Friday 2 December 2022

 

பெண்டாட்டிப் பேச்சு

தன்னிடம் தோற்று ஓடிப்போன சுக்ரீவன் மீண்டும் போருக்கு அழைப்பதைக் கேட்ட வாலி வெகுண்டு எழுந்தான்.  சண்டைக்குப் புறப்படும் வாலியை அவன் மனைவி, தாரை அறிவுரை கூறித் தடுத்தாள். 

‘கோபத்தை விட்டுவிடுங்கள்.  நீங்கள் போருக்குச் செல்வது எனக்கு இஷ்டமில்லை.  முன்னமே போரில் தோற்கடிக்கப்பட்ட சுக்ரீவன், உடனே திரும்பி வந்து போருக்கு அழைக்கிறான் என்றால் அதனுடைய பின்புலத்தை ஆராய வேண்டும். சுக்ரீவன் தகுந்த துணையில்லாமல், இத்தகைய சாகசத்தை செய்ய மாட்டான்.  நம் மகனான அங்கதன் வழியாக நான் அறிந்த செய்தி ஒன்று இருக்கிறது.  தசரதனின் மைந்தர்களான இராமனும், இலக்ஷ்மணனும், சுக்ரீவனுடன் நட்பு பூண்டு இவ்விடம் வந்திருப்பதாக எனக்குத் தெரியவந்துள்ளது. அந்த இராமன்,

निवासवृक्षः साधूनां आपन्नानां परा गतिः ।

आर्तानां संश्रयश्चैव यशसश्चैकभाजनम् ॥

(வாக்மீகி ராமாயணம். கிஷ்கிந்தா காண்டம், ஸர்கம் 15, சுலோகம் 9)

 

‘நல்லவர்களுக்கு கற்பகத் தருவைப் போன்றவர்.  கஷ்டம் அடைந்தவர்களுக்கு  மேலான புகலிடம்.    துயரப்படுபவர்களுக்கு தஞ்சம் அளிப்பவர்.  புகழுக்கு உரியவர்.  இப்படிப்பட்ட இராமனின் துணையோடு, சுக்ரீவன் மீண்டும்  வந்து, போருக்கு அறைகூவல் விடுகிறானென்றால், இப்போது போருக்குச் செல்வது சரியானதன்று.  சுக்ரீவனும் உமது தம்பியே.  எப்படிப்பட்ட நிலையிலும் அவன் உமக்கு உறவினன்.  நம் பக்கம் இருந்தபோதும், எதிர்த்து நின்றபோதும் தம்பி எனும் உறவு விட்டுப்போகாது.

लालनीयो हि ते भ्राता यवीयानेष वानरः ।

तत्र वा सन्निहस्थो वा सर्वथा बन्धुरेव ते ॥

(வாக்மீகி ராமாயணம். கிஷ்கிந்தா காண்டம், ஸர்கம் 15, சுலோகம் 25)

 

ஆகையால், இப்பொழுது சுக்ரீவனுடன் சண்டையிடப் போகிறாயா?  அது உனக்கு நன்மை பயக்குமா?’  என்று தாரை கேட்க. வாலி அவள் அறிவின்றி பேசுவதாக எண்ணி அவளை எள்ளி நகையாடுகிறான்.

‘நானும் என் தம்பியும் யுத்தம் செய்யும் போது, இருவருக்கும் சமமான நிலையைக் கைகொண்டு நிற்பதே தருமம் ஆகும்.  இதை இராமனும் அறிவான்.  ஒரு பக்கம் மட்டும் சார்ந்து நிற்பதை இராமன் ஒருக்காலும் செய்ய மாட்டான்.  தருமம் அறிந்தவனும், நன்றியுள்ளவனுமான இராமன் எப்படி பாவச் செயலைச் செய்வான்?’

 

‘धर्मज्ञश्च कृतज्ञश्च कथं पापं करिष्यति?’

(வாக்மீகி ராமாயணம். கிஷ்கிந்தா காண்டம், ஸர்கம் 16, சுலோகம் 5)

 

இதே குணங்களை உடைய ஒருவரைப் பற்றி, இராமயணத்தின் முதல் ஸர்கத்தில், வால்மீகி நாரதரிடம் கேட்கிறார்.

कोन्वस्किन् सांप्रदं लोके गुण्वान् कश्च वीर्यवान् ।

धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रतः ॥

(வாக்மீகி ராமாயணம். பால காண்டம், ஸர்கம் 1, சுலோகம் 2)

 

‘இராமனோ, தம்பிகளைத் தன்னுயிர்க்கு சமமாக எண்ணுபவன்.  அந்த இராமன் நானும் என் தம்பியும் சண்டையிடுகையில் நடுவே அம்பை எய்துவானோ?

 

‘தம்பியர் அல்லது தனக்கு வேறுயிர்

இம்பரின் இலதென எண்ணி ஏய்ந்தவன்

எம்பியும் யானும் உற்றெதிர்ந்த போரினில்

அம்பிடை தொடுக்குமோ அருளின் ஆழியான்?’

(கம்ப ராமாயணம். வாலிவதைப் படலம், செய்யுள்  34)

 

இராமனின் குணங்களை நன்கு அறிந்தவன் வாலி.  தயையே உரு எடுத்தவன் இராமன், கருணைக் கடல். கிருபா ஸமுத்திரம். முன்னம் தன் மனைவிக்குத் தீங்கிழைத்த காக்கைக்கும் உயிர்பிச்சை அளித்தவன். அவன் எம் போரில் ஒருதலை பட்சமாக, என் மேல் அம்பு விடுவானா என்பது வாலியின் ஐயம்.  பின் நடக்கப் போகும் நிகழ்வை மறைக்க மாட்டாத ஆவலில் கம்பன், வாலியின் வாய்மொழியாக அதைக் கூறுகிறான்.

 

தாரை வாலியை நோக்கி, இராமன் சுக்ரீவன் பக்கம் நின்று உன் உயிரைப் பறிக்க வந்துள்ளான் என்ற போது வாலி, ‘உலகத்து உயிர்கள் எல்லாம் இருவினைகளால் வருந்தி, அதற்கு முடிவைக் காணாத போது, தன் நன்னடத்தையால், தருமத்தை எடுத்துரைத்த இராமனை இகழ்ந்து பேசிய பாவியே!  நீ பெண் என்பதால் உயிருடன் இருக்கிறாய் என்று கடிந்து கூறுகிறான்.

 

‘பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான்’

(கம்ப ராமாயணம். வாலிவதைப் படலம், செய்யுள் 31)

 

மனைவி கூறிய நல்லுரைகளை புறம் தள்ளி சுக்ரீவனோடு யுத்தம் செய்ய சென்ற வாலி, இராமனின் அம்புக்கு இலக்காகி வீழ்ந்தபோது நானும் என் தம்பியும் போர் புரிகையில் இடையில் அம்பு செலுத்தி என்னைக் கீழே விழச் செய்தவன் யாரென அறிய தன் மார்பில் தைத்த அம்பைப் பிடுங்கிப் பார்க்கிறான்.  அதில் பொறித்துள்ளப் பெயரைப் பார்த்தான்.  மூன்று உலகங்களுக்கும் மூல மந்திரத்தை, எவர்க்கும் அவரவர் தன்மையை நல்குவதை, ஏழேழ் பிறவிக்கும் மருந்தை, சிறப்பு மிக்க நாமமான இராம என்னும் பதத்தைக் கண்டான். வாலி விண்ணுலகம் செல்ல, தாரை அந்தச் செய்தி கேட்டு வந்து புலம்புகிறாள்.

 

எப்பொழுதும், உமைபாகனை புத்தம் புதிய மலர்களையிட்டு,பூசனை புரியும் நீ, இந்த வேளையில், எதுவும் செய்யாமல், தரை மீது கிடக்கிறாயே.  நான் காதலில் ஊடும்போது, ஏதேதோ பேசி என் கோவத்தைத் தணிப்பவனே! நான் புலம்புவதைக் கேட்டும் ஏன் வாய் திறந்து பேசாமல் இருக்கிறாய்?  நம் இருவரிடையே காதல் இல்லை.  உன் உள்ளத்தில் நான் இருந்திருந்தால், அந்த அம்பு என்னயும் துளைத்து மரணத்திற்கு இட்டு சென்றிருக்குமே.  அல்லது என் நெஞ்சில் நீ வாழ்ந்தாய் எனில் நான் உயிருடன் இருப்பதால், நீ மாண்டு கிடக்கமாட்டாய்.  ஆதலால், இதுவரை நாம் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றதாகி விட்டது.

 

'செரு ஆர் தோள! நின் சிந்தை உளேன் என்னின்,
மருவார் வெஞ் சரம் எனையும் வவ்வுமால்;
ஒருவேனுள் உளை ஆகின், உய்தியால்;
இருவேமுள் இருவேம் இருந்திலேம்.

(கம்ப. ராமாயணம், தாரை புலம்புறு படலம், செய்யுள் 10)

 

என்ன புலம்பி என்ன? மாண்டவன் மீள்வானா?  ஒருவேளை வாலி தாரையின் பேச்சைக் கேட்டு, இராமனிடம் சரணாகதி அடைந்திருந்தால், இராமாயணத்தின் கதைப்போக்கு வேறு விதமாக இருந்திருக்கும்.  வாலியே, இராவணனை அடக்கி சீதையை மீட்டுத் தந்திருப்பான்.  அனுமனின் பெருமையும், இராமனின் வீரமும் வெளிப்படாது போயிருக்கும்.  அதனால் தானோ என்னவோ வாலி தன் பெண்டாட்டி பேச்சைக் கேட்கவில்லை.

No comments:

Post a Comment