Sunday 1 July 2018

சிறுகரும்பூர்


சிறுகரும்பூர் :  சுந்தர காமாக்ஷி சமேத திரிபுராந்தகேச்வரர்
காஞ்சிபுரத்திலிருந்து காவேரிப்பாக்கம் செல்லும் வழியில், ஓச்சேரி கடந்தவுடன் சிறுகரும்பூர் கிராமம் உள்ளது.  ஈச்வரன் மற்றும் அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. பட்டாபிஷேக கோலம்.  இருவருக்கும் சம அதிகாரம்.  கல்யாணக்கோலம் என்றும் சொல்வதுண்டு. ஈச்வரன்  சந்நிதியில் வலப்பக்கம் பதஞ்ஜலியும் இடப்பக்கத்தில் வியாக்கிரபாதரும் உள்ளனர்.  ஆண், பெண் புருஷா மிருகங்கள்  பூஜை செய்யும் காட்சியும் உள்ளது. தெற்கு கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி விக்கிரஹத்தில், சடையில் 63 லிங்கங்கள் காணப்படுகின்றன. அவை 63 நாயன்மார்களைக் குறிக்கின்றன.   இங்கு ஆதி சங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீ சக்ரம் உள்ளது. ஸ்ரீ வீர பத்ர ஸ்வாமி சிலையில் நெற்றியில் ஒரு சிவலிங்கம் உள்ளது.   வேம்பும் வில்வ மரமும் இணைந்த ஸ்தல வ்ருக்ஷம்.  10 அடி உயரத்தில் மூன்று பிரிவாக திரிசூல வடிவில் காட்சி.
தாமல் :   சொர்ணாம்பிகை சமேத வராகீச்வரர்
விஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களிலும் சிவனை பூஜித்த தலங்கள் காஞ்சிபுரத்தைச் சுற்றி உள்ளன. இது வராக அவதாரத்தில் விஷ்ணு பூஜித்தத் தலம்.  ஹிரண்யாக்ஷனை சம்ஹாரம் செய்த வராகமூர்த்தி, வெறி அடங்காமல் சுற்றி வந்தார். சிவன் வேட ரூபம் தரித்து அம்பினால் வராகத்தை அடித்து, கோரைப் பற்களை ஒடித்து மார்பில் அணிந்து கொண்டார். விஷ்ணுவின் சங்கும் சக்கரமும் இன்றும் சிவலிங்கத்தில் காணலாம்.  பல்லவர் கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக   விளங்கும் இவ்வாலயத்தில் பதினாறு பைரவர்கள், சரபேச்வரர், விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. லிங்கத்தில் சர்ப்ப வடிவம் இருப்பதால் இந்த ஸ்தலம் கேது பரிகார ஸ்தலமாகும்.  இதன் எதிரே நரசிங்கேச்வரர் ஆலயம் உள்ளது.
கீழம்பி : காமாக்ஷி சமேத அம்பிகாபதீச்வரர்
காஞ்சிக்கருகில் உள்ள தலம். காமாக்ஷி தவம் செய்த போது  நந்தவனமாயிருந்த இடம்.  காஞ்சி மடத்தின் 60வது  பட்டம் அத்வைதாத்ம ப்ரகாசேந்திர ஸரஸ்வதி சித்தியான இடம்.  இவர் பகவந்நாம போதேந்திரரின் சீடர். சைத்ர சுத்த த்விதியையில் சமாதி ஆனார்.  கம்பன் வசித்த ஊர்.  ஈசன் அருளால் பிறந்த மகனுக்கு அம்பிகாபதி என பெயரிட்டார்.  ஸ்தல வ்ருக்ஷம் வில்வம்.
திருப்பனங்காடு :  அம்ருதவல்லி சமேத தாலபுரீச்வரர்
அகஸ்தியரும் புலஸ்தியரும் பூஜை செய்த தலம்.  க்ருபாநாயகி சமேத க்ருபாநாதேச்வரர் திருக்கோயிலும் உள்ளது.  சுந்தரர் பதிகம் பாடிய தலம்.  சுந்தரருக்கு கட்டமுது தந்த இடம். பக்கத்தில் சுனை உள்ளது.  அகஸ்தியர் பூஜை செய்ய ஏற்படுத்திய ஜடா கங்கா தீர்த்தம்.  பனம் பழம்  நைவேத்யம் செய்யப்படுகிறது. இவ்வாலயத்தில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் திருப்பணி செய்திருக்கின்றனர்.  சிற்பக் கலைக்கோர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. வாலி சுக்ரீவன் யுத்தம் செய்ய இராமன் மறைந்திருந்து அம்பு விடும் காட்சி சிலையாய் வடிக்கப்பட்டுள்ளது.  இதில் இராமன் இருக்கும் இடத்தில் நின்று பார்த்தால் வாலியைப் பார்க்க முடியும்.  ஆனால் வாலிசிலையின் பக்கத்திலிருந்து பார்த்தால் இராமன் தெரிய மாட்டான்.  கஜப்ருஷ்ட விமானம்.  பக்கத்தில் கோட்டை முனீச்வரர் ஆலயம் உள்ளது.  ஆண் மற்றும் பெண் பனை மரங்கள் உள்ளன.
மாகறல்  :  திரிபுவன நாயகி சமேத மாகறலீச்வரர்
ஞான சம்பந்தர் பாடிய தலம். தூங்கானை மாடம்.  ராஜேந்திர சோழன் தினமும் பலாப்பழம் நைவேத்யம் செய்த திருக்கோயில்.  உடும்பு வடிவில் காட்சி தந்த ஈசன் புற்றில் மறைந்த இடம். ஈசன் திருமேனி உடும்பு வடிவில் உள்ளது.
திருப்புலிவனம் :  அம்ருத குசாம்பா சமேத வ்யாக்ரபுரீச்வரர்
உத்திரமேரூரிலிருந்து 3 கி. மி. பராந்தக மன்னன் வந்த போது வ்யாக்ரபாதர்  ஈசனைக் கட்டிக் கொண்டார்.  சிவலிங்கத்தில் புலிநக குறிகள் உள்ளன.  ஈசன் ஜடா முடியுடன் காணப்படுகிறார்.
செவிலிமேடு : லக்ஷ்மி நரசிம்ஹர்
பல்லவ மன்னனின் செவிலித்தாய் வசித்ததாலும், செவ்வல்லி மலர்கள் அதிகம் பூத்திருந்ததாலும் செவிலிமேடு என்ற பெயர்.  1200 வருடங்கள் பழமையானது. உத்சவர் சௌந்தர்ய வரதர்.  முகம்மதியர் படையெடுப்பின் போது காஞ்சி வரதராஜர் சுரங்கப்பாதை வழியாக வந்து தங்கியிருந்த இடம். சித்திரா பௌர்ணமியன்று வரதராஜப்பெருமாள் இந்தக் கோயிலுக்கு வருகிறார்.  இராமானுஜர் வரதராஜப்பெருமாளின் திருமஞ்சனத்திற்காக தண்ணீர் கொண்டு வந்த 'சாலைக்கிணறு' இங்குள்ளது.   பக்கத்தில் 'நடவாவி கிணறு உள்ளது.
திருப்புட்குழி :  மரகதவல்லி சமேத விஜய ராகவ பெருமாள்
காஞ்சிபுரத்தை அடுத்த பாலு செட்டி சத்திரம் அருகில்.  சீதையை அபகரிக்கும் போது இராவணனுடன் போரிட்ட ஜடாயுவுக்கு இராமன் இறுதிக்கடன் செய்த தலம்.  சிதையின் நெருப்பு வெப்பத்தால் ஸ்ரீதேவி இடப்புறமும் பூதேவி வலப்புறமும் மாறிய இடம்.  ஜடாயுவிற்கு தர்ப்பணம் செய்ய இராமன் அம்பினால் ஏற்படுத்திய தீர்த்தம் ஜடாயு தீர்த்தம்.  குழந்தையிலாப் பெண்கள் மரகவல்லி தாயாரின் சந்நிதியில் தரும்  வறுத்த பயறை மடியில் கட்டிக்கொண்டு இரவில் கோயிலில் தங்குகின்றனர்.  மறுநாள் வருத்தப்பயறு முளைவிட்டிருக்கும்.  விரதமிருந்த பெண்கள் கருவுற்று மக்கட்செல்வம்  அடைகின்றனர்.

ஸ்ரீசரணம் அன்பர்கள் 01.07.2018 அன்று மேலே கண்ட ஆலயங்களைத் தரிசித்த நிகழ்வை நினைவு கூர்ந்து மகிழலாம்.