Friday 2 December 2022

 

ஊன வில்

தென் திரைக்கடலின் மறுபக்கம், வானர சேனையுடன் இராமன் வந்தான் எனும் செய்தியைக் கேட்ட இராவணன், மந்திரிசபையைக் கூட்டி, மேல் செய்ய வேண்டியவைக் குறித்து ஆலோசனை செய்தான்.  அப்போது விபீஷணன் இராமன் பெருமைகளைக் கூறி அவனோடு விரோதம் வேண்டாம்.  சீதையை விட்டுவிடு எனக் கூறினான்.  அதைக் கேட்ட இராவணன், கை கொட்டி நகைத்து, மானிடர் என்னை வெல்வர் என்று சொன்னது, அவர்கள் பாலுள்ள அச்சத்தலோ அல்லது அன்பினாலோ என்று கேட்டான். 

நான், சிவபெருமான் உறையும் வெள்ளியங்கிரியைத் தூக்கியவன்.  திருமால் எறிந்த சக்ராயுதத்தை மார்பில் ஏற்றியவன்.  அதனால் அவ்விருவரையும் வென்றவன்.

வாலி, சிவனிடமிருந்து எதிர்வரும் எதிரியின் பலத்தில் பாதியைக் கொள்ளும் வரத்தைப் பெற்றவன் என்று அறியாமல், அவன் முன் சென்று அவனால் தோற்கடிக்கப்பட்டேன்.  என் தோல்விக்குக் காரணம் சிவனின் வரமே, வாலியின் பலமல்ல.  இதை முன்னமே அறிந்த காரணத்தால் இராமன், மறைந்திருந்து வாலி மேல் அம்பு எய்தான்.  அப்படிப்பட்ட இராமனின் பெருமைகளாக நீ கூறியவை சிரிப்புக்குரியவை.  அந்த அற்ப மானிடனின் பலத்தை உன்னை அல்லாது வேறு யார் தாம் மதிப்பார்?

ஊனவில்லிறுத்து ஓட்டைமாமரத்துள் அம்பு ஓட்டிக்

கூனி சூழ்ச்சியால் அரசிழந்து உயர்வனம் குறுகி

யானிழைத்திட இல் இழந்து இன்னுயிர் சுமக்கும்

மானிடன் வலி நீ அலாது ஆருளார் மதித்தார்.

இராவணன் இராமனை இகழ்ந்து பேசுகிறான்.  விபீஷணன் எவ்வெவற்றை இராமனின் புகழாகக் கூறினானோ, அவற்றையெல்லாம் இராவணன், இகழ்ச்சியாகக் கூறி நகைக்கிறான். 

‘ஊன வில் இறுத்து’

இராமன் சிவதனுசை முறித்தது பெருமைக்குரியதல்ல.  அந்த வில் ஏற்கனவே உடைந்த வில்.  சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் நடந்த சண்டையில் பழுதுபட்ட சிவதனுசை இராமன் உடைத்ததால் அவனுக்கு என்ன புகழ்?   முன்பு பரசுராமனும்,

‘ஆனம் உடை உமையண்ணலை யந்நாள் உறுசிலைதான்

ஊனமுளது’ (கம்ப ராமாயணம், பால காண்டம், பரசுராமபடலம் (25)) என்று கூறினான்.   ஆனம் (அதிர்ஷ்டம்) உள்ள உமையின் கேள்வனான சிவனின் வில் முன்னாள் சண்டையில் பங்கப்பட்டது.  மேலும்,

‘ஊனவில்லிறுத்த மொய்ம்பை நோக்குவது ஊக்கமன்றால்’ (கம்ப ராமாயணம், பால காண்டம், பரசுராமபடலம் (32)) என்று உடைந்த வில்லை மறுபடி உடைத்த செயல் பெரிதில்லை.  என் கையிலிருக்கும் விஷ்ணுதனுசை நாணேற்றிக் காட்டு என்று இராமனிடம் சவால் விடுத்தான். இங்கு ஆனம் என்ற சொல்லைக் கம்பன் அதிர்ஷ்டம் என்னும் பொருள்பட அமைத்துள்ளான்.  அருணகிரி நாதரும், ‘ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்’ என்று திருவண்ணாமலைத் திருப்புகழில், அன்பர்க்கென்றும் அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய முருகனின் ஆறுமுகம் என்னும் செல்வத்தை அருள வேண்டுகிறார்.

 

முன்பே உடைந்த வில்லை இராமன் உடைக்க காரணத்தை ஸ்ரீநிதி ஸ்வாமிகள் தமது மஞ்சு ராமாயணத்தில்

भ्रूभंगमासाद्य मुनीश्वरस्य चापस्य भंगं मन्सा विचार्य ।

आदाय चारोप्य भभञ्ज मध्ये स्वमाश्रमं प्रथमं सहैव ॥

முனீச்வரனான விச்வாமித்திரரின் முகத்தை, வில்லைக் கையில் எடுப்பத்ற்கு முன்னால் இராமன் பார்த்தான்.  விச்வாமித்திரர் புருவத்தை நெரித்துக் காட்டினார்.  புருவநெரிப்பால், இந்த வில் ஒடிந்த வில், ஊனமுற்ற வில், உன்னால் எளிதில் வளைக்கக்கூடியது என்பதை குறிப்பால் உணர்த்துவதாக மனதில் எண்ணி இராமன், வில்லைக் கையில் எடுத்து நாணேற்றி உடைத்தான். வில்லை முறித்ததற்கு இராமனை குறை கூற முடியாது.  குருவின் ஆணையை சிஷ்யன் நிறைவேற்றினான் அவ்வளவே.  மேலும், ஜனகர் வைத்த பந்தயம் வில்லை எடுத்து நாணேற்ற வேண்டுனென்பதே.  ஆனால் இராமன் வில்லை முறித்தானே என்றால் அதற்கும் முனிவரின் புருவ நெரிப்பே காரணம்.  புருவ நெரிப்பு மூலம் வில்லை முறிக்கச் சொல்வதாக எண்ணி இராமன் அவ்வாறு செய்தான் என்பதும் ஒரு சமாதானம். चापस्य भंगं  என்பது முன்னமே உள்ள பழுது என்று கொண்டால், புருவ நெரிப்பு இராமனின் செயல் எளிதில் முடியும் என்று குறிப்பால் உணர்த்தியதாகக் கொள்ளலாம். அல்லது  चापस्य भंगं   இனி இராமன் செய்யப்போகும் வில்லை முறித்தலாகிய செயலைக் குறிப்பதாகக் கொண்டால், இராமன் வில்லை முறித்ததற்கு அதுவே காரணம் எனப் பெறப்படும்.

 

‘ஓட்டைமாமரத்துள் அம்பு ஓட்டி’

 

அடுத்தாக, இராவணன் இகழ்ந்து சொல்வது ஏழு மராமரங்களை துளைத்த நிகழ்வைப் பற்றியது.  ஏழு மரங்களையும் ஓர் அம்பால் இராமன் துளைத்ததால், இராமனின் பராக்ரமம் விளங்கிற்று என்று விபீஷணன் சொல்ல, இராவணன், அதில் அதிசயம் ஒன்றுமில்லை.  ஏற்கனவே வாலி அந்த ஏழு மரங்களையும் பலமுறை துளையிட்டிருக்கிறான்.  அதனால் இராமனுக்கு துளையிடுதல் எளிய செயல் ஆயிற்று என்கிறான். 

‘तमुवाचाथ सुग्रीवः सप्तसालानिमान्पुरा ।

एवमेकैकशो वाली विव्याधाथ स चासकृत् ॥

(வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், சர்கம் 11, சுலோகம் 72)

இராமன் ஏழு மராமரங்களைத் துளைத்த விந்தையை ஒன்றுமில்லாததக்கி, முன்பே வேறொருவன் துளையிட்ட ஓட்டையில் அம்பு செலுத்துவது வீரர்க்குப் பொருந்தாச் செய்கை.  காளிதாசனும்,

अथवा कृतवाग्द्वारे वंशेSस्मिन्पूर्वसूरिभिः ।

मणौ वज्रसमुत्कीर्णे सूत्र्स्येवास्ति मे मति: ॥

என்று தனது ரகுவம்ச மஹாகாவியத்தின் அவையடக்கச் செய்யுளில், முன்பிருந்த வால்மீகி போன்ற கவிகளால் வர்ணிக்கப்பட்ட இந்த வம்சத்தை பற்றிய நிகழ்வுகளால், வைரத்தால் துளையிடப்பட்ட ரத்தினத்தில் நூலை கோர்க்கும் செய்கையைப் போல என் கவிதையின் வேலை சுலபமாக்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார்.  இதனால் முன்னமே ஒருவன் இட்ட துளையினால் நம் செயல் எளியதாகி விடுகிறது என்பதை அறியலாம்.  ஆகையால் ஏழு மராமரங்களில் இராமன் துளையிட்டது அருமையான ஒன்றல்ல என்பது இராவணன் கருத்து.

 

‘கூனி சூழ்ச்சியால் அரசிழந்து உயர்வனம் குறுகி’

 

இராமன் கூனி செய்த சதியால் அரசிழந்து வனம் புகுந்தான் என்று இராவணன் கேலி செய்கிறான்.  அரசனாகும் தகுதி பெற்ற ஒருவன் ஒரு பெண்ணின் செய்கையால் அரசிழ்ந்து காடாண்டான் என்பது இகழத் தக்கதாகும்.  எளிய, வேலைக்காரப்பெண்ணின் சதியால் அரசப்பதவி இழந்து, காட்டிற்குச் செல்லும் மன்னனிடம் என்ன தகுதி இருக்கக் கூடும் என்பது இராவணின் கேள்வி.  அந்தச் சதியைக் கூட முறியடிக்க முடியாதவன் அரசனாவது எவ்வாறு? அவனை யார் போற்றுவார்? என்று நகைக்கிறான் இராவணன்.  இதற்கு விடை  மஞ்சு ராமாயணத்தில், ஸ்ரீநிதி ஸ்வாமிகள் இவ்வாறு கூறுகிறார்,

‘अथ ते भरतस्य मातरं सततं रामगुणामृताप्लुताम् ।

निजशक्तिवशीकृतान्तरां कुटिलां मन्थरया वितेनिरे ॥‘

தேவர்கள், எப்பொழுதும் இராமனின் குணங்களாகிய அமிர்தத்தில் மூழ்கியவளும், பரதனின் தாயுமான கைகேயியை, தங்கள் சக்தியால் வசியம் செய்யப்பட்ட உள்ளமுள்ளவளாகச் செய்து, மந்தரையால் கோணல் ஆக்கப்பட்டாள்.  தேவர்கள் செய்த செய்கைக்கு இராவணன் கூனியைப் பொறுப்பாக்குகிறான்.  இராவணைன் செயல் கேலிக்குரியது.  இவன் இராமனை கேலி செய்கிறான்.  என்ன விந்தை !

 

‘யானிழைத்திட இல் இழந்து இன்னுயிர் சுமக்கும்’

 

விபீஷணன் இராவணனுக்கு அறிவுரை கூறும் போது,

‘தீயிடைக் குளித்தவத் தெய்வ கற்பினாள்

வாயிடை மொழிந்த சொல் மறுக்க வல்லமோ?

நோயுனக்கு யானென நுவன்றுளாள் அவள்

ஆயவள் சீதை பண்டு அமுதில் தோன்றினாள்’

என்று வேதவதியின் வரலாற்றை ஞாபகப் படுத்துகிறான். இராவணன் அவளை பலாத்காரம் செய்ய முற்பட்ட அளவில், கற்புடைய வேதவதி, தீக்குளிக்குமுன், நானே உனக்கு நோய் என்று சொன்னாள்.  விபீஷணன், தீயிடைப் புகுந்த வேதவதியே, இன்று,சீதை வடிவில் இலங்கையில் உள்ளாள். இதனை உணர மாட்டாயா? இங்கிருப்பவள் இராமனின் மனைவியான சீதை இல்லை. சீதை வடிவில் இருக்கும் வேதவதியே நீ கொணர்ந்த சீதை என்று கூறுகிறான்.  இப்படி வேதவதி சீதையாக மாற்றம் பெற்றது, உத்தர காண்டத்து திக்குவிஜய படலத்தில் உள்ளது.  ஆகையால், நீ செய்த சூழ்ச்சியால் இராமன் தன் மனைவியை இழக்கவில்லை.  கர்வம் கொள்ளாதே.  இராமன் சீதையைப் பிரியவில்லை.  சீதை அக்னியிடம் அடைக்கலமாகி உள்ளாள்.  சீதையைப் பற்றி சாதாரணமாக நினைக்காதே. அவள், அமிர்தத்தோடு தோன்றிய மகாலக்ஷ்மி.  அதனால் இராமன் உயிரோடு இருப்பதில் என்ன தவறு என்று விபீஷணன் குறிப்பால் தெரியப்படுத்துகிறான்.  இவ்வாறு எதையெல்லாம் இராமனிடம் குறையாக இராவணன் கண்டானோ அவையெல்லாம் உண்மையில் குறையே அல்ல.  அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற பழமொழிக்கேற்ப, இராவணனுக்கு இராமன் பாலுள்ள பகையால், குணமும் குற்றமாயிற்று. 

 

‘மானிடன் வலி ‘

 

இராவணன், வெளிப்பட பல பேசினாலும் அவன் உள்மனதில் இராமனைக் குறித்த அச்சம் மேலோங்கி நின்றது.  அதனாலேயே அவன் பேச்சில் இராமனுடைய வலிமை பற்றிய சொல் வந்தது.  தாடகையும், சுபாகுவும், விராதனும், கரன் தூஷணன் போன்றவர்களும், மாரீசனும், வாலியும் இராமனால் அழிந்தனர் என்பது இராவணனுக்குத் தெரிந்த விஷயம்.  அதனால்,மனதிலுள்ள பயத்தை மறைத்து இராமனை எடுத்தெறிந்து பேசுகிறான். 

 

‘நீ அலாது ஆருளார் மதித்தார்’

 

இராவணன், இராமனை இகழ்ந்து பேசும் பொழுது. விபீஷணா! உன்னைத் தவிர வேறு யார் தாம் இராமனின் பலத்தை மதிப்பார்.  ஒருவரும் இல்லை என்று கூறுகிறான்.  விபீஷணன் அறத்தின் பக்கம் நிற்பவன் என்று இராவணனுக்கு நன்கு தெரியும். எனவே ‘நீ அல்லாது’ என்று விபிஷணனை நோக்கிக் கூறுகிறான்.  தர்மத்தின் பால் நிற்பவரே எவரையும் ஆராய்ந்து மதிப்பிட வல்லவர்.  ஆகையால், விபீஷணனே இராமனைப் பற்றி பேசத் தகுந்தவன் என்னும் குறிப்புத் தோன்ற, இராவணன் பேசுகிறான்.

‘यान्ति न्यायप्रवृत्तस्य तियञ्चोSपि सहायताम् ।

अपन्थानं तु गच्छन्तं सोदरोSपि विमुञ्चति ॥‘ என்னும் முதுமொழியும் இராவணன் அறிந்ததே. 

 

ஒருவரைப் பிடிக்காவிட்டால், அவர் செய்யும் அனைத்தும் குற்றமாகப் படும்.  இது இராவணனுக்கும் பொருந்தும்.  அனந்த கல்யாண குண பூஷிதனான இராமனை, இராவணன் ராஜசபையில் இகழ்ந்து பேசுகிறான்.  இவ்வளவும் கம்பனின் ஒரு பாட்டால் அடைய முடியுமெனில், கம்பனின் கவித்திறனை யாரே அளக்கவல்லார்?

No comments:

Post a Comment