Friday 2 December 2022

 

ஆசிரியர்களின் திறன்மேம்பாடு

(23.08.2022 அன்று வித்யாலய ப்ரவேசத்தின் அங்கமாகக், குடியாத்தம், அம்பாலால் ஜெயின் ஸரஸ்வதி வித்யாலயாவில் நிகழ்த்திய உரை).

1. ஆசிரியர் என்பவர் தேசத்தை வளர்ப்பவர். முழுமையாகக் கற்பித்தலும், முறையாகக் கற்பித்தலும், மும்முரமாகக் கற்பித்தலும் அவர்தம் கடமை.

1)  முழுமையாகக் கற்பித்தல் – மாணவன் முழுமையாகத் தெரிந்து

     கொள்ளும் வகையில் கற்பித்தல்.

2)  முறையாகக் கற்பித்தல் – எது முதலில், எது அடுத்தது என்று அறிந்து

     கற்பித்தல்.

3)  மும்முரமாகக் கற்பித்தல் – ஈடுபாட்டுடன் கற்பித்தல்.

ஆசிரியத் தொழில், என்பது வருங்காலத்திய நல்ல குடிமக்களை உருவாக்கும் பணி.  கற்பித்தலோடு, தானும் கற்கும் ஒரு வழி. 

 

2.  ஆசிரியர் என்பவர் கர்மயோகத்தைக் கடைப்பிடிப்பவர்.  பலனில் ஆசையற்று, தன் கடமையைச் செவ்வனே செய்பவர்.  பகவத் கீதா போட்டியில், பங்கு கொண்ட அனைவருக்கும் நிச்சயம் பரிசு உண்டு.  பங்கு பெறுவதே வெற்றி.  இத்தகைய மனப்பாங்கை மாணவரின் மனதில் பதிய வைத்தல் ஆசிரியரின் முதல் கடமை.

 

3.  கல்வியில் சீர்திருத்தம், பாடத்திட்டங்கள், பாடங்கள், மற்றும் பாடம் நடத்தும் வழிமுறைகள், ஆகியவ்ற்றில் செய்யப்படுவதல்ல.  பாடம் மட்டுமே மேன்மையான மாணவர்களைஉருவாக்காது. கல்வி என்பது, ‘மனிதனுக்குள் உள்ள முழுமையை வெளிக்கொணர்தல்’ என்றார் சுவாமி விவேகானந்தர்.  இது சொல்வதற்கு எளிது.  செய்வது கடினம்.  தேசம், ஆசிரியரைச் சார்ந்திருக்கிறது.  ஏனென்றால், அவரே,  தேசத்தினுடைய மேம்பாட்டிற்கான கிரியா ஊக்கி.

 

     4.  தேசம் மேம்பட, நமது கல்வி திட்டத்தில், ஆசிரியர்களின் அறிவு, கற்பிக்கும் திறன், மற்றும் ஒழுக்கத்தை நிலைநாட்ட வேண்டும்.  ஆசிரியர், பாடத்தை நடத்துபவரல்ல.  மாணவர்கள், தேசத்தின் நவீன சிற்பிகள் எனத் தகவமைப்பதே ஆசிரியர் நோக்கம்.  பாடத்தை மட்டும் நடத்தும் ஆசிரியர், மாணவனை, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவனாகச் செய்து வெற்றி பெறும் வழியைக் காட்டலாம்.  ஆனால்,  நல்ல ஆசிரியர்,  மாணவனின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில், தனது கடமையைத் திறம்படச் செய்தவர் ஆவார்.

 

5. ஆசிரியர், மாணவர்களூக்கு, ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து, மாணவர்களின் இளவயதிலேயே, அவர்கள் மனம் பலதிசைகளில் செல்லாது, குவிந்த நோக்குடன் லட்சியத்தை அடையச் செய்பவர்.  இது நடக்காத வரை, மாணவ்ர்களின் உள்ளம், வெளிக்கவர்ச்சிகளில் ஈடுபட்டு அழியும்.  இந்தக் கொலைக்கு நாம் உடந்தையாக இருக்கக் கூடாது.  மாணவர்கள், தகுதியற்றவ்ர் பின் செல்லாதவாறு தடுக்கும் திறமையை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.  ஆசிரியர்கள், இந்த நோக்கத்திற்காகவே பயிற்சி பெறுகின்றனர்.  பெற்ற பயிற்சியை நடைமுறைப்படுத்தாமல் இருத்தல் பாவமல்லவா? 

 

6.  என் பள்ளி நாள்களில், எனக்குச் சின்னஞ்சிறு வயதில் பாடம் சொல்லித் தந்த ஸ்ரீமதி ஜெயலட்சுமியை, இன்றும், என் அறுபதாம் வயதிலும், நினைத்துப் பார்க்கிறேன்.  மிகச் சிறிய வயதில், எனக்குக் கல்வியை அறிமுகம் செய்த, ஆசிரியரின் நட்பான அணுகுமுறையும், ஒழுக்கமும், கல்வியின் பால் மாணவர்களுக்கு ஈடுபாட்டை வளர்த்தலும் ஆகிய குணங்கள், வளர்ந்த பின்னரும், அவரை, மறக்கவொண்ணாப் பெண்மணியாகச் செய்து விட்டன.

 

7.  பதின்ம வயதுகளில், கற்பித்த பல ஆசிரியர்களை நினவுகூறுகிறேன்.  அவர்தம் பெயரும், அவர்கள் வகுப்பெடுத்த முறையும், அவர்கள் கூறிய அறிவுரைகளும் என்றென்றும் போற்றத்தக்கவை.  ஓர் ஆசிரியர், தம் ஆசிரியரை தனக்கு உதாரணமாகக் கொள்ளத் தகும்.  ஆசிரியர், தன் மாணவனின் படிப்பிற்கும், அதற்கும் மேலாக, மாணவரின் குண மேம்பாட்டின் வளர்ச்சிக்கும் உறுதுணையானவர்.  மாணவரை நல்லகுடிமகனாக வடித்தெடுப்பதே ஆசிரியர் தொழில்.  நம் எல்லோருடைய நல்ல குணங்களுக்கும், நல்லொழுக்கத்திற்கும் நம் ஆசிரியரே காரணம்.    எளிய வாழ்க்கையும், ஆழ்ந்த புலமையும், கற்றதை மற்றவர்க்கு எடுத்துச் சொல்லும் திறமையும் நமக்குப் பெருமை தருபவை.

 

8.  மாணவரின் வளர்ச்சி, ஆசிரியரின் வளர்ச்சியைப் பொறுத்தே அமையும்.  ஆதலால், ஆசிரியர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்வது நம் முன்னே முதலில் நிற்கும் எதிர்பார்ப்பு ஆகும்.  தானும் வளர்ந்து,  மாணவரையும் வளரச் செய்பவரே நல்லாசிரியர்.  மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ள மாணவனையும் உயர்த்துவதே ந்ம் லட்சியம்.

 

9.  ஸம்ஸ்க்ருத ச்லோகம் ஒன்று, அன்னை பார்வதியைப் பற்றி,

‘ஸ்வயம் பஞ்சமுக: புத்ரௌ கஜானனஷடானனௌ ।

 திகம்பர: கதம் ஜீவேத் அன்னபூர்ணா ந சேத் க்ருஹே ॥‘ என்று கூறுகிறது.  இதன் பொருள்: பரமசிவனுக்கு ஐந்து முகங்கள்.  அவர் பிள்ளைகளான விநாயகருக்கு யானை முகம், முருகனுக்கு ஆறுமுகங்கள்.  பரமசிவன் ஆடையுமில்லாத திகம்பரர், ஏழை.  இப்படிப்பட்டவர்களுக்கு, வயிறார உணவு எப்படிக் கிடைக்கும்?  வீட்டில் அன்னபூரணியாகிய அன்னையிருக்கக் கவலையில்லை.  அவள், தன் திறமையை, பெயரின் மூலமாகவே வெளிப்படுத்துகிறாள்.  வாரி வழங்கும் வள்ளலாக, அன்னபூரணி திகழும்போது, சாப்பாட்டிற்கு என்ன குறை? மற்றவர்கள், திறமை குன்றியவர்களாக இருந்தாலும், ஒருவன், தன் செயல்பாட்டால், அக்குறைகளெல்லாம் ஒழியும்படிச் செய்ய முடியும் என்பதே இந்தச் சுலோகத்தின் துணிபு.

நாமும், அன்னபூரணியாக, மாணவரின் கல்வியையும், ஒழுக்கத்தையும் ஓங்கச் செய்து, அவர்களை மேம்படச் செய்வோமாக.

 

பாரதியாரின் கண்ணோட்டத்தில் கல்வி

பண்டைய பாரத மணித் திருநாட்டில் கல்விக்கே முக்கியத்துவம் தரப்பட்டது.  ‘எது விடுதலையைத் தருமோ அதுவே கல்வி’ என்பது பாரதியர்களின் திடமான நம்பிக்கை.  ஔவையாரும், ‘இளமையில் கல்’ என்று கல்வி கற்பதற்கு உரிய பருவமாக இளமையைக் கூறினாள்.  தந்தை சான்றோனாக்க வேண்டும், அதற்குரிய சூழலை மன்னன் ஏற்படுத்த வேண்டும் என்பது பொன்முடியார் என்னும் புறநானூற்றுப் புலவரின் விருப்பம்.  அக்காலத்தில், கல்வி பரவலாகவும், உயர்தரம் வாய்ந்ததாகவும் இருந்தது.  பெண்டிரும் கல்வியில் சிறந்து விளங்கிய நிலை, சங்க காலத்தில் ஐம்பதுக்கும் அதிகமான பெண்பாற்புலவர்கள் இருந்த செய்தியால் பெறப்படும்.  ‘ஓராண் ஒருவழி’ என்ற முறையில், அனைவரும் தத்தமக்குரிய கல்வியைப் பெற்றனர்.  பாடத்தோடு, செயல்முறைக் கல்வியும் பயிற்றுவிக்கப்பட்டது.  ஒரே இடத்தில் பற்பலக் கல்வியை கற்கவும் வாய்ப்பு இருந்தது. 

கடந்த நூற்றாண்டில், சென்னை மாகாணத்தில் மட்டும், 12,000 க்கும் மேற்பட்ட ‘திண்ணைப் பள்ளிகள்’ இருந்ததாக, மாகாண ஆளுநரான தாமஸ் மன்ரோ காலத்தியக் கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது.  இதன் பின்னர், ‘பள்ளி’ என்ற நிறுவனமும், அதில் மேலை நாட்டுக் கல்வி முறையில் கற்பித்தலும் புகுந்தது.  கல்வி பயில முடியாத சகோதரனின் நிலை கண்டு வருந்திய பாரதியார், தமது ‘வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள்’ என்னும் பாடலில்,

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

 ஆலயம் பதினாயிரம் நாட்டல்……….

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்று புண்ணியம் விழைவோர் செய்ய வேண்டியதாக, ஏழைப்பிள்ளைக்குக் கல்வி அளிக்கச் சொல்கிறார். 

 

வயிற்றுக்கு உணவும், மனதிற்கு உணர்வும், வாழ்வில் ஏற்றமும் தருவது கல்வி.

ஆங்கிலக் கல்விக் கூடங்களில், கற்பிக்கப் பெறும் கல்வி, பாரதிய பண்புக்கு ஒவ்வாதது என்பது பாரதியின் எண்ணம்.  கற்கும் கல்வியின் பொருள் இன்னது என அறிந்து கொள்ளாமல், அயல் மொழி மோகத்தில் சிக்கி, பாரத நன்னாட்டு மக்கள் உழல்வதைக் கண்டு வெறுத்தார்.  ஆங்கிலப் பயிற்சி பெறும் மாணவர்கள், கம்பன், காளிதாசன், திருவள்ளுவர் போன்ற உள்நாட்டுக் கவிகளின் பாக்களை அறிய மாட்டார்கள்.  பாஸ்கராசார்யார், பாணினி முதலானப் பெரியோரின் மேதைமையைப் பாராட்ட மாட்டார்கள்.  சிவாஜி, சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வீரத்தைப் போற்றமாட்டார்கள்.  இதில் அவர்களுடைய தவறு ஒன்றுமில்லை.  கற்ற கல்வி, மேற்கண்ட விஷயங்களைப் பற்றி போதிக்காததால், அறியாமையால் அவ்விதம் நடந்து கொள்கிறார்கள்.

 

பாரத நாட்டில் நிலவிய கல்விச் சூழலைக் கண்டு, மனம் வெதும்பிய பாரதியார், தமது சுயசரிதையில்,

‘பேடிக் கல்விப் பயின்றுழல் பித்தர்கள்’ என்று அயல் மொழி வழியில் கல்வி பயில்பவரை, ‘பேடிகள்’ எனச் சாடுகிறார்.  கல்வியை அயல் மொழியில் படிப்பதை விட தாய்மொழியில் கற்றால் தெளிவு பிறக்கும். புதியவை படைக்கத் தோன்றும்.  நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரின் மொழியில், அவர் தந்த கல்வித் திட்டத்தின்படி, இந்த மண்ணுக்குப் பயன் தராத கல்வியைக் கற்பது பாரதியின் உள்ளத்துக்கண் தவிப்பையும் எரிச்சலையும் தந்தது.

 

ஆயினும், பாரதி, பிற்காலத்தில், தன் கண்ட கனவு நிறைவேறும் என்னும் உறுதியுடன்,

‘வாழி கல்வி செல்வம் எய்தி

 மனம் மகிழ்ந்து கூடியே

 மனிதர் யாரும் ஒருநிகர்

 சமானமாக வாழ்வமே’ என்று பாடுகிறான்.  பாரதியின் கனவை நனவாக்க, நாம் எல்லோரும் முயல்வோமாக!

 

பெண்டாட்டிப் பேச்சு

தன்னிடம் தோற்று ஓடிப்போன சுக்ரீவன் மீண்டும் போருக்கு அழைப்பதைக் கேட்ட வாலி வெகுண்டு எழுந்தான்.  சண்டைக்குப் புறப்படும் வாலியை அவன் மனைவி, தாரை அறிவுரை கூறித் தடுத்தாள். 

‘கோபத்தை விட்டுவிடுங்கள்.  நீங்கள் போருக்குச் செல்வது எனக்கு இஷ்டமில்லை.  முன்னமே போரில் தோற்கடிக்கப்பட்ட சுக்ரீவன், உடனே திரும்பி வந்து போருக்கு அழைக்கிறான் என்றால் அதனுடைய பின்புலத்தை ஆராய வேண்டும். சுக்ரீவன் தகுந்த துணையில்லாமல், இத்தகைய சாகசத்தை செய்ய மாட்டான்.  நம் மகனான அங்கதன் வழியாக நான் அறிந்த செய்தி ஒன்று இருக்கிறது.  தசரதனின் மைந்தர்களான இராமனும், இலக்ஷ்மணனும், சுக்ரீவனுடன் நட்பு பூண்டு இவ்விடம் வந்திருப்பதாக எனக்குத் தெரியவந்துள்ளது. அந்த இராமன்,

निवासवृक्षः साधूनां आपन्नानां परा गतिः ।

आर्तानां संश्रयश्चैव यशसश्चैकभाजनम् ॥

(வாக்மீகி ராமாயணம். கிஷ்கிந்தா காண்டம், ஸர்கம் 15, சுலோகம் 9)

 

‘நல்லவர்களுக்கு கற்பகத் தருவைப் போன்றவர்.  கஷ்டம் அடைந்தவர்களுக்கு  மேலான புகலிடம்.    துயரப்படுபவர்களுக்கு தஞ்சம் அளிப்பவர்.  புகழுக்கு உரியவர்.  இப்படிப்பட்ட இராமனின் துணையோடு, சுக்ரீவன் மீண்டும்  வந்து, போருக்கு அறைகூவல் விடுகிறானென்றால், இப்போது போருக்குச் செல்வது சரியானதன்று.  சுக்ரீவனும் உமது தம்பியே.  எப்படிப்பட்ட நிலையிலும் அவன் உமக்கு உறவினன்.  நம் பக்கம் இருந்தபோதும், எதிர்த்து நின்றபோதும் தம்பி எனும் உறவு விட்டுப்போகாது.

लालनीयो हि ते भ्राता यवीयानेष वानरः ।

तत्र वा सन्निहस्थो वा सर्वथा बन्धुरेव ते ॥

(வாக்மீகி ராமாயணம். கிஷ்கிந்தா காண்டம், ஸர்கம் 15, சுலோகம் 25)

 

ஆகையால், இப்பொழுது சுக்ரீவனுடன் சண்டையிடப் போகிறாயா?  அது உனக்கு நன்மை பயக்குமா?’  என்று தாரை கேட்க. வாலி அவள் அறிவின்றி பேசுவதாக எண்ணி அவளை எள்ளி நகையாடுகிறான்.

‘நானும் என் தம்பியும் யுத்தம் செய்யும் போது, இருவருக்கும் சமமான நிலையைக் கைகொண்டு நிற்பதே தருமம் ஆகும்.  இதை இராமனும் அறிவான்.  ஒரு பக்கம் மட்டும் சார்ந்து நிற்பதை இராமன் ஒருக்காலும் செய்ய மாட்டான்.  தருமம் அறிந்தவனும், நன்றியுள்ளவனுமான இராமன் எப்படி பாவச் செயலைச் செய்வான்?’

 

‘धर्मज्ञश्च कृतज्ञश्च कथं पापं करिष्यति?’

(வாக்மீகி ராமாயணம். கிஷ்கிந்தா காண்டம், ஸர்கம் 16, சுலோகம் 5)

 

இதே குணங்களை உடைய ஒருவரைப் பற்றி, இராமயணத்தின் முதல் ஸர்கத்தில், வால்மீகி நாரதரிடம் கேட்கிறார்.

कोन्वस्किन् सांप्रदं लोके गुण्वान् कश्च वीर्यवान् ।

धर्मज्ञश्च कृतज्ञश्च सत्यवाक्यो दृढव्रतः ॥

(வாக்மீகி ராமாயணம். பால காண்டம், ஸர்கம் 1, சுலோகம் 2)

 

‘இராமனோ, தம்பிகளைத் தன்னுயிர்க்கு சமமாக எண்ணுபவன்.  அந்த இராமன் நானும் என் தம்பியும் சண்டையிடுகையில் நடுவே அம்பை எய்துவானோ?

 

‘தம்பியர் அல்லது தனக்கு வேறுயிர்

இம்பரின் இலதென எண்ணி ஏய்ந்தவன்

எம்பியும் யானும் உற்றெதிர்ந்த போரினில்

அம்பிடை தொடுக்குமோ அருளின் ஆழியான்?’

(கம்ப ராமாயணம். வாலிவதைப் படலம், செய்யுள்  34)

 

இராமனின் குணங்களை நன்கு அறிந்தவன் வாலி.  தயையே உரு எடுத்தவன் இராமன், கருணைக் கடல். கிருபா ஸமுத்திரம். முன்னம் தன் மனைவிக்குத் தீங்கிழைத்த காக்கைக்கும் உயிர்பிச்சை அளித்தவன். அவன் எம் போரில் ஒருதலை பட்சமாக, என் மேல் அம்பு விடுவானா என்பது வாலியின் ஐயம்.  பின் நடக்கப் போகும் நிகழ்வை மறைக்க மாட்டாத ஆவலில் கம்பன், வாலியின் வாய்மொழியாக அதைக் கூறுகிறான்.

 

தாரை வாலியை நோக்கி, இராமன் சுக்ரீவன் பக்கம் நின்று உன் உயிரைப் பறிக்க வந்துள்ளான் என்ற போது வாலி, ‘உலகத்து உயிர்கள் எல்லாம் இருவினைகளால் வருந்தி, அதற்கு முடிவைக் காணாத போது, தன் நன்னடத்தையால், தருமத்தை எடுத்துரைத்த இராமனை இகழ்ந்து பேசிய பாவியே!  நீ பெண் என்பதால் உயிருடன் இருக்கிறாய் என்று கடிந்து கூறுகிறான்.

 

‘பிழைத்தனை பாவி உன் பெண்மையால் என்றான்’

(கம்ப ராமாயணம். வாலிவதைப் படலம், செய்யுள் 31)

 

மனைவி கூறிய நல்லுரைகளை புறம் தள்ளி சுக்ரீவனோடு யுத்தம் செய்ய சென்ற வாலி, இராமனின் அம்புக்கு இலக்காகி வீழ்ந்தபோது நானும் என் தம்பியும் போர் புரிகையில் இடையில் அம்பு செலுத்தி என்னைக் கீழே விழச் செய்தவன் யாரென அறிய தன் மார்பில் தைத்த அம்பைப் பிடுங்கிப் பார்க்கிறான்.  அதில் பொறித்துள்ளப் பெயரைப் பார்த்தான்.  மூன்று உலகங்களுக்கும் மூல மந்திரத்தை, எவர்க்கும் அவரவர் தன்மையை நல்குவதை, ஏழேழ் பிறவிக்கும் மருந்தை, சிறப்பு மிக்க நாமமான இராம என்னும் பதத்தைக் கண்டான். வாலி விண்ணுலகம் செல்ல, தாரை அந்தச் செய்தி கேட்டு வந்து புலம்புகிறாள்.

 

எப்பொழுதும், உமைபாகனை புத்தம் புதிய மலர்களையிட்டு,பூசனை புரியும் நீ, இந்த வேளையில், எதுவும் செய்யாமல், தரை மீது கிடக்கிறாயே.  நான் காதலில் ஊடும்போது, ஏதேதோ பேசி என் கோவத்தைத் தணிப்பவனே! நான் புலம்புவதைக் கேட்டும் ஏன் வாய் திறந்து பேசாமல் இருக்கிறாய்?  நம் இருவரிடையே காதல் இல்லை.  உன் உள்ளத்தில் நான் இருந்திருந்தால், அந்த அம்பு என்னயும் துளைத்து மரணத்திற்கு இட்டு சென்றிருக்குமே.  அல்லது என் நெஞ்சில் நீ வாழ்ந்தாய் எனில் நான் உயிருடன் இருப்பதால், நீ மாண்டு கிடக்கமாட்டாய்.  ஆதலால், இதுவரை நாம் சேர்ந்து வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமற்றதாகி விட்டது.

 

'செரு ஆர் தோள! நின் சிந்தை உளேன் என்னின்,
மருவார் வெஞ் சரம் எனையும் வவ்வுமால்;
ஒருவேனுள் உளை ஆகின், உய்தியால்;
இருவேமுள் இருவேம் இருந்திலேம்.

(கம்ப. ராமாயணம், தாரை புலம்புறு படலம், செய்யுள் 10)

 

என்ன புலம்பி என்ன? மாண்டவன் மீள்வானா?  ஒருவேளை வாலி தாரையின் பேச்சைக் கேட்டு, இராமனிடம் சரணாகதி அடைந்திருந்தால், இராமாயணத்தின் கதைப்போக்கு வேறு விதமாக இருந்திருக்கும்.  வாலியே, இராவணனை அடக்கி சீதையை மீட்டுத் தந்திருப்பான்.  அனுமனின் பெருமையும், இராமனின் வீரமும் வெளிப்படாது போயிருக்கும்.  அதனால் தானோ என்னவோ வாலி தன் பெண்டாட்டி பேச்சைக் கேட்கவில்லை.

 

கவலையுற்ற நெஞ்சம்

தனக்கு இராமனால் வாலியை வதைத்து அளிக்கப்பட்ட அரசை ஆண்டுகொண்டு சுகபோகத்தில் ஆழ்ந்திருந்தான் சுக்ரீவன்.  தான் கொடுத்த வாக்குறுதியை மறந்தான்.  வானரர்களைக் கொண்டு, சீதையைக் கண்டுபிடிப்பதாகச் சொன்ன சுக்ரீவன், இதுநாள் வரையில் மனைவியைப் பிரிந்து, உயிருக்குப் பயந்து காட்டிலும் மேட்டிலும் அலைந்த நிலையைச் சிறிதும் எண்ணவில்லை. அவன், தன் அண்ணியும்,   வாலியின் மனைவியான தாரையையும் தன் மனையாட்டி ஆக்கி, அனுமன் போன்ற நல்ல அமைச்சர்கள் இருக்க, தான் அரசன் என்ற நினைவின்றி, எப்பொழுதும் மதுவில் மூழ்கிக் கிடந்தான்.  உறுதியளித்த நான்கு மாதங்கள் கடந்த பின்னும்,  கார்காலம் கழிந்த போதும், வானரப்படையை வரவழைக்க எந்த முயற்சியும் செய்வதாக இராமனுக்குத் தெரியவில்லை. 

மனம் வெறுத்த இராமன், லக்ஷ்மணனிடம் தன் மனக்கஷ்டத்தைப் பகிர்ந்து கொண்டான்.  ‘மழைக்காலத்தில் சீதையில்லாமல் மிகவும் வருந்தினேன்.  என் நெஞ்சம் கவலையுற்றுருக்கிறது.  எப்போது சீதையைக் காண்பேன் என்பது தெரியவில்லை.  சுக்ரீவன் மனைவியைப் பிரிந்த ஒரே காரணத்திற்காக, வாலியைக் கொன்று, அவன் பால் என் கருணையைச் செலுத்தினேன்.  நான் இங்கு மனைவியின்றி துயருற்றிருக்க சுக்ரீவன் அரச இன்பங்களைத் துய்த்து மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறான்.  என் துன்பம் அவனுக்குத் தெரியவில்லை.  முன்னம் அவன் பட்ட துன்பத்தை அல்லவா நான் இப்பொழுது அனுபவிக்கிறேன். 

இராமன் லக்ஷ்மணனிடம், சுக்ரீவனின் மனதில் தைக்கும்படியாக, எடுத்துச் சொல் என்றவுடன், லக்ஷ்மணனின் நெஞ்சம் கவலையுற்றது.  இராமன், லக்ஷ்மணனிடம் சொன்னதாக வால்மீகி,

 

शुभं वा यदि वा पापं यो हि वाक्यमुदीरितम् ।

सत्येन परिगृह्णाति स वीरः पुरुषोत्तमः ॥

(வா.  ராமா., கிஷ்கிந்தா காண்டம், 30 ஸர்கம் 40 ஶ்லோகம்)

 

நன்மையோ, தீமையோ சொன்ன சொல் மீறாதவன் உத்தமன், என்று எழுதியுள்ளார்.  இதையே கம்பன்,

 

நன்றி கொன்று அருநட்பினை நார் அறுத்து

ஒன்று மெய்ம்மை சிதைத்து உரை பொய்த்துளான்

கொன்று நீக்குதல் குற்றத்தின் நீங்குமால்

சென்று மற்றவன் சிந்தையைத் தேர்குவாய்.

(கம்ப. ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், கிட்கிந்தைப் படலம், செய்யுள் 3)

 

வால்மீகி ராமாயணத்தில், லக்ஷ்மணன், இராமன் படும் துயர் கண்டு,

 

‘न धारये कोपमुदीर्णवेगात् निहन्मि सुग्रीवम् असत्यम् अद्य’

மேலெழுந்த கோபத்தை அடக்க மாட்டேன்.  வாக்கு தவறிய சுக்ரீவனைக் கொல்வேன் என்கிறான்.  இராமனோ அவனை சாந்தப்படுத்த ‘கோபத்தை வெல்பவனே வீரன்’ என்று சொல்லி அனுப்புகிறான்.  லக்ஷ்மணன் வந்த செய்தி கிஷ்கிந்தைக்குள் பரவியது. 

துணுக்குற்ற தாரையின் மனதில் முன் நடந்தவை நிழலாடின.

முன்னர், இராமன் சுக்ரீவனுடன் சேர்ந்து கிஷ்கிந்தைக்கு அருகே சென்று, சுக்ரீவனை வாலியை சண்டைக்கு அழைக்குமாறு பணிக்கிறார்.  வெளியே வந்த வாலி சுக்ரீவனை நன்கு புடைத்து விரட்டி விடுகிறான்.  இராமனை நம்பி வந்த சுக்ரீவனின் நெஞ்சம் கவலையுற்றது.  அவனுடைய கலக்கத்தைப் போக்கி, இராமன் மீண்டும் சண்டைக்கு போகுமாறு தூண்டுகிறான்.

அவ்வாறு, சுக்ரீவன் மீண்டு வந்ததைக் கேள்விபட்ட வாலியின் மனைவியான தாரையின் நெஞ்சம் கவலையுற்றது.  அவள், வாலிக்கு அறிவரை கூறுகிறாள்.  அதை மதியாமல், வாலி, மற்போர் புரிய வருகிறான்.  இராமனின் அம்பால் வீழ்த்தப்பட்டு கிடக்கிறான்.

இந்த நிலையை அருணகிரிநாதர், ‘மானை விடத்தை’ என்று ஆரம்பிக்கும், திருவண்ணாமலைத் திருப்புகழில், இராமன், வழியிலிருந்த மரங்களின் பின் ஒளிந்திருந்து, மாவீரனான, வாலியின் மார்பில் அம்பு செலுத்தி, தாரையையும் சுக்ரீவனுக்கு உரிமையாக்கியவன் எனப் பாடுகிறார்.

‘சாலை மரத்துப் புறத்தொளித்து அடல்

      வாலி உரத்தில் சரத்தை விட்டொரு

       தாரைதனைச் சுக்ரீவற்கு அளித்தவன்

வாலி, என்மேல் மறைந்திருந்து அம்பு செலுத்தியவன் யார் என தன் மார்பில் தைத்திருந்த சரத்தைப் பிடுங்கிப் பார்க்க, அதில் இராமனின் நாமத்தைக் கண்டான்.  அவன் நெஞ்சம் கவலையுற்றது. அவ்வாறு தன்னை மறைந்திருந்துக் கொல்லக்   காரணம் என்ன என வாலி இராமனிடம் வினவ, இராமன், நீ தம்பியின் மனைவியைக் களவாடியவன்.  உன்னிடம் அதர்மம் தலைவிரித்து ஆடுகிறது.  உன்னை எப்படி கொன்றால் என்ன? என்றான்.  அதற்கு வாலி நாங்கள் குரங்குகள் அல்லவா? மனைவி விஷயத்தில் எங்களுக்கு நியதி இல்லை.  ஆகையால், சுக்ரீவன் மனைவியான ருமையை நான் அடைந்ததில் எந்த தோஷமும் இல்லை என்றான்.  அவன் கூற்றை ஒப்புக்கொண்ட இராமன், நீயோ விலங்கு. விலங்கான உன்னை நேர் நின்று கொல்ல வேண்டியதில்லை.  வேட்டைக்காரன், வேட்டையாடும்போது,  எந்த விலங்கையும் அதன் முன் எதிர்த்து நின்று கொல்லமாட்டான்.  நானும் அவ்வாறே செய்தேன் என்றான்.  இதே கோணத்திலேயே, சுக்ரீவன் வாலியின் மனைவியும் தன் அண்ணியுமான தாரையை மனையாட்டி ஆக்கிக் கொள்ள இராமனிடமிருந்து எந்த எதிர் வினையும் இல்லை. 

 

இவ்வாறு முன் நடந்ததை நினைத்துப் பார்த்த தாரை, தற்போதைய நிலையில் தான் செய்ய வேண்டியதைப் பற்றி ஆலோசிக்கலானாள். வானர கிஷ்கிந்தைக்கு, லக்ஷ்மணன் வந்தபோது, சுக்ரீவனோ மதுபோதையில் மதியிழந்து கிடக்கிறான்.  லக்ஷ்மணனோ, கோபத்துடன் வில்லேந்தி வருகிறான். அங்கதன் சுக்ரீவனுக்கு இதை உரைக்க, மது மயக்கத்திலிருந்த சுக்ரீவன், தன்னிலை மறந்தவனாக அதை உணரவில்லை. அனுமன் முதலானோர், தாரையிடம் சென்று விவரத்தைக் தெரிவிக்கிறார்கள்.  தாரை லக்ஷ்மணனை எதிர்கொண்டு அழைக்க தோழியர் புடைசூழ வருகிறாள். அவள் நிலையை வர்ணிக்கும் கம்பன்,

 

மங்கல அணியை நீக்கி, மணி அணி துறந்து, வாசக்
கொங்கு அலர் கோதை மாற்றி, குங்குமம் சாந்தம் கொட்டாப்

பொங்கு வெம் முலைகள், பூகக் கழுத்தோடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல், நயனங்கள் பனிப்ப நைந்தான்.

(கம்ப. ராமா., கிஷ்கிந்தா காண்டம், கிட்கிந்தைப் படலம், செய்யுள் 51)

 

என்று தாரை மங்களப் பொருட்களை நீக்கி, விதவைக்கோலம் பூண்டு இருந்ததாகக் கூறுகிறான்.  தாரையின் கோலம் லக்ஷ்மணக்குத், தன் தாய்மாரை நினைவூட்டியது. அவன் கோபம் தணிந்தது. அவன் நெஞ்சம் கவலையுற்றது. அவன் வருந்தினான்.  இதே நிகழ்வை, வால்மீகியோ,

 

सा प्रस्खलन्ती मदविह्वलाक्षी प्रलम्बकांचीगुणहेमसूत्रा ।

सलक्षणा लक्ष्मणसन्निधानं जगाम तारा नमिताङ्गयष्टिः ॥

(கிஷ்கிந்தா காண்டம், ஸர்கம் 31, ஶ்லோகம் 52)

என்று தாரையும் மதுவால் சுழலும் கண்களுடனும், தள்ளாட்டத்துடனும் வந்ததாக எழுதியுள்ளார்.  வால்மீகியோ உள்ளதை உள்ளபடி எழுதுவார். கம்பனோ, தமிழ் கூறும் நல்லுலகத்திற்கேற்ப ஆங்காங்கு சிலவற்றை மாற்றி அமைத்துள்ளான்.  அவற்றில் ஒன்று இது.

 

தாரை லக்ஷ்மணனைச் சாந்தப்படுத்த, நீண்ட நாள் கஷ்டப்பட்டதால், சுக்ரீவன், தற்சமயம், கிடைத்திருக்கும் அரச சுகங்களில் ஈடுபாடு உடையவனாக இருப்பதில் பெரியோனான நீ கோபம் கொள்ளலாகாது. 

 

‘न कामतन्त्रे तव बुद्धिरस्ति त्वं वै यथा मयुवशं प्रपन्नः ।‘

(வா. ராமா., கிஷ்கிந்தா காண்டம், 33 ஸர்கம், 55 ஶ்லோகம்)

 

தங்களுக்கு காம இன்பத்தில் நாட்டமில்லை.  ஆகையால், கோபன் கொண்டீர். படை திரட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது.  காலதாமதத்தைப் பொறுத்து அருள வேண்டும்.  இப்போதே சுக்ரீவனின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்கிறோம்.  உமது வார்த்தைகளைக் கேட்க, அவர் எப்பொழுதும் சித்தமாக இருக்கிறார்.

 

சுக்ரீவனின் அரசவையை அடைந்த லக்ஷ்மணன், நீ செய்நன்றி கொன்றவன். எல்லாக் குற்றங்களுக்கும் பரிகாரமாகப் பிராயச்சித்தம் விதிக்கப்பட்டிருக்கிறது.  ஆனால், செய்நன்றி மறந்தவனுக்கு இல்லை.

 

‘निष्कृरिर्विहिता सद्भिः कृतघ्ने नास्ति निष्कृतिः ।

(வா. ராமா., கிஷ்கிந்தா காண்டம், 34 ஸர்கம்,12 ஶ்லோகம்)

 

இதைக் கேட்ட சுக்ரீவனின் நெஞ்சம் கவலையுற்றது., அவன், காலம் கடந்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்.  சிறியோர் செய்த சிறு  பிழையெல்லாம் பொறுப்பது பெரியோரின் கடன்.  இவ்வுலகில்,

 

‘न कश्चिन्नापराध्यति ।‘

(வா. ராமா., கிஷ்கிந்தா காண்டம், 36 ஸர்கம்,11 ஶ்லோகம்)

 

எந்த ஒருவனும் சிறு பிழையேனும் செய்யாமலிரான்.  என் இந்த சிறிய குற்றத்தை மன்னிப்பாயாக.  இராமன் இருக்குமிடத்திற்குப் போவோம்.  வானரப் படைகளும் அங்கு வந்து சேரும் என்று கூறினான்.  லக்ஷ்மணனின் மனம் இளகியது.  அவன் சுக்ரீவனைப் பார்த்து அரசனான உன்னிடம், இப்படிப்பட்ட கடின வார்த்தைகளைப் பேசியதற்காக வருந்துகிறேன்.  இராமனின் துக்கம் என்னை அப்படி பேச வைத்தது.

 

‘यस्य शोकाभिभूतस्य शृत्वा रामस्य भाषितम् ।

मया त्वं परुषाणि उक्तः तत् च त्वं क्षन्तुम् अर्हसि ॥‘

(வா. ராமா., கிஷ்கிந்தா காண்டம், 36 ஸர்கம்,21 ஶ்லோகம்)

 

இப்படி ஒருவருக்கொருவர், நிலையை எண்ணி, நெஞ்சில் கவலையுற்று, நட்பு பாராட்டினால், இவ்வுலகில் ஸமதர்ம ஸகோதரத்வம் பெருகி எல்லோரும் இன்புற்று இருக்கலாம்.

 

ஊன வில்

தென் திரைக்கடலின் மறுபக்கம், வானர சேனையுடன் இராமன் வந்தான் எனும் செய்தியைக் கேட்ட இராவணன், மந்திரிசபையைக் கூட்டி, மேல் செய்ய வேண்டியவைக் குறித்து ஆலோசனை செய்தான்.  அப்போது விபீஷணன் இராமன் பெருமைகளைக் கூறி அவனோடு விரோதம் வேண்டாம்.  சீதையை விட்டுவிடு எனக் கூறினான்.  அதைக் கேட்ட இராவணன், கை கொட்டி நகைத்து, மானிடர் என்னை வெல்வர் என்று சொன்னது, அவர்கள் பாலுள்ள அச்சத்தலோ அல்லது அன்பினாலோ என்று கேட்டான். 

நான், சிவபெருமான் உறையும் வெள்ளியங்கிரியைத் தூக்கியவன்.  திருமால் எறிந்த சக்ராயுதத்தை மார்பில் ஏற்றியவன்.  அதனால் அவ்விருவரையும் வென்றவன்.

வாலி, சிவனிடமிருந்து எதிர்வரும் எதிரியின் பலத்தில் பாதியைக் கொள்ளும் வரத்தைப் பெற்றவன் என்று அறியாமல், அவன் முன் சென்று அவனால் தோற்கடிக்கப்பட்டேன்.  என் தோல்விக்குக் காரணம் சிவனின் வரமே, வாலியின் பலமல்ல.  இதை முன்னமே அறிந்த காரணத்தால் இராமன், மறைந்திருந்து வாலி மேல் அம்பு எய்தான்.  அப்படிப்பட்ட இராமனின் பெருமைகளாக நீ கூறியவை சிரிப்புக்குரியவை.  அந்த அற்ப மானிடனின் பலத்தை உன்னை அல்லாது வேறு யார் தாம் மதிப்பார்?

ஊனவில்லிறுத்து ஓட்டைமாமரத்துள் அம்பு ஓட்டிக்

கூனி சூழ்ச்சியால் அரசிழந்து உயர்வனம் குறுகி

யானிழைத்திட இல் இழந்து இன்னுயிர் சுமக்கும்

மானிடன் வலி நீ அலாது ஆருளார் மதித்தார்.

இராவணன் இராமனை இகழ்ந்து பேசுகிறான்.  விபீஷணன் எவ்வெவற்றை இராமனின் புகழாகக் கூறினானோ, அவற்றையெல்லாம் இராவணன், இகழ்ச்சியாகக் கூறி நகைக்கிறான். 

‘ஊன வில் இறுத்து’

இராமன் சிவதனுசை முறித்தது பெருமைக்குரியதல்ல.  அந்த வில் ஏற்கனவே உடைந்த வில்.  சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் நடந்த சண்டையில் பழுதுபட்ட சிவதனுசை இராமன் உடைத்ததால் அவனுக்கு என்ன புகழ்?   முன்பு பரசுராமனும்,

‘ஆனம் உடை உமையண்ணலை யந்நாள் உறுசிலைதான்

ஊனமுளது’ (கம்ப ராமாயணம், பால காண்டம், பரசுராமபடலம் (25)) என்று கூறினான்.   ஆனம் (அதிர்ஷ்டம்) உள்ள உமையின் கேள்வனான சிவனின் வில் முன்னாள் சண்டையில் பங்கப்பட்டது.  மேலும்,

‘ஊனவில்லிறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கமன்றால்’ (கம்ப ராமாயணம், பால காண்டம், பரசுராமபடலம் (32)) என்று உடைந்த வில்லை மறுபடி உடைத்த செயல் பெரிதில்லை.  என் கையிலிருக்கும் விஷ்ணுதனுசை நாணேற்றிக் காட்டு என்று இராமனிடம் சவால் விடுத்தான். இங்கு ஆனம் என்ற சொல்லைக் கம்பன் அதிர்ஷ்டம் என்னும் பொருள்பட அமைத்துள்ளான்.  அருணகிரி நாதரும், ‘ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்’ என்று திருவண்ணாமலைத் திருப்புகழில், அன்பர்க்கென்றும் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய முருகனின் ஆறுமுகம் என்னும் செல்வத்தை அருள வேண்டுகிறார்.

 

முன்பே உடைந்த வில்லை இராமன் உடைக்க காரணத்தை ஸ்ரீநிதி ஸ்வாமிகள் தமது மஞ்சு ராமாயணத்தில்

भ्रूभंगमासाद्य मुनीश्वरस्य चापस्य भंगं मन्सा विचार्य ।

आदाय चारोप्य भभञ्ज मध्ये स्वमाश्रमं प्रथमं सहैव ॥

முனீச்வரனான விச்வாமித்திரரின் முகத்தை, வில்லைக் கையில் எடுப்பத்ற்கு முன்னால் இராமன் பார்த்தான்.  விச்வாமித்திரர் புருவத்தை நெரித்துக் காட்டினார்.  புருவநெரிப்பால், இந்த வில் ஒடிந்த வில், ஊனமுற்ற வில், உன்னால் எளிதில் வளைக்கக்கூடியது என்பதை குறிப்பால் உணர்த்துவதாக மனதில் எண்ணி இராமன், வில்லைக் கையில் எடுத்து நாணேற்றி உடைத்தான். வில்லை முறித்ததற்கு இராமனை குறை கூற முடியாது.  குருவின் ஆணையை சிஷ்யன் நிறைவேற்றினான் அவ்வளவே.  மேலும், ஜனகர் வைத்த பந்தயம் வில்லை எடுத்து நாணேற்ற வேண்டுனென்பதே.  ஆனால் இராமன் வில்லை முறித்தானே என்றால் அதற்கும் முனிவரின் புருவ நெரிப்பே காரணம்.  புருவ நெரிப்பு மூலம் வில்லை முறிக்கச் சொல்வதாக எண்ணி இராமன் அவ்வாறு செய்தான் என்பதும் ஒரு சமாதானம். चापस्य भंगं  என்பது முன்னமே உள்ள பழுது என்று கொண்டால், புருவ நெரிப்பு இராமனின் செயல் எளிதில் முடியும் என்று குறிப்பால் உணர்த்தியதாகக் கொள்ளலாம். அல்லது  चापस्य भंगं   இனி இராமன் செய்யப்போகும் வில்லை முறித்தலாகிய செயலைக் குறிப்பதாகக் கொண்டால், இராமன் வில்லை முறித்ததற்கு அதுவே காரணம் எனப் பெறப்படும்.

 

‘ஓட்டைமாமரத்துள் அம்பு ஓட்டி’

 

அடுத்தாக, இராவணன் இகழ்ந்து சொல்வது ஏழு மராமரங்களை துளைத்த நிகழ்வைப் பற்றியது.  ஏழு மரங்களையும் ஓர் அம்பால் இராமன் துளைத்ததால், இராமனின் பராக்ரமம் விளங்கிற்று என்று விபீஷணன் சொல்ல, இராவணன், அதில் அதிசயம் ஒன்றுமில்லை.  ஏற்கனவே வாலி அந்த ஏழு மரங்களையும் பலமுறை துளையிட்டிருக்கிறான்.  அதனால் இராமனுக்கு துளையிடுதல் எளிய செயல் ஆயிற்று என்கிறான். 

‘तमुवाचाथ सुग्रीवः सप्तसालानिमान्पुरा ।

एवमेकैकशो वाली विव्याधाथ स चासकृत् ॥

(வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், சர்கம் 11, சுலோகம் 72)

இராமன் ஏழு மராமரங்களைத் துளைத்த விந்தையை ஒன்றுமில்லாததக்கி, முன்பே வேறொருவன் துளையிட்ட ஓட்டையில் அம்பு செலுத்துவது வீரர்க்குப் பொருந்தாச் செய்கை.  காளிதாசனும்,

अथवा कृतवाग्द्वारे वंशेSस्मिन्पूर्वसूरिभिः ।

मणौ वज्रसमुत्कीर्णे सूत्र्स्येवास्ति मे मति: ॥

என்று தனது ரகுவம்ச மஹாகாவியத்தின் அவையடக்கச் செய்யுளில், முன்பிருந்த வால்மீகி போன்ற கவிகளால் வர்ணிக்கப்பட்ட இந்த வம்சத்தை பற்றிய நிகழ்வுகளால், வைரத்தால் துளையிடப்பட்ட ரத்தினத்தில் நூலை கோர்க்கும் செய்கையைப் போல என் கவிதையின் வேலை சுலபமாக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்.  இதனால் முன்னமே ஒருவன் இட்ட துளையினால் நம் செயல் எளியதாகி விடுகிறது என்பதை அறியலாம்.  ஆகையால் ஏழு மராமரங்களில் இராமன் துளையிட்டது அருமையான ஒன்றல்ல என்பது இராவணன் கருத்து.

 

‘கூனி சூழ்ச்சியால் அரசிழந்து உயர்வனம் குறுகி’

 

இராமன் கூனி செய்த சதியால் அரசிழந்து வனம் புகுந்தான் என்று இராவணன் கேலி செய்கிறான்.  அரசனாகும் தகுதி பெற்ற ஒருவன் ஒரு பெண்ணின் செய்கையால் அரசிழ்ந்து காடாண்டான் என்பது இகழத் தக்கதாகும்.  எளிய, வேலைக்காரப்பெண்ணின் சதியால் அரசப்பதவி இழந்து, காட்டிற்குச் செல்லும் மன்னனிடம் என்ன தகுதி இருக்கக் கூடும் என்பது இராவணின் கேள்வி.  அந்தச் சதியைக் கூட முறியடிக்க முடியாதவன் அரசனாவது எவ்வாறு? அவனை யார் போற்றுவார்? என்று நகைக்கிறான் இராவணன்.  இதற்கு விடை  மஞ்சு ராமாயணத்தில், ஸ்ரீநிதி ஸ்வாமிகள் இவ்வாறு கூறுகிறார்,

‘अथ ते भरतस्य मातरं सततं रामगुणामृताप्लुताम् ।

निजशक्तिवशीकृतान्तरां कुटिलां मन्थरया वितेनिरे ॥‘

தேவர்கள், எப்பொழுதும் இராமனின் குணங்களாகிய அமிர்தத்தில் மூழ்கியவளும், பரதனின் தாயுமான கைகேயியை, தங்கள் சக்தியால் வசியம் செய்யப்பட்ட உள்ளமுள்ளவளாகச் செய்து, மந்தரையால் கோணல் ஆக்கப்பட்டாள்.  தேவர்கள் செய்த செய்கைக்கு இராவணன் கூனியைப் பொறுப்பாக்குகிறான்.  இராவணைன் செயல் கேலிக்குரியது.  இவன் இராமனை கேலி செய்கிறான்.  என்ன விந்தை !

 

‘யானிழைத்திட இல் இழந்து இன்னுயிர் சுமக்கும்’

 

விபீஷணன் இராவணனுக்கு அறிவுரை கூறும் போது,

‘தீயிடைக் குளித்தவத் தெய்வ கற்பினாள்

வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ?

நோயுனக்கு யானென நுவன்றுளாள் அவள்

ஆயவள் சீதை பண்டு அமுதில் தோன்றினாள்’

என்று வேதவதியின் வரலாற்றை ஞாபகப் படுத்துகிறான். இராவணன் அவளை பலாத்காரம் செய்ய முற்பட்ட அளவில், கற்புடைய வேதவதி, தீக்குளிக்குமுன், நானே உனக்கு நோய் என்று சொன்னாள்.  விபீஷணன், தீயிடைப் புகுந்த வேதவதியே, இன்று,சீதை வடிவில் இலங்கையில் உள்ளாள். இதனை உணர மாட்டாயா? இங்கிருப்பவள் இராமனின் மனைவியான சீதை இல்லை. சீதை வடிவில் இருக்கும் வேதவதியே நீ கொணர்ந்த சீதை என்று கூறுகிறான்.  இப்படி வேதவதி சீதையாக மாற்றம் பெற்றது, உத்தர காண்டத்து திக்குவிஜய படலத்தில் உள்ளது.  ஆகையால், நீ செய்த சூழ்ச்சியால் இராமன் தன் மனைவியை இழக்கவில்லை.  கர்வம் கொள்ளாதே.  இராமன் சீதையைப் பிரியவில்லை.  சீதை அக்னியிடம் அடைக்கலமாகி உள்ளாள்.  சீதையைப் பற்றி சாதாரணமாக நினைக்காதே. அவள், அமிர்தத்தோடு தோன்றிய மகாலக்ஷ்மி.  அதனால் இராமன் உயிரோடு இருப்பதில் என்ன தவறு என்று விபீஷணன் குறிப்பால் தெரியப்படுத்துகிறான்.  இவ்வாறு எதையெல்லாம் இராமனிடம் குறையாக இராவணன் கண்டானோ அவையெல்லாம் உண்மையில் குறையே அல்ல.  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற பழமொழிக்கேற்ப, இராவணனுக்கு இராமன் பாலுள்ள பகையால், குணமும் குற்றமாயிற்று. 

 

‘மானிடன் வலி ‘

 

இராவணன், வெளிப்பட பல பேசினாலும் அவன் உள்மனதில் இராமனைக் குறித்த அச்சம் மேலோங்கி நின்றது.  அதனாலேயே அவன் பேச்சில் இராமனுடைய வலிமை பற்றிய சொல் வந்தது.  தாடகையும், சுபாகுவும், விராதனும், கரன் தூஷணன் போன்றவர்களும், மாரீசனும், வாலியும் இராமனால் அழிந்தனர் என்பது இராவணனுக்குத் தெரிந்த விஷயம்.  அதனால்,மனதிலுள்ள பயத்தை மறைத்து இராமனை எடுத்தெறிந்து பேசுகிறான். 

 

‘நீ அலாது ஆருளார் மதித்தார்’

 

இராவணன், இராமனை இகழ்ந்து பேசும் பொழுது. விபீஷணா! உன்னைத் தவிர வேறு யார் தாம் இராமனின் பலத்தை மதிப்பார்.  ஒருவரும் இல்லை என்று கூறுகிறான்.  விபீஷணன் அறத்தின் பக்கம் நிற்பவன் என்று இராவணனுக்கு நன்கு தெரியும். எனவே ‘நீ அல்லாது’ என்று விபிஷணனை நோக்கிக் கூறுகிறான்.  தர்மத்தின் பால் நிற்பவரே எவரையும் ஆராய்ந்து மதிப்பிட வல்லவர்.  ஆகையால், விபீஷணனே இராமனைப் பற்றி பேசத் தகுந்தவன் என்னும் குறிப்புத் தோன்ற, இராவணன் பேசுகிறான்.

‘यान्ति न्यायप्रवृत्तस्य तियञ्चोSपि सहायताम् ।

अपन्थानं तु गच्छन्तं सोदरोSपि विमुञ्चति ॥‘ என்னும் முதுமொழியும் இராவணன் அறிந்ததே. 

 

ஒருவரைப் பிடிக்காவிட்டால், அவர் செய்யும் அனைத்தும் குற்றமாகப் படும்.  இது இராவணனுக்கும் பொருந்தும்.  அனந்த கல்யாண குண பூஷிதனான இராமனை, இராவணன் ராஜசபையில் இகழ்ந்து பேசுகிறான்.  இவ்வளவும் கம்பனின் ஒரு பாட்டால் அடைய முடியுமெனில், கம்பனின் கவித்திறனை யாரே அளக்கவல்லார்?