Friday 2 December 2022

 

தோடுடைய செவியன்

தோடுடைய செவியன் விடையேறி யோர்தூவெண்மதிசூடிக்

காடுடைய சுடலைப்பொடிபூசி யென்னுள்ளங்கவர்கள்வன்

ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்தேத்த அருள்செய்த

பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே.

 

சீர்காழி திருத்தலம்.  பிரம்மபுரீச்வரர் திருக்கோயில்.சிவபாத ஹ்ருதயர் குளிப்பதற்குத் தயாராகிறார்.  குழந்தை ஸம்பந்தனைக் குளத்துப்படிக்கட்டில் உட்கார வைத்துவிட்டு நீரில் இறங்குகிறார்.  பால் மணம் மாறா பாலகன் தந்தை குளிப்பதை வேடிக்கைப் பார்க்கிறான்.  தந்தையோ ‘அகமர்ஷண’ மந்திரம் சொல்லி நீருக்குள் மூழ்க, சிறிது நேரம்,  நீருக்குள் இருக்கும் தந்தையைக் காணாமல், ஸம்பந்தன், ‘அப்பா’ என அழுகிறான்.

 

உலக நாயகியாம் பார்வதி, பரமேஸ்வனுடன் அங்கு வந்து, முலைப்பாலைக் கிண்ணத்தில் ஏந்தி, குழந்தை ஸம்பந்தனுக்குப் புகட்டுகிறாள்.  கடைவாயில் பால் வழிகிறது. பார்வதியும் பரமேஸ்வரனும் திரும்பிச்  செல்கின்றனர்.  சிவபாதஹ்ருதயர், ஸ்நாநத்தை முடித்து விட்டு, கரையேறி வந்து, வாயில் பாலொழுக உட்கார்ந்திருக்கும் ஸம்பந்தனைக் காண்கிறார்.  வியப்போடு ‘உனக்குப் பால் தந்தது யார்?’ என வினவுகிறார்.  ஸம்பந்தன் கோயில் விமானத்தைச் சுட்டிக் காட்டி, ‘தோடுடைய செவியன்………………………’ என்னும் பதிகத்தைப் பாடுகிறான்.  சின்னஞ்சிறு குழந்தை, தண்டமிழ் பாக்களால் சிவனைப் பாடுவதைக் கண்ட சிவபாதஹ்ருதயர் ஆச்சரியமும், மகிழ்வும் எய்துகிறார்.  இங்கு, அப்பாடலின் சிறப்பைக் காண்போம்.

 

எல்லா வேதங்களுக்கும் முதல் ‘ஓம்” எனும் ப்ரணவ மந்திரம்.  ஓம் என்பது அ, உ, ம் என்னும் எழுத்துகளின் சேர்க்கை.  அவற்றுள்ளும் நடுவிலுள்ள ‘உ’ எழுத்து அதிக மகிமை உடையது.  அதையே, இன்றளவும் தமிழ் மக்கள், ‘பிள்ளையார் சுழி’ என்று எதையும் எழுத ஆரம்பிக்கும் போது இடுகின்றனர்.  எல்லா நூல்களுக்கும் ஆரம்பம் என்பது சிறப்பு வாய்ந்தது.  சேக்கிழார், பெரியபுராணம் பாட, சிவனே, ‘உலகெலாம்’ என எடுத்துக் கொடுத்தார் என்பது பெருமை.  திருமுருகாற்றுப்படையும் ‘உலகம் உவப்ப’ என்று உகாரத்துடன் துவங்குகிறது.  வள்ளுவரும் தம் முதல் குறட்பாவிலேயே ‘உலகு’ என்னும் சொல் வரும்படிப் பாடியுள்ளார்.  அபிராமி அந்தாதி பாடிய பட்டரோ, ‘உதிக்கின்ற செங்கதிர்’ என அன்னையின் துதியைத் துவக்குகிறார்.

 

‘தகாரஸ்ய கார்ய ஸித்தி:’ (तकारस्य कार्यसिद्धिः) என்பது ஸம்ஸ்க்ருத சொற்றொடர்.  வெற்றியடைய ‘த’ என்னும்  ஒலியமைப்பை எழுப்புவது நன்மை பயப்பதாகும்.  ஆதிகாவ்யமான ராமாயணத்தை இயற்ற, வால்மீகியும் ‘தபஸ்வாத்யாய நிரதம்’ (तपस्वाध्याय निरतं) என்று, தன் காப்பியத்தை தகாரத்திலேயே ஆரம்பித்தார்.  அதே போல, சுந்தர காண்டத்தில், அனுமன், சீதையைத் தேடிச் சென்று, அவளை இலங்கையில் கண்டான் எனும் பகுதியைக் கூற  ‘ததோ ராவண நீதாயா:’ (ततो रावण नीतायाः)  என்று தகாரத்தை முன்வைத்துப் பாடினார்.  இதனால், ராமாயணத்தின் குறிக்கோளான ராவண வதம் முதலில் சொன்ன தகாரத்தாலும், அனுமன், சீதைக் கண்டு, அவளைத் தேற்றி, மீண்டதாகிய வெற்றி, சுந்தர காண்டத்தினுடைய முதல் சுலோகத்தின் முதல் எழுத்தாகிய தகாரத்தாலும் பெறப்படும்.

மேலோட்டமாக, ராமாயணக்கதையை அறிந்த ஒருவனுக்கு, அதைப் படிக்கும் போது, ராமன் நாடிழந்து, கானிடை துன்பமே பட்டானோ என்னும் எண்ணம் எழும்போது, அவ்வாறில்லை, இராமன், அயோத்திக்கு மீண்டும் வந்து சேர்ந்த பிறகு, அவனுக்குப் பட்டாபிஷேகம் நடந்தது என்பதை சூசகமாய் தெரிவிக்கும் எழுத்து, ‘தபஸ்வாத்யாய நிரதம்’ என்பதிலுள்ள தகாரம் ஆகும்.  அது போலவே, அனுமனின் தலைமையில் தென்திசை நோக்கிச் சென்று, காலகெடுவையும் மீறிய வானர சேனை, சீதையைப் பற்றிய நற்செய்தியுடன் கிஷ்கிந்தையை அடையும் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது ’ ததோ  ராவண நீதாயா:’ என்னும் தொடரிலுள்ள தகாரமே ஆகும்.  எனவே, தகாரம் வெற்றியைத் தரும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது. 

 

சமணர்களை வென்று சைவ நீதி தழைக்க அழுதருளிய ஸம்பந்தர், உமையம்மையின் பாலுண்டு, ஞானஸம்பந்தராக ஆன போது, ஸம்ஸ்க்ருத தகாரத்தின் சிறப்பையும், தமிழின் உகாரத்தின் உயர்வையும் உள்ளடக்கி, தனது முதற்பாடலை, ‘தோ’ என்னும் முதல் எழுத்தால் மொழிகிறார்.

 

பாலைக் கொடுத்தது பார்வதி.  பாலைக் கொடுக்கும்படி செய்தவன் பரமசிவன்.  அதனாலேயே ‘பாலைக் கொடுத்தது யார்?’ என்ற கேள்விக்கு, ஞான ஸம்பந்தர், பரமசிவனே எனப் பதிலளிக்கிறார்.  ஒரு செயலைச் செய்பவனைக் காட்டிலும், அச்செயலைச் செய்விப்பவனுக்கே, அச்செயலில் பொறுப்பு அதிகம் என்பது யாவரும் அறிந்ததே.  பாலைக் கொடுத்த பார்வதியைக் காட்டிலும், பாலைக் கொடுக்கும்படி செய்வித்த பரமசிவனையே அச்செயலுக்கு உரியவனாக கூறுவது மிகவும் பொருத்தமே.

 

இடக்கையால் குழந்தையை ஏந்தி, வலக்கையால் அரவணைத்து, இடப்பக்க முலைப்பால் கொடுப்பது தாய்மார்களின் வழக்கம்.  பாலைக் குடிக்கும் குழந்தை தாயின் முகம் நோக்கிச் சிரிக்கும்.  அப்போது, தாயின் முகத்தின் இடப்பக்கம் குழந்தைக்குத் தெளிவாகத் தெரியும்.  ஞான ஸம்பந்தனுக்கு உமையம்மை பாலூட்டியபோது, அன்னையின் இடது காதிலுள்ள தோடு குழந்தையைக் கவர்ந்தது.  எனவே பாடலின் துவக்கத்தில் தோடு என்னும் சொல் வழங்கப்பட்டது.  ஆயினும் பாட்டுடைப்பொருள் பரமசிவனே அல்லவா?  அம்மையும் அப்பனும் இணைந்த மாதொருபாகன் என்னும் கோலத்தில் இடப்புறக் காதில் தோடு விளங்கும் அன்றோ?  ஆகவே, இதைக் குறிக்கவே, ஞான ஸம்பந்தரால் ‘தோடுடைய செவியன்’ என்று பாடப்பட்டது. 

 

அம்மையின் காதணிக்குச் சிறப்பு உண்டு.  ஊழிக்காலத்தில் ஏனைய தேவர்கள் அழிந்தாலும், பரமேஸ்வரன் தாண்டவம் புரிபவனாய் தனித்து விளங்குவது அன்னையின் காதணியின் சிறப்பால் என்பதைச் சுட்டிக் காட்ட ஆதி சங்கரரும், சௌந்தர்ய லஹரியில், தவ ஜனனி தாடங்க மஹிமா’ (तव जननि ताटङ्क महिमा) என்று கூறுகிறார்.  அத்தகைய காதணியைக் குறித்தே ஞான ஸம்பந்தரின் ‘தோடுடைய’  என்னும் சொல்லாட்சி.

 

குழந்தைக்குக் காட்சி கொடுக்க, சற்றே உயர்ந்த இடத்தில் இருக்கவே, இறைவன் விடையின் மேல் ஏறினான்.  ஆதலால், இறைவனுக்கு, அடுத்த அடைமொழியாக ‘விடையேறி’ என்பது அளிக்கப்பட்டது. முகத்தைப் பார்த்த குழந்தையை, தலையிலுள்ள நிலவு கவர்ந்தது.  ‘ஓர் தூவெண் மதிசூடி’ யென சிவன் துதிக்கப் பெறுகிறார்.  மேலும், வெண்மையான நீறணிந்த நெற்றியைக் குறித்து, ‘காடுடைய சுடலைப் பொடிபூசி’ என்றே புகழ்கிறார்.  இவ்வாறு, தோடு, காளை, சந்திரன், திருநீறு போன்ற பொருட்களின் வெண்மையால், ‘என் உள்ளங்கவர் கள்வன்’ ஆகிறான் எம்பெருமான்.

 

ஞான ஸம்பந்தர், ‘பாலைக் கொடுத்தது யார்? என்ற கேள்விக்கு விடையாக, ‘பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான்’ என இறைவனே என்று பாடல் மூலம் பதிலளிக்கிறார்.  ஆதி சங்கரரும் ‘ த்ரவிட சிசுரபூத் வைஞான ஸம்பந்த மூர்த்தி:’ (द्रविडशिशुरभूत् वैज्ञान संबन्तमूर्त्तिः) என உமையம்மையின் முலைப்பாலின் பெருமயைப் பேசுகிறார்.  முலைப்பாலின் மகிமையாலேயே ஞான ஸம்பந்தர் ‘ ஆணை நமதே’ என தம் பதிகத்தில் உறுதிபடக் கூறுகிறார்.  நாமும், ஞான ஸம்பந்தருடைய பதிகங்களை ஓதி, ‘அவனருளாலே அவன் தாள் வணங்கி’ ‘ஸகல யோக செல்வ மிக்கப் பெரு வாழ்வு’ பெற்று உய்வோமாக !  

No comments:

Post a Comment