Thursday 1 December 2022

திருமண வாழ்த்து

அரனவன் இடத்திலே ஐங்கரன் வந்துதான் ஐயவென் செவியைமிகவும்

              அறுமுகன் கிள்ளினா னென்றே சிணுங்கிடவும்

             அத்தன் வேலவனை நோக்கி

விரைவுடன் வினவவே யண்ணனென் சென்னியில் விளங்குகண்      

                                                                                                      எண்ணினனென

              வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ யப்படி

              விகடம் ஏன்செய்தாயென

மருவுமென் கைந்நீள முழமளந்தா னென்ன மயிலவன் நகைத்துநிற்க

               மலையரையன் உதவவரும் உமையவளை நோக்கிநின்

               மைந்தரைப் பாராயெனக்

கருதரிய கடலாடை யுலகுபல வண்டங் கருப்பமாய்ப் பெற்றகன்னி

               கணபதியை யருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்     

              களிப்புடனுமைக் காக்கவே.

 

சிவபிரகாச ஸ்வாமிகள், ஒரு திருமணத்தில் கல்யாண தம்பதிகளை வாழ்த்தும்போது, கயிலையில் நடக்கும் ஒரு காட்சியை விவரித்து, அப்படிப்பட்ட அந்தச் சிவக்குடும்பம் போல உங்களது மணவாழ்க்கையும் சிறக்க வேண்டுமென வாழ்த்துகிறார்.

 

கயிலைமலையில் ஒரு நாள் சிவனின் அருகே, கணபதி சிணுங்கிக் கொண்டே வருகிறான்.  மகனின் வருத்தத்தைப் போக்க, சிவன் அழுகைக்குக் காரணம் கேட்கிறான்.  கணபதியோ, தன் தம்பியின் செய்கையைப் பற்றிப் புகார் தெரிவிக்கிறான்.  ‘அப்பா! அறுமுகன் என் செவியைக் கிள்ளி முறுக்கினான்’ என்கிறான்.   சிவனோ, உடனே, கந்தனைப் பார்த்து இப்படி ஏன் செய்தாய்? என கேட்க,

முருகனோ ‘அண்ணன் என் முகத்திலுள்ள பன்னிரண்டு கண்களையும் தன் தும்பிக்கையால் தொட்டு எண்ணினான். ஆதலால் அவன் செவியைத் திருகினேன்’ என்று பதிலுரைக்கிறான்.

சிவன் விம்மும் கணபதியைப் பார்த்து ‘நீ அப்படி ஏன் கேலி செய்தாய்?’ என்று வினவ, யானைமுகன், குமரன் என் தும்பிக்கையைப் பற்றிக்கொண்டு தன் கையால் எத்தனை முழம் உள்ளது எனக் கணக்கிட்டான் என்று குமரனின் குறும்பை ஈசனிடம் முறையிட்டான்.  சிவன், முருகன் பால் நோக்க, வேறு எதுவும் சொல்லமுடியாத அவன், சிரித்தபடி நின்றிருப்பதைப் பார்த்து, உமையின் கலப்பில்லாமல் தன்னில் தோன்றிய முருகனும் குறும்புக்காரனே என்று தீர்மானித்துக் கொண்டு, உமையிடம் திரும்பி, ‘உன் பிள்ளைகளின் விளையாட்டைப் பார்’ என்று கூறுகிறான்.  உமையோ, கணபதியை அருகே வரும்படி அழைத்து மகிழ்வோடு அணைத்துக் கொள்கிறாள்.  அப்படிப்பட்ட சிவனின் குடும்பம் உங்களைக் காக்கட்டும் என்று சிவபிரகாச ஸ்வாமிகள் வாழ்த்துகிறார்.

உலகில் காணக்கூடியதும், அண்ணனும், தம்பியும் செய்யும் குழந்தைத்தனமானக் குறும்புகளையும், தந்தையாரின் விசாரிப்பும், தாயின் கனிவும் இச்செய்யுளில் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.  பூவுலகில் நிகழும் அன்றாட நிகழ்ச்சிகளைப் பரமனின் இல்லத்திலும் நடப்பதாகக் காட்டிய கவியின் கற்பனைத் திறன் வியக்க வைக்கிறது.  சிவகுமரன் என்றே முருகனின் திரு நாமம்.  ஆனாலும். மூத்தப்பிள்ளையின் அழுகையைக் கண்டு, அதற்கு பரிகாரம் தேடும் சிவனின் செயல், எந்த அப்பாவும் செய்யக் கூடியதே.

அண்ணனும் தம்பியும் மாறி மாறி ஒருவர் மேல் ஒருவர் குறை கூறுவதைக் கேட்ட சிவன், அதற்கு தான் ஒன்றும் செய்யமுடியாது என்றறிந்து, உமையைத் துணைக்கு அழைக்கிறான்.  இதுவும் ஒரு வீட்டில் நடக்கக்கூடியதே.  தன்னால் சமாளிக்க முடியாத நிலையில், கணவன், மனைவியின் உதவியை நாடுவது இயல்பு.  ஆனால், சிவன் உமையை அருகே வா என்று அழைத்திருந்தால், அதில் விசேஷம் ஒன்றுமில்லை.  குறும்பு செய்யும் கழந்தைகளுக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என் சூசகமாகத் தெரிவிக்க ‘நின் மைந்தரைப் பாராய்’ என்கிறான்.

சக்தியும் நடந்த அனைத்தையும் ஊகித்து அறிந்து கொண்டுக் கணபதியை அருகே அழைக்கிறாள். 

வேலவனோ குழந்தை. விநாயகனோ வயதிலும், உருவத்திலும் பெரியவன்.  முருகனால் யானையின் காதைப் பிடித்துத் திருக முடியுமா?  மேலும் சிறியவனான முருகனின் முகத்திலுள்ள மிக மென்மையான கண்களைத் தன் முரட்டுத் துதிக்கையால் எண்ணுவது என்ற வியாஜத்தால், அழுத்தி அழுத்தி துன்புறுத்தியவன் கணபதி.  முருகன் தன் பிஞ்சுக்கரங்களால் கணபதியின் தும்பிக்கையின் நீளத்தை அளந்தாலும் அதனால் கண்பதிக்கு ஏற்பட்ட நஷ்டம் என்ன?  ஆதலால் தான் செய்ததை மறைத்து, முதலில் புகார் சொல்பவனின் வாதம் எடுபடும் என நினைத்து சிவனின் பக்கமாக ஓடி வந்து தம்பி மீது வீண்பழி சுமத்தும் கணபதியின் சுட்டித்தனத்தைக் கண்டுகொண்ட உமை அவனை பக்கத்தில் அழைத்து, அணத்துக் கொள்கிறாள்.  தாய்க்குத் தலைச்சன் பிள்ளையிடமும், தந்தைக்கு கடைசி மகனிடமும் அதிக அன்பு சுரப்பது உலகவழக்கு. 

துஷ்டமகனிடம் தான் தாய்க்கு அதிக அக்கறை இருக்கும்.  தன் பிள்ளையின் மீது ஊரார் சொல்லும் எல்லாக் குற்றங்களும் இட்டு கட்டிக் கூறுபவையாகவே ஒரு தாய் கொள்வாள்.  ஆகையால், உமையமை, சிவசம்பந்தமில்லாமல் தன்னில் தோன்றிய கணபதியை வாரி எடுத்துக் கொள்ள விரும்பினாலும், அவன் பெரிய உருவத்தை எண்ணி, கிட்டத்தில் வரும்படி செய்து மகிழ்கிறாள் கவியின் பா நம்முள் பல கற்பனைகளைத் தூண்டுகிறது.

No comments:

Post a Comment