தலங்கள் இவை.