Saturday 23 May 2020

தீண்டாத் திருமேனி

தமிழ் நாட்டின் தலை நகராம் சென்னையில் ஓடும் கூவம் நதி மிகவும் புகழ் படைத்த ஒன்றாகும்.  இந்த நதி திருவள்ளூர் மாவட்டத்தில் பேரம்பாக்கம் அருகிலுள்ள திருவிற்கோலம் என்று தேவார பெயர் பெற்ற கூவம் என்னும் ஊருக்கருகில் ஏரியில் கிணற்றில் சுரந்து புறப்பட்டு சென்னை நகரில் கடலில் கலக்கிறது. கூபம் என்னும் ஸம்ஸ்கிருதச் சொல்லுக்கு கிணறு என்று பொருள். அதுவே தமிழில் கூவம் என மருவி வழங்கப்படுகிறது.  கூவம் என்னும் ஊரிலிருந்து வருவதால் நதியும் கூவம் என்றே அழைக்கப் படுகிறது. அப்படிப்பட்ட கூவம் என்னும் ஊரிலுள்ள சிவன் கோவில் திருவிற்கோல நாதர் ஆலயம் ஆகும்.  

தொண்டை நாட்டு பாடல் பெற்ற 32 தலங்களுள் ஒன்றான இக்கோவில்,  சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில்  உள்ள கடம்பத்தூர் என்ற நிலையத்திலிருந்து 9 கி. மீ. தொலைவில் உள்ளது.   திரிபுரம் எரிக்க சிவன் புறப்பட்டபோது தனது கைவில்லை ஊன்றி நின்ற இடமாதலால் திருவிற்கோலம் என்றழைக்கப்படுகிறது. 
இத்தலத்து இறைவன் 'தீண்டாத் திருமேனி' ஆவார்.  எவரும் தொடக்கூடாத திருமேனி.  பூஜை செய்யும் சிவாச்சார்யரும் லிங்கத்தைத் தொட்டு பூஜை செய்வதில்லை.  கூவம் நதி ஜலமே ஈசனுக்குரிய அபிஷேக ஜலம்.  நதியில் நீரின்றி வறண்ட காலத்தில் இள நீர் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும்.  அர்ச்சகர்கள், கோவிலுக்கு உள்ளே இருக்கும் 'கூபாக்னி தீர்த்தம்' என்ற கிணற்று நீரில் ஸ்னானம் செய்த பிறகே, பூஜையைத் தொடங்குவது வழக்கம்.
உச்சிகால  பூஜையில் அருகிலுள்ள  'பிஞ்சவாக்கம்' என்னும் ஊரிலிருந்து கொண்டு வரப்படும் பசும் பால் மட்டுமே பயன்படுத்தப்படும்.  திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நந்தவனத்துப் பூக்கள் மட்டுமே பூஜையில் உபயோகிக்கப்படும்.  இத்தலத்து இறைவனான லிங்கம், மழை, வெள்ளம் முதலிய காலங்களில் வெளுத்தும், சண்டை முதலிய காலங்களில் சிவந்தும் காட்சி தருவார்.  திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் உடையது.     



Friday 8 May 2020

சர்வேச்வர தரிசனம்


1.  சக்கர மங்கை :  தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில் ஐயம்பேட்டையில்.  சக்கரப்பள்ளி என அழைக்கப்படுகிறது.  இறைவனின் திருமுடி கண்டேன் என்று பொய் சொன்ன பிரம்மன் சக்ரவாகப் பறவையாக, அவன் சக்தி பிராம்மி புரட்டாசி மாதத்து அமாவாசையை அடுத்த பிரதமையில் வழிபட்ட தலம். தேவ நாயகி ஸமேத சக்ரவாகேச்வரர்.  நாதசர்மா, அனவித்தை தம்பதியருக்கு அம்பாள் பேதை பருவத்தில் காட்சி.  இறைவனின் நேத்ர தரிசனம்.
2.  அரிமங்கை :  சக்கரப்பள்ளியிலிருந்து 1 கி. மீ.  ஞானாம்பிகை ஸமேத ஹரிமுக்தீச்வரர்.  மகேச்வரி துவிதியையில் வழிபட்ட தலம்.  நாதசர்மா, அனவித்தை தம்பதியருக்கு அம்பாள் பெதும்பை பருவத்தில் காட்சி.  இறைவனின் கங்கை தரிசனம்.
3.  சூலமங்கை :  ஐயம்பேட்டையிலிருந்து 2 கி. மீ.  அலங்காரவல்லி ஸமேத க்ருத்திவாகேச்வரர்.  கௌமாரி திருதியையில்  வழிபட்ட தலம்.  நாதசர்மா, அனவித்தை தம்பதியருக்கு அம்பாள் மங்கை பருவத்தில் காட்சி.  இறைவனின் திரிசூல தரிசனம்.
4. நந்திமங்கை :    ஐயம்பேட்டையிலிருந்து 3 கி. மீ. ( நல்லிச்சேரி). அகிலாண்டேச்வரி ஸமேத ஜம்புகேச்வரர்.  வைஷ்ணவி சதுர்த்தியில் வழிபட்ட தலம்.  நாதசர்மா, அனவித்தை தம்பதியருக்கு அம்பாள் கன்னி பருவத்தில் காட்சி.  இறைவனின் திருவடி தரிசனம்.
5.  பசுமங்கை :  பசுபதிகோயில்.  பால்வளை நாயகி ஸமேத பசுபதீச்வரர்.  வராகி பஞ்சமியில்  வழிபட்ட தலம்.  நாதசர்மா, அனவித்தை தம்பதியருக்கு அம்பாள் அரிவை பருவத்தில் காட்சி.  இறைவனின் உடுக்கை தரிசனம்.
6.  தாழ மங்கை :  பசுபதி கோயில் அருகே. ராஜராஜேச்வரி ஸமேத சந்த்ரமௌலீச்வரர்.  இந்திராணி ஷஷ்டியில் வழிபட்ட தலம்.  நாதசர்மா, அனவித்தை தம்பதியருக்கு அம்பாள் தெரிவை பருவத்தில் காட்சி.  இறைவனின் பிறை தரிசனம்.
7.  புள்ள மங்கை : பசுபதி கோயிலிலிருந்து 1 கி. மீ.  (வெள்ளாள பசுபதி கோயில்).  சௌந்தர நாயகி ஸமேத ஆலந்துறை நாதர்.  சாமுண்டி சப்தமியில்  நாதசர்மா, அனவித்தை தம்பதியருக்கு அம்பாள் பேரிளம்பெண் பருவத்தில் காட்சி.  இறைவனின்  நாக தரிசனம்.
திருவையாறு போலவே இங்கும் பங்குனி மாத சித்திரை நட்சத்திரத்தில் சப்தஸ்தான உற்சவம் நடைபெறுகிறது.   நாதசர்மா, அனவித்தை தம்பதியர், இவ்வேழூர் தரிசனம் செய்து மாயூரத்தில், கௌரி மயூர நாதரை வழிபட்டு சிவபதம் அடைந்தனர்.  இவ்வாறு நேத்ரம், கங்கை, திரிசூலம், திருவடி, உடுக்கை, பிறை, நாகம் என்னும் இறைவனின் எல்லா தரிசனமும் பெறுவது சர்வேச்வர தரிசனம் ஆகும்.