Saturday 25 April 2020

சப்த விடங்கத் தலங்கள்


சப்த விடங்கத் தலங்கள்         -   ரங்கஸ்ரீவி ஆர் ஸ்ரீநிவாஸன்
தேவாரம் பாடிய மூவரும் போற்றிய தலம் திருவாரூர். இதனுடன் சுற்றியுள்ள ஆறு தலங்கள் சேர்ந்துசப்த விடங்கத் தலங்கள் என்று போற்றப்படும். 
கைலாயத்தில் ஒரு வில்வமரத்தடியில் சிவனும் பார்வதியும் இருந்த வேளையில் குரங்கு ஒன்று மரத்தின் மேலிருந்து வில்வ தளங்களை, பார்வதி பரமேச்வரர் மீது அர்சித்தது. பார்வதி இடையூறாகக் கருத,  சிவன் அக்குரங்கை பூவுலகில் பிறக்க கட்டளையிட்டார்.
குரங்கு, அறியாமல் செய்த குற்றத்தைப் பொருத்தருளி, எப்பொழுதும் சிவபக்தி நிலைக்க மனிதப் பிறவியிலும் குரங்கு முகமே தரும்படி வேண்டியது. அப்படிப் அரசர்க்கரசனாக பிறந்தவனே முசுகுந்த சக்ரவர்த்தி.  அவ்வரசன், நாரத முனிவரிடம், விரதங்களின் சிறப்புப் பற்றிக் கேட்க, நாரதர், முருகனைக் குறித்துக் கடைபிடிக்கும் மூன்று விரதங்களின் பெருமையைக் கூறும்போது,  சுக்கிரவார விரதமிருந்து பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டுவந்ததும், தான்,  கிருத்திகை விரதம் அனுஷ்டித்து முதன்மை முனிவனானதும் கூறி, மூன்றாவதான சஷ்டி விரதத்தை உபதேசித்தார்.  முசுகுந்தனும் அவ்வாறே சஷ்டி விரதம் அனுஷ்டித்த போது, முருகப்பெருமான் தரிசனம் தந்து வரம் கேள் என்ற போது, அரசன், தன் படைக்கு வீரவாகுவை சேனாபதியாகத் தரும்படி வேண்டினான்.  முருகனும், வீரவாகுவை அழைத்து, முசுகுந்தனுக்கு சேனாபதியாகும்படிக் கட்டளையிட்டார்.  முருகனை பிரிய மனமில்லாத வீரவாகு அக்கட்டளையை மறுத்துவிட்டார்.  முருகன், வீரவாகுவை மண்ணுலகில் பிறக்கும்படி சபித்தார்.    நிலவுலகில் பிறந்த வீரவாகு, புஷ்பகந்தி என்பவளை மணந்து, சித்திரவல்லி யென்னும் பெண்ணைப் பெற்றெடுத்தான். வீரவாகு, அந்தச் சித்திரவல்லியை முசுகுந்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்து, அவன் படைக்குத் தளபதியானான். இதனால், முசுகுந்தன் மூவுலகில் எவராலும்  வெல்ல முடியாதவனாகி, தேவையெனில்,    அரக்கர்களை எதிர்த்துப் போரிட்டு இந்திரனுக்கும் உதவி வந்தான்.
பாற்கடலில் அறிதுயில் கொள்ளும் பரந்தாமன், தன்னுள்ளத்தே கண்ட அரனின் தாண்டவத்தை, ‘தியாகேசர்என்னும் உருவில் பூசித்து வந்தான்.  இந்திரன், திருமாலை பணிந்து தியாகேசர் உருவைப் பெற்றுக்கொண்டு தனது பூசையில் இருந்த உளிபடாத (விடங்கம்) மரகதலிங்கத்துடன் சேர்த்து வைத்து நாடொறும் போற்றி வந்தான்.  ஒருமுறை, முசுகுந்தன் செய்த உதவிக்குப் பதிலாக தேவருலகிலுள்ள எதையேனும் தர, இந்திரன் விரும்ப, முசுகுந்தன், தனக்கு விடங்கலிங்கத்தைத் தரும்படிக் கேட்டுக் கொண்டான். மரகதலிங்கத்தைப் இழக்க மனமில்லாத இந்திரன், மறுநாள் தருவதாகக் கூறி, இரவோடிரவாக, மயன் மூலமாக அந்த லிங்கத்தை ஒத்த ஆறு உளிபடாத லிங்கங்களைச் செய்து, காலையில் முசுகுந்தன் முன் ஏழு லிங்கங்களையும் கொண்டு வந்து காட்டி, பிடித்ததை எடுத்துக் கொள்ளுமாறுக் கூறினான். திகைத்த முசுகுந்தன் சிவனை வேண்ட, சிவனும்  திருமாலை வண்டு வடிவம் கொண்டு, ஆதி விடங்க லிங்கத்தை அடையாளம் காட்டச் செய்தார். அந்த லிங்கத்தை எடுத்துக் கொண்டான். சிவனின்  நோக்கம் அறிந்த  இந்திரன் தன் முயற்சியைக் கைவிட்டு ஏழு உளிபடாத லிங்கங்களையும் (சப்த விடங்க லிங்கங்கள்) தியாகேச மூர்த்தியையும் முசுகுந்தனுக்குக் கொடுத்தான். முசுகுந்தன் இந்திரனளித்த லிங்கத்தை திருவாரூரில் கோவில் கட்டி ஸ்தாபித்தான்.  தியாகேசருக்கும் சன்னிதி அமைத்து வழிபட்டான். இந்திரனும் பூவுலகிற்கு வந்து தியாகேச மூர்த்திக்கு பிரம்மோற்சவம் நடத்தினான். முசுகுந்தன் மற்ற ஆறு மரகத லிங்கங்களான விடங்க லிங்கங்களை, நாகை, திருநள்ளாறு, வேதாரண்யம், திருக்காரவாயில், திருவாய்மூர், திருக்குவளை என்னும் தலங்களில் கோவில் கட்டி ஸ்தாபித்து, தியாகேசருக்கும் சன்னிதி எழுப்பி வணங்கினான்.  இந்த சப்த விடங்கத் தலங்கள் குறித்துத் தமிழ் பாடல்  ஒன்று பின்வருமாறு உள்ளது:
சீரார்  திருவாரூர் தென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு காராயில்பேரான
ஒத்த திருவாய்மூ ரொண்திருக் கோளிலி
சத்த விடங்கத் தலம்.
இந்த் ஏழு தலங்களிலும்  லிங்க வடிவிலுள்ள சிவ பெருமானின் பெயரும் அவர் புரியும் நடனமும் :
தலம்
விடங்கம்
நடனம்
திருவாரூர்
வீதி விடங்கர்
அசபா நடனம்
நாகை
சுந்தர விடங்கர்
வீசி நடனம்
திருநள்ளாறு
நாக விடங்கர்
உன்மத்த நடனம்
வேதாரண்யம்
புவனி விடங்கர்
அம்சபாத நடனம்
திருக்காராயில்
ஆதி விடங்கர்
குக்குட நடனம்
திருவாய்மூர்
நீல விடங்கர்
கமல நடனம்
திருக்கோளிலி
அவனி விடங்கர்
பிருங்க நடனம்

இதில், அசபா நடனம், மூச்சுக்காற்று போல ஒரே சீராக உட்சென்று வெளிவருதல். வீசி நடனம், கடலலையின் அசைவை ஒத்தது.  உன்மத்த நடனம், பித்தனின் நடனம் போல் எந்த ஒழுங்குமில்லாதது. அம்சபாத நடனம், அன்னத்தின் காலடியை போன்றது.  குக்குட நடனம், கோழி போல சிறிது மேலெழும்பி ஆடுவது.  கமல நடனம், தாமரை தண்ணீரில் மிதப்பதைப் போன்றது.  பிருங்க நடனம், வண்டு ரீங்காரமிட்டு மலரில் அழுந்தியும் மேலெழுவதைப் போன்றது.   இவ்வேழு விடங்க லிங்கங்களை தரிசிப்பது ஒவ்வொரு சிவனடியார்க்கும் கடமையாகும்.