Saturday 23 May 2020

தீண்டாத் திருமேனி

தமிழ் நாட்டின் தலை நகராம் சென்னையில் ஓடும் கூவம் நதி மிகவும் புகழ் படைத்த ஒன்றாகும்.  இந்த நதி திருவள்ளூர் மாவட்டத்தில் பேரம்பாக்கம் அருகிலுள்ள திருவிற்கோலம் என்று தேவார பெயர் பெற்ற கூவம் என்னும் ஊருக்கருகில் ஏரியில் கிணற்றில் சுரந்து புறப்பட்டு சென்னை நகரில் கடலில் கலக்கிறது. கூபம் என்னும் ஸம்ஸ்கிருதச் சொல்லுக்கு கிணறு என்று பொருள். அதுவே தமிழில் கூவம் என மருவி வழங்கப்படுகிறது.  கூவம் என்னும் ஊரிலிருந்து வருவதால் நதியும் கூவம் என்றே அழைக்கப் படுகிறது. அப்படிப்பட்ட கூவம் என்னும் ஊரிலுள்ள சிவன் கோவில் திருவிற்கோல நாதர் ஆலயம் ஆகும்.  

தொண்டை நாட்டு பாடல் பெற்ற 32 தலங்களுள் ஒன்றான இக்கோவில்,  சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில்  உள்ள கடம்பத்தூர் என்ற நிலையத்திலிருந்து 9 கி. மீ. தொலைவில் உள்ளது.   திரிபுரம் எரிக்க சிவன் புறப்பட்டபோது தனது கைவில்லை ஊன்றி நின்ற இடமாதலால் திருவிற்கோலம் என்றழைக்கப்படுகிறது. 
இத்தலத்து இறைவன் 'தீண்டாத் திருமேனி' ஆவார்.  எவரும் தொடக்கூடாத திருமேனி.  பூஜை செய்யும் சிவாச்சார்யரும் லிங்கத்தைத் தொட்டு பூஜை செய்வதில்லை.  கூவம் நதி ஜலமே ஈசனுக்குரிய அபிஷேக ஜலம்.  நதியில் நீரின்றி வறண்ட காலத்தில் இள நீர் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும்.  அர்ச்சகர்கள், கோவிலுக்கு உள்ளே இருக்கும் 'கூபாக்னி தீர்த்தம்' என்ற கிணற்று நீரில் ஸ்னானம் செய்த பிறகே, பூஜையைத் தொடங்குவது வழக்கம்.
உச்சிகால  பூஜையில் அருகிலுள்ள  'பிஞ்சவாக்கம்' என்னும் ஊரிலிருந்து கொண்டு வரப்படும் பசும் பால் மட்டுமே பயன்படுத்தப்படும்.  திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நந்தவனத்துப் பூக்கள் மட்டுமே பூஜையில் உபயோகிக்கப்படும்.  இத்தலத்து இறைவனான லிங்கம், மழை, வெள்ளம் முதலிய காலங்களில் வெளுத்தும், சண்டை முதலிய காலங்களில் சிவந்தும் காட்சி தருவார்.  திருஞானசம்பந்தர் பாடிய தேவாரம் உடையது.     



No comments:

Post a Comment