Wednesday 21 March 2018

ஆறுமுக தரிசனம்

ஸ்ரீசரணம் என்னும் அமைப்பின் முதல் ‘தெய்வீக சுற்றுலா’ நிகழ்ச்சியாக 21.03.2018 அன்று நாம் தரிசித்தத் தலங்களின் தொகுப்பு. மலரும் நினைவுகள்.

நடுப்பழநி
ஸ்ரீ மரகத தண்டாயுதபாணி
அச்சரப்பாக்கத்திற்கு  சற்று முன்பே ஒரு அலங்கார வளைவு   பெருக்  கருணை ஊருக்கு   வழிகாட்டும்.  நடுப்பழனிக்   கோயில் ஊரின் உள்ளே மலை மேல் இருக்கிறது. சத்குரு ஸ்ரீலஸ்ரீ முத்துஸ்வாமி சுவாமிகளால் கட்டப்பட்ட இத்திருக்கோயில் தற்சமயம் மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகளால் நிர்வகிக்கப்படுகிறது.    காஞ்சி பரமாச்சாரியார் இவ்வூருக்கு வந்த போது இவ்வூரை  'பெரும் கருணை' எனவும் மலைக்கோயிலை 'நடுப்பழனி' எனவும் அழைத்தார்.  அவர், " நாடுங்கள் நடுப்பழநிநாதனை நல்லதே நடக்கும்" எனவும் சொன்னார்.
அடிவாரத்தில் ஆலமரங்கள் செழித்து வளர்ந்து நிழல் தருகின்றன.  மேலேயுள்ள கோயிலுக்குச் செல்ல 120 படிகள் கொண்ட படிப்பாதையும், வாகனங்கள் செல்ல சாலைப்பாதையும் உள்ளன.  படிப்பாதையின் தொடக்கத்தில் ஆஞ்சநேயர், இடும்பன், சித்தி விநாயகர், ராஜராஜேஸ்வரி, நவகிரஹ சந்நிதிகள், ஸ்ரீலஸ்ரீ முத்துஸ்வாமி ஸ்வாமிகள் சமாதி  உள்ளன.   நடுவழியில் அரசும் வேம்பும் இணைந்த இடத்தில் நாகர் சந்நிதி உள்ளது. 
மலை மேல் மரகதக் கல்லாலான தண்டாயுதபாணி சந்நிதி இருக்கிறது, 'கல்யாண உத்சவர்', மயில் மீதமர்ந்த ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. செவ்வாய்க் கிழமை மற்றும் கிருத்திகை நாட்களில் பாலபிஷேகம் நடக்கிறது. பங்குனி உத்திரத்தில் திரு விழா நடக்கும். அச்சமயம் எடுக்கும் "ருத்ராக்ஷ காவடி" விசேஷம்.
பெரும்பேர் கண்டிகை
 வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமண்யர்
அச்சிறுபாக்கம் அருகே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இயற்கை அழகு கொஞ்சுமிடம். அடிவாரத்தில் சஞ்சீவி தீர்த்தம் உள்ளது. பாறை விநாயகர் ஆலயமும் உள்ளது.  மலைக்கு சஞ்சீவி மலை என்றும் சித்தர் மலை என்றும்  பெயர். 100 படிக்கட்டுகள், மேலே உள்ள  முருகன் கோயிலை அடைய அமைக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு படியும் ஒவ்வொரு பலனைத் தருகிறது. உதாரணமாக முதல்  படி நூறாண்டு ஆயுளை அளிக்கிறது.  மலைக்கு மேலே செல்ல வாகனப்பாதையும் உண்டு.
மேலே, முருகன் வள்ளி தெய்வானையுடன் 6 முகங்கள் 12 கரங்களோடு விளங்குகிறார்.  தெற்கு பார்த்த சந்நிதி.  சூர சம்ஹாரத்திற்குப் பின் முருகன் இங்கு வந்து அமர்ந்ததாகவும், அகத்தியர், தும்புரு, சுகர் போன்ற பல ரிஷிகள் முருகனை வழிபட்டதாகவும்  புராணம் சொல்கிறது.  முருகனுக்கு முன்னே சத்ரு சம்ஹார இயந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  இந்த முருகன்மீது அருணகிரி நாதர், வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள், பாம்பன் ஸ்வாமிகள் முதலியோர் பல துதிகளைப் பாடியுள்ளனர். 
ஊரின் நடுவே தடுத்தாட்கொண்ட நாயகி சமேத தான்தோன்ரீஸ்வரர் ஆலயம் உள்ளது.  இங்கு அகத்தியர் தவம் செய்த இடத்தில் லிங்கம்  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  சனகாதி முனிவர்கள் அகத்திய லிங்கத்தின் நான்கு புறமும் நந்தி வடிவில் காட்சி அளிக்கின்றனர்.  சாமுண்டி தேவி,  சண்டன், முண்டன் என்னும் அரக்கர்களை வதம் செய்த இடமிது.    இங்கு ரணபத்ர காளி, வீரபத்திர ஸ்வாமியும் உள்ளனர்.
சித்திரை மாத திருவிழாவில், அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர், இளம்கிளி அம்மனுடன், சித்திராப் பௌர்ணமியன்று சஞ்சீவி மலையைச் சுற்றி வருகையில், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்ரமண்யர் எதிர்கொண்டு அழைத்து, தானும் கிரிவலம் செய்கிறார்.
மைலம்
சுப்பிரமணிய சுவாமி  கோயில்
திண்டிவனத்திலிருந்து 15 கி. மீ. தூரத்தில், கூட்டேரிப்பட்டிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் வழியில் மைலம் உள்ளது. பொம்மையப்பாளையம் வீர சைவ மடத்தாரால் நிர்வகிக்கப்படுகிறது.  பொம்மையப்பாளையம் பாண்டிச்சேரிக்கு அருகே உள்ளது.   பொம்மையப்பாளையம் என்பது பிராமணபுரம் என்பதின் திரிபு. இதற்குச் சான்றாக அவ்வூரில் உள்ள வீர சைவ மடமிருக்கும் பகுதி அக்ராஹாரம் என அழைக்கப்படுகிறது.
முருகனுக்கும் சூரபத்மனுக்கும் நடந்த போரின் முடிவில் சூர பத்மன் முருகனை வணங்கித் தன்னை முருகனுடைய வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டினான்.  முருகனும், வராஹ நதிக்கரையில் தவம் செய்யுமாறுப் பணித்தான். அவ்விதம் தவம் புரிந்த சூர பத்மனைத் தன் மயில் வாகனமாக்கிக் கொண்டான்.  அதுவே மயில மலை.  பிற்காலத்தில் மைலம் என மருவியது.
பொம்மய்யப்பாளையம் வீர சைவ மடத்திற்கும் மைலம் முருகனுக்கும் உள்ள தொடர்பை விவரிக்கும் கதை.
பார்வதி தேவி, சங்கு கர்ணன் என்னும் பூத கணத்தைக் காவலாக்கிக் குளிக்கச் சென்றாள். அப்பொழுது அங்கு வந்த சிவனைச்  சங்கு கர்ணன் எதிர்த்தான். கோபம் கொண்ட சிவன் அவனை பூவுலகில் பிறந்து முருகன் அருளால் மீண்டும் கைலாயத்தை அடையுமாறு சபித்தார்.  பூவுலகில் பொம்மைய்யப்பாளையத்தில் பிறந்த சங்கு கர்ணனுக்கு பால சித்தர் எனப் பெயரிட்டனர்.  பால சித்தர் மைல மலையில்,வெகு காலம் தவம் புரிந்த போதும் அவருக்கு முருகன் அருள் புரியவில்லை.  வள்ளியும் தேவசேனாவும் பல முறை கேட்டுக்கொண்ட போதும் முருகன் மனம் இறங்கவில்லை.  வள்ளியும் தேவசேனாவும் முருகனை விட்டு பிரிந்து பால சித்தரின் குடிலில் ' சித்த கன்னிகைகள்' என்ற பெயருடன் வசித்து வந்தனர்.  அவர்களைத் தேடி முருகன் வேடுவ வடிவில் வந்தார்.  பால சித்தரும் வள்ளியையும், தேவசேனாவையும் காக்க வேட ரூபத்திலிருந்த முருகனுடன் போரிட்டார். முடிவில் வந்தவன் முருகனே என்று உணர்ந்து வணங்கினார்.  சித்த கன்னிகைகளான வள்ளியையும்,  தேவசேனாவையும், தன் மகள்களெனக்கொண்டு முருகனுக்கு மணம் செய்து கொடுத்தார். அதுமுதல் முருகனும் மைல மலையில், வள்ளி, தேவசேனையுடன் 'கல்யாணக் கோலத்தில் காட்சிக் கொடுக்கிறார்.
வேல் மலை
ஸ்ரீ சக்தி வேலாயுதபாணி
திண்டிவனத்திலிருந்து மரக்காணம் வழியாக பாண்டிச்சேரி செல்லும் வழியில் 4 கி. மீ. தூரத்தில் கிளை வழி பிரியும். அதில் 3 கி. மீ. சென்றால் விட்டலாபுரம் என்னும் கிராமத்தை அடையலாம். ஊர் பெயர் விட்டலாபுரம். மழையின் பெயர் வேல் மலை. 
மலையடிவாரத்தில் விநாயகர், அம்மன், சிவன் சந்நிதிகள் உள்ளன. 6 அடி உயரமுள்ள 18 கைகளோடு கூடிய அஷ்டாதச பூஜை துர்கையின் சந்நிதியும் உள்ளது.
மலைமேல், ஸ்ரீ சக்திவேலாயுதபாணி, பெருமாள், ஆஞ்சநேயர், கருடன், நவகிரஹ சந்நிதிகள் உள்ளன. மலையின் மொத்த உயரம் 100 படிகளே.
செய்யூர்
ஸ்ரீ கந்தசாமி கோயில்
செய்யூர் கந்தசாமி கோயிலில் ஈஸ்வரன் சோமநாதன் மீனாக்ஷியுடன் அருள் பாலிக்கிறார். ஈஸ்வரனின் சந்நிதியின் இருபுறத்தில் விஷ்ணுவும் பிரம்மாவும் இருக்கின்றனர்.
கந்தசாமி சந்நிதியின் இருபுறத்தில் சுவீரனும் சுஜனனும் இருக்கின்றனர்.  கோஷ்ட தேவதைகளாக நிருத்த ஸ்கந்தன் விநாயகரின்  இடத்திலும், ப்ரம்ம சாஸ்தா தக்ஷிணாமூர்த்தியின்  இடத்திலும், பால ஸ்கந்தன் விஷ்ணுவின்  இடத்திலும், சிவகுருநாதன் ப்ரம்மாவின் இடத்திலும், புலிந்தர் துர்கையின்  இடத்திலும், இருக்கின்றனர்.
27 நக்ஷத்திரங்களும் 27 வேதாள கண ரூபத்தில் கோவிலின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றன. உதாரணமாக, கிருத்திகை நக்ஷத்திரம், வைராக்கிய பூத வேதாளம் என்றும் விசாக நக்ஷத்திரம், சூரநிபுண பூத வேதாளம் என்றும் அழைக்கப்படுகிறது.  அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற தலமிது.
இரும்குன்றப் பள்ளி
ஸ்ரீ பால முருகன்
செங்கல்பட்டை அடுத்து பாலாற்றுப் பாலத்திற்கு சற்று முன் ஓர் அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.  அதன் வழியே சென்றால் பாலமுருகன் ஆலயத்தை அடையலாம்.