Friday 2 December 2022

 

ஆடும் பரிவேல் அணிசேவலெனப்

பாடும் பணியே பணியாய் அருள்வாய்

தேடும் கயமாமுகனைச் செருவில்

சாடும் தனியானைச் சகோதரனே.

पित्रे ब्रह्मोपद्रुष्ट्रे मे गुरवे दैवताय च ।

प्राप्याय प्रापकाय च नम श्रीनिधये नमः ॥

मनोजवं मारुततुल्यवेगं जितेन्द्रियं बुद्धिमतां वरिष्टम् ।

वातात्मजं वानरयूथमुख्यं श्रीरामदूतं शिरसा नमामि ॥

கம்பனும் ஸ்ரீநிதியும்

தந்தை சொல் மிக்க மந்திரமில்லையென்பதை தன் வாழ்க்கை முறையால் தரணிக்கெல்லாம் எடுத்துக்காட்டிய ஸ்ரீராமனின் காதையைத், தீந்தமிழில் அளித்த, தமிழ்நாட்டின் தன்னிகரில்லாக் கவிஞன் கம்பன் கவிநயத்தையும், அதே கதையை ஸம்ஸ்க்ருதத்தில் சதுச்ச்லோகி ராமாயணம், மஞ்சு ராமாயணம், மந்தஸ்மித ராமாயணம் எனச் சிறுகாப்பியங்களாக இயற்றிய வில்லூர் ஸ்ரீநிதிஸ்வாமியின் புலமைப் பற்றியும் இந்த மாலைவேளையில் சிறிது ஆராய்வோம்.

கம்பன்

‘கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்’ என்ற பழமொழியால் கம்பரின் பெருமை சொல்லப்படுகிறது.  பாரதியாரும், ‘புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று இவரையே முன்னிறுத்தி தமிழ்நாட்டின் சிறப்பைக் கூறுகிறார்.

நடாதூர் வம்சத்தில் உதித்த வில்லூர் ஸ்ரீநிதிஸ்வாமி, ஸம்ஸ்க்ருதப் புலவர்களில் தனியிடம் வகிப்பவர். புகழேந்திப் புலவரின்

‘………………………………………………………………………….வேதத்தின்

முன்னின்றான் வேழம் முதலே யெனயழைப்ப

என்னென்றான் எங்கட் கிறை’

என்ற வாக்கிற்கேற்ப நாராயணனுக்கே அடிமைபூண்டு அவனுள்ளம் உகக்கும் வண்ணம் வாழ்க்கையை நடத்திய சீலர்.  இங்கு ‘வேதத்தின் முன்னின்றான்’ என்ற பதத்திற்குச் சான்று வேண்டுமாயின் பெருமாள் புறப்பாட்டில் காணலாம்.

 

‘வாங்கரும் பாதநாங்கின் வகுத்த வான்மீகியென்பான்

தீங்கரும் செவிகளார தேவரும் பருகச் செய்தான்

ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவ மாந்தி

மூங்கையான் பேசலுற்றான் யென்ன யான் மொழியலுற்றேன்’

என்பது கம்பனின் வாக்குமூலம்.  ஆதிகாவ்யமான வால்மீகியின் ஸம்ஸ்க்ருத ராமாயணத்தைக் கைகொண்டு தன் காப்பியத்தைப் படைப்பதாக ஒப்புக்கொண்டு கம்பன் தன் காவியத்தை செந்தமிழில் நமக்காக எழுதினான்.  பெரும்பாலும் வால்மீகியின் அடியொற்றிப் பாடிய கம்பன் ஆங்காங்கே தன் கற்பனைக்கேற்பவும், தமிழர் நாகரீகத்திற்கேற்பவும் மாறுதல்களைச் செய்யவும் முனைந்தான். 

ஸ்ரீநிதிஸ்வாமி

தமிழ்நாட்டில் பிறந்த ஸ்ரீநிதிஸ்வாமியின் கவிதைகளில் கம்பனின் தாக்கம் இருப்பதில் ஆச்சரியமில்லை.  ஸம்ஸ்க்ருத்தில் காவ்யம் இயற்றப் புகுந்த ஸ்ரீநிதிஸ்வாமியின் படைப்புகளில் அவரறியாமலே கூட கம்பனின் புலமை வெளிப்படுகிறது.  ‘கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கேற்ப ஸ்ரீராமனின் கதையை எம்மொழியில் ஆயினும் கற்கும் உறுதி படைத்த ஸ்ரீநிதிஸ்வாமி கம்பனின் கவிதையில் தம் மனதை பறிகொடுத்து, தான் இயற்றிய ராமகாப்பியங்களில் ஆங்காங்கே கம்பன் வழியில் நயம்பட உரைக்கிறார்.  இதை தமிழ்நாட்டு ஸம்ஸ்க்ருதக் கவியின் சிறப்பெனக் கொள்ளலாம்.  கம்பன் வால்மீகியின் வழி தன் காவியத்தை இயற்றினால், ஸ்ரீநிதிஸ்வாமி வால்மீகி மற்றும் கம்பன் வழி தன் கவிதைகளை வடித்துள்ளார்.

வால்மீகி, கம்பன் மற்றும் ஸ்ரீநிதிஸ்வாமி

மூல நூலுக்கான மொழிபெயர்ப்பாக தன் படைப்பை அமைப்பது ஒரு வகை.  அல்லாமல் மூலக்கருவை மாற்றாமல் கதைச்சுவை குன்றாமல் சில மாறுபாடுகளை செய்து இயற்றுவது வேறு வகை. கம்பன், இரண்டாம் வகையில், தமிழில் ராமாயணத்தை எழுதினான்.    ஸ்ரீநிதிஸ்வாமியோ, வால்மீகி, கம்பன் ஆகிய இருவர் நடையை ஒத்து ராமாயணங்களை யாத்துள்ளார்.

மூல நூலும் மொழிபெயர்ப்பும்

வால்மீகியின் ராமாயணத்தில், ஹனுமான் சீதையை பற்றி ராமனிடம் சொல்லும் போது,

‘द्रुष्टा सीतेति हनुमद्वचनादमृतोपमम्’ என்று கூறியதாக எழுதியுள்ளார். காணப்பட்டாள் சீதை என்ற ஹனுமானின் பேச்சு அமிர்தத்திற்கு சமமாக இருந்தது ராமனுக்கு.  கண்டேன் சீதையை என்று பார்த்ததை முதலில் சொல்லி இமைக்கும் நேரமும் ராமன் மனதில் துயர் சேரா வண்ணம் சொல்லின் செல்வனான ஹனுமான் செய்தியைக் கூறுகிறான்.  இதை மனதில் கொண்டே கம்பனும்,

‘கண்டனன் கற்பினுக்கணியை கண்களால்’ என்று அனுமன் சொல்வதாக காட்சியை முன்னிலப்படுத்தி எழுதியுள்ளான்.  இவ்விடம் மூல நூலுக்கான மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளது.  மேலும், கம்பன், கற்பினுக்கணியை என்ற சொற்றொடரால் சீதையின் தன்னிலை மாறாத் தன்மையையும் சுட்டிக் காட்டுகிறான்.  சீதை கற்பினுக்கணி என்பது அவள் கண்களில் தெரியவந்தது. காண்பது கண்களால் செய்யும் செயல்.  அனுமன் கண்டேன் என்ற போதே காட்சியைக் கூறுகிறான்.  மேலே கண்களால் என்பது மிகை. ஆனால் அவ்வாறு அனுமன் கண்களால் எனக் கூறியது சீதையின் கற்பின் நிலையை அவளுடைய கண்களால் தான் அறிந்து கொண்டதை தெரிவிக்கவே. 

இவ்வாறே, பின்னாளில் மந்தஸ்மித ராமாயணம் எழுதிய ஸ்ரீநிதிஸ்வாமி,

‘द्रुष्टा काSपि पतिव्रता कुलमणि रामोत्तमा राम ते’ என்று பாடி, காணப்பட்டாள் சீதை, மேலும் கற்புடன் இருந்தாள் என உறுதிபட கூறுகிறார்.  இதில் ஸ்ரீநிதிஸ்வாமி சீதை கற்புடன் இருந்ததைப் பற்றி மட்டும் எழுதாமல், இதே கட்டத்தில் கம்பன் எழுதிய பாக்களின் துணை கொண்டு,

‘இல்பிறப்பு என்பதொன்றும்’ என்பதை  ‘रामोत्तमा’  என்றும், கம்பன்,

‘உன் பெருந்தேவியென்னும் உரிமைக்கும் உன்னைப் பெற்ற

மன்பெருமருகி யென்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன்

தன் பெரும் தனயை யென்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்

என் பெரும் தெய்வமையா இன்னமும் கேட்டி என்பான்’ என்று பாடியதை

‘कुलमणि’ என்ற சிறிய சொல்லாலும் குறிப்பிட்டிருக்கிறார்.  இது நாள்வரை ‘जय् श्रीराम्’ என்று சொல்லிவந்த அனுமன் கட்சி மாறி ‘जय सीताराम्’ என்று சொல்ல ஆரம்பித்தான்.

மூல நூலும் மாறுபாடும் - கம்பன்

கம்பன் தமிழில் ராமாயணத்தை எழுதியபோது, மூல நூலான வால்மீகியின் ராமாயணத்திலுள்ள சில பகுதிகளை தமிழர் பண்பாட்டிற்கேற்ப மாற்றி அமைத்துள்ளார். உதாரணமாக, வால்மீகி ராமாயணத்தில், வாலி இறந்தபின் தாரை, சுக்ரீவனுக்கு மனையாளாக சேர்ந்து வாழ்கிறாள்.  இதை ஒத்துக் கொள்ளாத கம்பன், லக்ஷ்மணன், கோபத்தோடு கிஷ்கிந்தை வந்தபோது, முதலில் தாரையைச் சந்தித்ததாக சொல்லுமிடத்து, தாரையை,

‘மங்கள அணியை நீக்கி மணி அணி துறந்து வாசக்

கொங்கலர் கோதை மாற்றி குங்குமம் சாந்தம் கொட்டா

பொங்குவெம்முலைகள் பூகக் கழுத்தொடு மறைய போர்த்த

நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நின்றான்’

என்ற காட்சி மூலம் வெளிப்படுத்துகிறான்.  கம்பன் தாரையை தமிழ்நாட்டு கணவனையிழந்த பெண்ணின் நிலையில் நிறுத்தி, மங்கள பொருட்களை துறந்தவளாக, சுகத்தை விரும்பாதவளாக உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து, படிப்பவர் மனதில் இரக்க உணர்ச்சி மேலிடும்படிச் செய்கிறான்.  கம்பன் செய்த மாறுபாட்டால் தாரை தமிழரிடையே உச்சநிலையை அடைகிறாள்.  இப்படிப்பட்ட மாறுதல்கள் வரவேற்கத்தக்கவை.

மூல நூலும் மாறுபாடும் - ஸ்ரீநிதிஸ்வாமி

நம் ஸ்வாமியும் வால்மீகி சொல்லாத காட்சிகளை தம் மந்தஸ்மித ராமாயணத்தில் சேர்த்து, காவியத்திற்கு மெருகு கூட்டியுள்ளார்.  அனுமன், ராவணனின் சபையில் தனக்கு ஆசனம் அளிக்கப்படாத சமயத்தில், தன் வாலை வளரச் செய்து, ராவணனை விட உயர்ந்த இடத்தில் உட்கார்ந்து, அவனுடன் பேசியதாகயுள்ள, தமிழ் மக்களின் நம்பிக்கையை மையப்படுத்தி அந்தக் காட்சியை வடிவமைத்துள்ளார்.  மேலும் அனுமனின் வீரத்தை வெளிப்படுத்த,

‘पौलस्त्यं च बबन्ध हन्त निबिडं वालेन वातात्मजः’

என்று, ராவணனையே தன் வாலினால் கட்டியதாக எழுதுகிறார்.  இவ்வித மாறுதல், கற்போரின் இதயத்தில், அனுமனை, வீரனாக, தைரியமுள்ளவனாக, ஒரு தூதனாகச் செய்யவேண்டியதைச் செய்தவனாக சித்தரிக்கிறது.  காவித்தின் அழகும் மேம்படுகிறது.

கம்பனும் ஸ்ரீநிதியும்

தனக்கு முன்னே ராமாயணத்தை பாடிய வால்மீகியையும் கம்பனையும் மனதில் போற்றியபடியே ஸ்ரீநிதிஸ்வாமி நான்கே பாக்களாலான चतुश्श्लोकी रामायणम्, மைசூர் மஹாராஜாவின் தசரா போட்டிக்காக मञ्जु रामायणम्, வடுவூர் ராமனின் புன்னகைக்கு காரணமாக சம்பவங்களைச் சித்தரிக்கும் मन्दस्मित रामायणम् ஆகிய தம் மூன்று ராமாயணங்களை இயற்றியுள்ளார்.  வால்மீகியின் அடியொற்றியும், கம்பனின் மனவெழுச்சியை கற்பனை செய்தும் இயற்றிய ராமாயணங்களில் கம்பனின் தாக்கத்தை பதிவு செய்யவே இந்த மாலையில் நாம் கூடியுள்ளோம்.

அவையடக்கம்

கம்பன் அவையடக்கப் பாடலில், 

‘அறையும் ஆடரங்கும்பட பிள்ளைகள்

தரையில் கீறிட தச்சரும் காய்வரோ?’

என்று தன் காப்பியத்தை பெரியோர் முன்னிலையில், சிறு பிள்ளைகளின் விளையாட்டுக் கிறுக்கல்களாக எண்ணுமாறு வேண்டுகிறான்.  தலைக்கனம் சிறிதும் இன்றி பெரியோரை மதிக்கும் கம்பனின் ஒழுக்கம் போற்றதக்கது.  இதே கருத்தை நம் ஸ்வாமியும் தம்முடைய மஞ்சு ராமாயண அவையடக்க சுலோகத்தில்,

‘लिखन्ति बाला कुटिलां हि रेखां तथाSपि मोदाय पितुर्भवन्ति’

என்று குறிப்பிடுகிறார்.  சிறு பிள்ளைகள் கோணலாக எழுதிய எழுத்தும் பெற்றோருக்கு ஆனந்தத்தை கொடுப்பது போல என் சிறிய நூலும் கற்றோருக்கு இன்பம் பயக்கட்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொண்டு தன் நூலை எழுதத் துணிகிறார்.

கம்பன், ஸ்ரீநிதிஸ்வாமி ஆகிய இருவரின் பாடலுக்கும் பின்ணணியாக தமிழ் நாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்று கூறப்படுகிறது.  ஸ்ரீராமானுஜர் வாழ்வில் நடந்ததாக கூறப்படும் நிகழ்வின் அடிப்படையிலேயே இத்தகைய பாடல்கள் வெளி வந்துள்ளன.

ஒரு நாள், ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜர் காலை வேளையில் காவேரியில் குளித்துவிட்டு திரும்பி வரும் போது, வீதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள், சற்றே விலகிச் செல்லும்படி வேண்டினர்.  ஸ்ரீராமானுஜரும் என்ன காரணம் எனக் கேட்க, சிறுவர்களில் பெரியவன், நாங்கள் மணலில் ஸ்ரீரங்கக் கோவிலை கட்டி விளையாடுகிறோம். அதனால் அதைக் கலைக்காமல் விலகிச் செல்லுங்கள் என்றான்.  ஸ்ரீராமானுஜர், இது கோவில் என்றால் ஸ்ரீரங்கநாதர் எங்கே என கேட்க, சிறுவனும் உடனே அருகிலிருந்த கருங்கல்லை நடுவே வைத்து இதோ பெரிய பெருமாள் என்றான்.  ஸ்ரீராமானுஜர் வீதியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்.  உடன் வந்த சீடர்கள், ஸ்வாமி இப்படி வீதியில் வீழ்ந்து வணங்கியது எதற்காக என்று வினவினர்.  ஸ்ரீராமானுஜர், அந்த சிறு பையன், அந்தக் கருங்கல்லில் எப்போது ஸ்ரீரங்கநாதரைக் கண்டானோ, அப்போதே அங்கு ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளிவிட்டார்.  ஆகையால், ஸ்ரீரங்கநாதரை வணங்கினேன் என்று கூறினார்.  இந்த நிகழ்ச்சியே இருவரின் அவையடக்கப் பாடல்களின் பின்ண்ணியாகக் கொள்ளலாம்.

அகலிகை சாபவிமோசனம்

கம்பன் அகலிகை சாப விமோசனத்தை விவரிக்கையில், விச்வாமித்திரர், ராமனை நோக்கிக் கூறியதாக,

‘மைவண்ணத்தரக்கி போரில் மழைவண்ணத்தண்ணலே உன்

கைவண்ணமங்கு கண்டேன் கால்வண்ணமிங்கு கண்டேன்’

என்ற பாடல்வரிகளைப் புனைந்துள்ளார்.  முன்பு, சுபாஹு, மாரீசன் இருவரையும் ராமன் தன் புஜபலத்தால் வென்றான். இங்கு தன் திருவடித் திறத்தாலே கல்லைப் பெண்ணாக்குகிறான். கையை விட காலே மகிமை வாய்ந்தது என விச்வாமித்திரர் புகழ்ந்து பேசுகிறார்.

இதே கருத்தை மனதில் கொண்டு ஸ்ரீநிதிஸ்வாமியும், தமது மஞ்சு ராமாயணத்தில் அஹல்யா சாப விமோசன தருணத்தை வர்ணிக்கும் போது,

‘रघुप्रवीरस्य करांजातात् सुन्दप्रियासूदनतः प्रशस्तात् ।

पदांबुजातं महितं स मेने मुनीशवरो येन शिलाSपि तन्वी ॥‘

கவியின் வாக்காக, விச்வாமித்திரர், தாடகையைக் கொன்ற ராமனின் கைத்தாமரையை விட கல்லை பெண்ணாக்கிய பாததாமரையை புனிதம் வாய்ந்ததாக நினைத்தார் என்று எழுதுகிறார்.  சாதாரணமாக  கீழே தரையில் படும் கால்களை மட்டமாகவும், எல்லா செயல்களையும் செய்யும் கைகளை உயர்ந்ததாகவும் நினைப்பது மானிட இயல்பு.  ஆனால், தவச்ரேஷ்டரான விச்வாமித்திரர் அழித்த கையை விட உருவாக்கிய கால் மகிமை வாய்ந்தது என நினைத்தார் என்பது கவியின் கூற்று.  எப்போதும் ஆண்டவனின் திருவடிகளே சிறப்பு வாய்ந்தவை என்பது பெரியோரின் கருத்து.

கவிஞர் கண்ணதாசனும், கம்பனின் வரிகளை ஒட்டி,  பாசம் என்னும் திரைப்படத்தில் நாயகி பாடுவதாக,

‘கண் வண்ணம் அங்கே கண்டேன்; கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்’

என்ற வரிகளை எழுதினார்.

வில்லை முறித்தது

ராமன் மிக விரைவாக வில்லைமுறித்ததைக் கம்பன்,

‘…………………………………………………………………………………………………….கையால்

எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்’

என பாடியுள்ளார்.  மின்னலும் இடியும் சேர்ந்து வரும்போது முதலில் காண்பது மின்னலை; பிறகு கேட்பது இடியோசை.  ஒளியின் வேகம் காற்றை விட அதிகம்.  ராமனுக்கு வைக்கப்பட்ட பந்தயம் வில்லை வளைக்கவேண்டும் என்பது.  ஆனால் ராமனோ வில்லை வளைத்து, பிறகு அதை முறிக்கவும் செய்தான்.  இதற்கான காரணத்தைக் கம்பன் சொல்லவில்லை.

நம் ஸ்வாமியோ, வில்லை முறித்ததைப் பற்றி,

‘भ्रूभंगमासाद्य मुनीश्वरस्य चापस्य भंगं मनसा विचार्य ।

आदाय चारोप्य बभञ्ज मध्ये स्वमाश्रमं प्रथमं सहैव ॥‘

என்று ராமன் விச்வாமித்திரரின் புருவ நெரிப்பைக் கண்டு, வில்லை உடைக்கச் சொல்வதாகச் கருதி அவ்வாறு செய்ததாகக் கூறுகிறார்.

வனவாஸம்

காட்டில் வசிக்கையில் ராமனும் சீதையும் நடத்திய இல்வாழ்க்கை இன்பம் நிறைந்ததாக காட்டுவதற்காக கம்பன்,

‘ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும்

சீதை தன் நடையை நோக்கிச் சிறியதோர் முறுவல் செய்தான்

மாதவள் தானுமாங்கு வந்து நீர் உண்டு மீளும்

போதகம் நடப்ப நோக்கி புதியதோர் முறுவல் செய்தாள்’

என்று பாடியுள்ளார்.  காட்டில் நடந்து வரும் சீதையைக் கண்ட அன்னப்பறவை தன் வழியை விட்டு ஒதுங்கிச் செல்ல, ராமன் புன்முறுவல் பூத்தான்.  சீதையின் நடைக்கு தன் நடை குறைவு என்று வெட்கப்பட்டு அன்னம் ஒதுங்குகிறது என்னும் பொருள் அச்சிரிப்பில் தொனித்தது.  சீதையும் நீர் குடித்து திரும்பிச் செல்லும் யானையைப் பார்த்து புதிய சிரிப்பொன்றை உதிர்த்தாள்.  ராமனின் நடைக்குத் தோற்ற யானை திரும்பிச் செல்வதாக புன்சிரிப்பினால் உணர்த்தினாள்.  இருவருக்கும் ஒருவர் மீது ஒருவருக்கு இருந்த காதலின் வெளிப்பாடே புன்முறுவல்.  ராமனின் மீது சீதை கொண்டிருந்த மாளாக்காதலையும் ராமனின் உடல்வலிமையும் ஒருங்கே சொல்லும் கவி நயம் இன்புறச் செய்வதாகும்.

கண்ணதாசனின் நீதிக்கு பின் பாசம் என்னும் திரைப்படப் பாடலில், ‘சின்ன யானை நடையை தந்தது’ போன்ற வரிகள் நாயகனின் உடல்வலிமைக்கு சான்றாக, என்றென்றும் ரசிகர்களின் நினைவை விட்டு நீங்காதவையாகத் திகழ்கின்றன.

ஸ்ரீநிதிஸ்வாமி, மஞ்சு ராமாயண பாலகாண்ட பகுதியில், ராமன் வில்லை வளைத்ததையும் முறித்ததையும் பார்த்த சீதை நினைத்ததாக,

‘सुबाहुविध्वंसिसुबाहुवीर्यं विलोकयन्तीति विदेहकन्या।

विवाहचिन्ताविवशा स्वशीर्षसुखोपधानं चकमे हृदा तत् ॥‘

என்று எழுதுகிறார்.  கல்யாண எண்ணத்தால், தனிமையில் ராமனை நெருங்கி, சுபாகுவைக் கொன்ற வீர்யமுள்ள அந்த தோளை தன் தலையணையாகக் கொள்ளும் நாளை எதிர் நோக்குகிறாள்.  சுபாகுவை அழித்ததாலும், வில்லை முறித்ததாலும் ராமனின் தோள்வலிமை தெரிய வருகிறது.  அப்படிப்பட்ட  தோளை அணைக்க விரும்புகிறாள் சீதை.  கம்பன், ‘அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’ என்று மிதிலையில் வீதி வழி ராமன் செல்லும்போதே இருவருக்கும் அறிமுகத்தை ஏற்படுத்தினாலும் நம் ஸ்வாமி முன்னோர் வழி நின்று, சீதை அரசவையில், மாடத்திலிருந்து, ராமனை முதல் முறையாகக் கண்டதாக எழுதி அதனால் அவளுக்கேற்பட்ட மனவெழுச்சியை நவில்கிறார்.  இதில் ராமன், தனக்கு மாலையிடும் முன் சீதையைப் பார்க்கவில்லை என்பதும் தெளிவு.  கம்பன் வனவாசத்தின் போது, கூறிய ராமனின் வலிமையை, ஸ்ரீநிதிஸ்வாமி, வலிமை வெளிப்பட்டதான வில்லை முறித்த சமயத்தில் எழுதியதால்,மிக  உசிதமாக, காவியரசம் நன்றாக உயர்ந்து  நிற்கச் செய்கிறார்.

ராம சேது

கம்பன், மீன்களும், வீடுபேறு அடைந்ததைக் கூறி, சேதுவின் பெருமையைச் சொல்லப் புகுந்தான்.  அது,

‘சேதுவின் பெருமைக்கிணை செப்பவோர்

ஏது வேண்டுமென் றெண்ணுவதென் கொலோ ?

தூதனிட்ட மலையின் துவலையால்

மீது வீட்டுலகுற்றன மீன்களும்’. 

அனுமன் வீசியெறிந்த மலைகளால், மேலே கிளம்பிய நீர் திவலைகளோடு உடன் வந்த மீன்கள் மோட்ச உலகத்தை அடைந்தன.  சேதுவின் சம்பந்தத்தால் மீன்களும் வீடுபேறு பெற்றன.  மிகவும் நீசமான தவமறியா மீன்களும் வீடுபேறு பெற்றான என்றால் பக்தியோடு சேதுவை வணங்கும் மற்றவர்கெல்லாம், சேது நிச்சயம் மோட்சத்தை தரும் என்பதில் ஐயமுண்டோ?  மீன்களும் என்ற உம் சேர்க்கப்பட்ட சொல்லினால் ஏனைய கடல்வாழ் உயிரினங்களான, சிப்பி நண்டு, பாம்பு முதலியவையும் நற்கதி அடைந்தன என்பது சொல்லவும் வேண்டுமோ? 

நம் ஸ்வாமி சேதுவைப் போற்றி,

‘अतीव पापिनो जना भवन्ति येन पावनाः

तरन्ति येन वानराः स्पृशन्ति कानि यं मुदा ।

वदन्ति यं किलागमाः तथाविधाय सन्ततं

नमो नमोSस्तु सेतवे नमो नमोSस्तु सेतवे ॥‘

என்று பாடுகிறார்.  சேது, மிக்க பாவம் புரிந்தவர்களையும் புனிதராக்க வல்லது.  வானரர்கள் அதன் மூலமாகக் கடலைக் கடந்தனர்.  வானார்கள் சேதுவைத் தொட்டுத் தடவி மகிழ்ந்தனர்.  வேதங்களும் எப்போதும் அதன் புகழைப் பாடுகின்றன.  சேதுவிற்கு வணக்கம், வணக்கம். சேதுவிற்கு வணக்கம், வணக்கம் என்று சேதுவை வழிபட்டு அதன் பெருமையை எடுத்துரைக்கிறார்.  ‘येन पावनाः भवन्ति’ என்ற சொற்றொடரால், சேது, அதைப் பற்றிக் கேட்டாலும், சொன்னாலும், அதைப் பார்த்தாலும், வணங்கினாலும் புனிதப்படுத்த வல்லது என்பதைத் தெரியப்படுத்துகிறார். 

வசந்தன் உயிர்பெறுதல்

வால்மீகி ராமாயணத்தில் கூறப்படாத வசந்தன் என்னும் குரங்கு உயிர் பெறுதலான நிகழ்வு, கம்ப ராமாயணத்தில் ஒரு தனிப் படலத்தில் வசந்தன் உயிர்பெரு படலத்தில் கூறப்பட்டுள்ளது.  போர் முடிந்த பின் அங்கு வந்த தேவர்கள் ராமனிடம் வரம் கேட்கச் சொல்ல, ராமன் இறந்த எல்லா வானரர்களையும் உயிரோடு பார்க்க விரும்புவதான வரத்தைக் கேட்டான்.  சேனையை கணக்கீடு செய்யும் போது வசந்தன் என்னும் குட்டிக்குரங்கு காணவில்லையென்பது தெரிய வந்தது.  ராமன் வேண்ட பிரம்மன் அந்த குரங்கை உயிர்ப்பித்தான் என்பது அப்படலத்தின் கதை. கம்பன்,

‘மலரின் மேலயன் வசந்தற்கு முன் உயிர் வழங்க’

என்ற வாக்கியத்தால் இந்த நிகழ்வை சுட்டிக்காட்டுகிறான்.  ராமனின் நன்றிமறவாத தன்மை இந்த நிகழ்ச்சியால் வெளிப்படுகிறது.

இதையே நம் ஸ்வாமி ஓர் உரையாடல் மூலம்,

सर्वे किं कपयो लसन्ति? गणना संयक् कृता किं त्वया ?

देवैकं तु विना समे यमपुरे स्वर्गेSपि नास्त्येव सः ।

किष्किन्धा नगरे च कुत्र स गतो दृष्टोSद्य यन्त्रोदरे

क्षिप्तेSब्धाविति संभ्रमेण भवतो मन्दस्मितं किं मुखे? ॥

என்ற சுலோகத்தில் விளக்குகிறார்.

सर्वे कपयो लसन्ति किं?         எல்லா குரங்குகளும் இருக்கின்றனவா?

त्वया संयक् गणना कृता किं?  கணக்கு சரிபார்க்க்ப்பட்டதா?

देव एकं तु विना समे              - தேவனே! ஒரே ஒரு குரங்கைத் தவிர

सः यमपुरे स्वर्गेSपि नास्त्येव   - அக்குரங்கு யமலோகத்திலும் ஸ்வர்கத்திலும்

किष्किन्धा नगरे च                        இல்லை.   கிஷ்கிந்தையிலும் இல்லை.

सः कुत्र गतः                          - அக்குரங்கு எங்கு சென்றது?

अद्य अब्धौ क्षिप्ते यन्त्रोदरे       - இப்போது கடலில் வீழ்த்தப்பட்ட இயந்திரத்தின்

संभ्रमेण दृष्टः इति                      வயிற்றில் காணப்பட்டான் என்பதனால்

भवतो मुखे मन्दस्मितं किं?      - உங்கள் முகத்தில் ஏற்பட்ட புன்னகையோ இது.

 தமிழ்நாட்டு ஸம்ஸ்க்ருதக்கவியான நம் ஸ்வாமி,கம்ப ராமாயணத்திலுள்ள இந்த கதையை விடாமல் தன் மந்தஸ்மித ராமாயணத்தில் எழுதியது, ராமனுக்கு பக்தர்கள்பாலுள்ள அபிமானத்தை வெளிப்படுத்தவே என்றால் மிகையாகாது.

பட்டாபிஷேகம்

கம்பன், ராமனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் வைபவத்தை விளக்கும்போது, அரியணையை அனுமன் தாங்கவும், அங்கதன் உடைவாளை ஏந்தவும், பரதன் வெண்கொற்றாகுடை பிடிக்கவும், லக்ஷ்மண, சத்ருக்னர்கள் கவரி வீசவும், சீதை அருகே வீற்றிருக்கவும், வெண்ணைநல்லூர் சடையப்ப வள்ளலின் முன்னோர் எடுத்துக் கொடுக்கவும், அதனை வாங்கி வசிஷ்டன் கிரீடத்தைச் சூட்டினான் என்று பாடியுள்ளான்.  இதில் மகுடத்தை யாருக்குச் சூட்டினான் என்று தெளிவாகச் சொல்லவில்லை. ஆனாலும் நடப்பது ராமபட்டாபிஷேகம், ஆதலால் முடி சூட்டியது ராமனுக்கே என்பது பெறப்படும்.

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாளேந்த

பரதன் வெண்குடைகவிக்க இருவரும் கவரி பற்ற

விரைசெறி குழலி ஓங்க வெண்ணையூர் சடையன் தங்கள்

மரபுளோர் கொடுப்ப வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌளி

ஸ்ரீநிதிஸ்வாமி ராமபட்டாபிஷேகத்தை வர்ணிக்கும்போது,

अग्रे पादुकया दयाभ्यधिकया पार्श्वेSपि भूमिभुवा

वायोरात्मभुवा पदांबुजयुगीं संगृह्णता सादाम् ।

छत्रं चामरयोर्युगं च वहता भ्रातृत्रयेणावृतं

सर्वत्रापि नरैश्च वानरगणैः रामं भजे श्यामलम् ॥

பாதுகையை முன்னிறுத்தி, அருகில் சீதாதேவி இருக்க, அனுமனால் பாதங்கள் பற்றப்பட்டவனாய், குடையும் இருகவரியும் பிடித்த மூன்று சகோதரர்களாலும், ஜனங்கள், வானரக்கூட்டங்கள் எல்லா பக்கங்களிலும் சூழ இருந்த கருத்த ராமனை வணங்குகிறேன் என்று போற்றியுள்ளார்.  இங்கே பாதுகையை முன்னிறுத்திய செய்கைக்கு, இப்போதும் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம் நடக்கும்போது சடாரி முன்னே வைப்பது சாட்சியாகும்.

நன்றியும் பக்தியும்

கம்பன், தன் நன்றியை தெரிவிக்க, தன் ராமாயணத்தில், தன்னை ஆதரித்த  திருவெண்ணைநல்லூரைச் சார்ந்த சடையப்ப வள்ளலின் பெயர் ஆயிரம் பாட்டுக்கு ஒரு முறை வரும்படி காப்பியத்தை இயற்றியுள்ளார். ராமபட்டாபிஷேகக் காட்சியிலும் சடையப்ப வள்ளலின் பெயரைச் சேர்த்து அவருக்குப்பட்ட கடனைத் தீர்த்துள்ளார்.   

ஸ்ரீநிதிஸ்வாமிக்கு தன் தந்தைபாலிருந்த பக்தி அளவிடற்கரியது.  மஞ்சு ராமாயணத்தின் ஆரம்ப சுலோகமே

‘वन्दे वेंकटशेषदेशिकमणिं’ என்றே துவங்குகிறது.  ராமகாவியத்தைப் படைக்க முன்வந்த ஸ்வாமி தகப்பனாரின் பெயரை முதலில் வைத்து எழுதியது அவர் தம் தந்தையிடம் கொண்டிருந்த பக்தியை பாருக்கெல்லாம் எடுத்துக் கூறுகிறது.

தன் காவித்தை முடிக்கும் போதும், இப்படி ஒரு காவியத்தைத் தான் இயற்ற முடிந்ததற்கு காரணமாக,

‘श्रीमद्वेंकटशेषदेशिकमणेः पादांबुपानागत’

என்று எப்போதும் ஸ்ரீவேங்கடசேஷாசார்யரின் பாதங்களை வணங்குவதால் கிடைத்த ஞானத்தால் எழுதியதாக கூறுகிறார்.

ஸ்ரீநிதியின் சிறப்பு

வால்மீகியை ஒட்டி கம்பன் எழுதினான்.  வால்மீகி மற்றும் கம்பனின் மனப்பாங்கை அறிந்து எழுதினார் ஸ்ரீநிதிஸ்வாமி.  ஆகையால் தனித்தனியே அவ்விருவர் இயற்றிய காப்பியங்களைப் போலவே காவியரசம் மிளிரும் ராமாயணங்களைப் படைத்துள்ளார்.  அப்படிப்பட்ட சில சிற்ப்புகளைக் காண்போம்.

மாரீசனை தப்ப விட்ட காரணம்

சுபாகு,மாரீசன் என்ற இருவருமே விச்வாமித்திரரின் யாக்த்திற்கு இடையூறு செய்தவர்கள்.  இருவரும் சமமான குற்றவாளிகள்.  ஆனால், ராமன் அவர்களுக்கு அளித்த தண்டனைகள் இருவிதம்.  சுபாகுவைக் கொன்றான்.  மாரீசனைக் கடலில் தள்ளினான்.  நியாயமறிந்த ராமனின் இச்செய்கை பொருந்தவில்லையெனத் தோன்றும்.  இதற்கு விடையாக ஸ்வாமி தமது மஞ்சு ராமாயணத்தில் கூறும் சமாதானம்,

कथां निजां कल्पलतां जनानां विस्तारयन्नेष रघुप्रवीरः ।

मारीचमेनं किल बीजमस्याः संवापयामास समुद्रमध्ये ॥

மாரீசன் குற்றம் புரிந்தவன் ஆனாலும், பின்பு ராமாயணக்கதையை வளரச் செய்ய வேண்டியவன்.  ஆகையால் அவனை ராமன் கடலில் தள்ளினான்.  ஸ்வாமி மாரீசனை ராமாயணம் என்னும் கற்பகக் கொடியின் விதையாக உவமிக்கிறார்.  அதனால் அந்த விதையைக் கடலில் ஊன்றினான் ராமன்.  விதையை ஈரமுள்ள இடத்தில் ஊன்றுவது தானே இயற்கை.  மேலும் கற்பக மரம் பாற்கடலில் தோன்றியது.  அதே போல ராமாயணம் என்கிற கற்பகக் கொடியும் கடலில் வளரட்டும் என்ற எண்ணத்தால், அதன் விதை போன்றவனான் மாரீசனைக் கடலில் தள்ளினான் ராமன் என்பது கவியின் கூற்று.  இப்படிப் பல நுணுக்கமான விஷயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன ஸ்ரீநிதிஸ்வாமியின் கவிதைகள்.

 

புஷ்பகவிமான உரையாடல்

மந்தஸ்மித ராமாயணத்தில் ராமன் சீதையை மீட்டுக்கொண்டு புஷ்பக விமானத்தில் அயோத்தி திரும்புகிற வேளையில் நடந்ததாக ஒரு கற்பனை.

गन्तव्यं त्वरया रुमे यदि न किं वह्नौ पतिष्यत्यहो

भ्राता श्रीभरतः पतत्विह यथा सा त्वं तथा जीवतु ।

नैवं तत्र पतिष्यति प्रभुरसौ इत्येव सीतारुमा

संलापेन मितं स्मितं रघुपते जातं दरीदृश्यते ॥

रुमे! गन्तव्यं त्वरया                        ருமையே! சீக்கிரமாக போகவேண்டும்

यदि न किं?                                   இல்லாவிட்டால் என்ன?

अहो! भ्राता श्रीभरतः वह्नौ पतिष्यति – ஐயோ! தம்பி பரதன் நெருப்பில் விழுவான்

पततु इह यथा सा त्वं तथा जीवतु  விழட்டும். உன்னைப் போல் உயிர் பெறுவான்

न एवं असौ प्रभुः तत्र पतिष्यति – அப்படியில்லை. தலைவனும் விழுவான்

इति सीतारुमा संलापेन            என்ற சீதை ருமாவின் உரையாடலால்

जातं मितं स्मितं दरीदृश्यते रघुपते! - உண்டான மென்புன்னகை இது. ராமனே!

பரத்வாஜரின் விருந்து

அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ முனிவர் ராமனுக்கும் அவனுடன் வந்த எல்லோக்கும் விருந்து அளித்தார்.  விருந்தில் நடந்ததாக நம் ஸ்வாமியின் ஒரு கற்பனை நம்மை சிரிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.

भारद्वाजगृहे समर्पितमहाभोग्यान्नजग्धौ तदा

कन्दं खादति भास्करस्य तनये हस्ताच्च्युतं तत् प्लुतम् ।

तद्दृष्ट्वा स कपीश्वरोSपि भगवन् तं चानु सर्वेSथ ते

तद्दृष्ट्वा वदनारविन्दघटितं मन्दस्मितं किंन्विदम् ॥

பரத்வாஜர் அளித்த விருந்தில், சுக்ரீவன், சேப்பங்கிழங்கைச் சாப்பிட எடுக்க, அது கை நழுவி எகிறி விழுந்தது.  வானரத் தலைவனும் அதைப் பிடிக்கக் குதித்தான். எல்லா குரங்குகளும் அவ்வாறே குதித்தன.  அதைப் பார்த்த உன் முகத்தாமரையில் தோன்றிய புன்னகையோ இது.

இதுவரை கம்பனும் ஸ்ரீநிதியும் என்னும் தலைப்பில் இலக்கியரசம் பொருந்திய, சில பகுதிகளைப் பார்த்தோம்.  வாய்ப்பளித்த சென்னை ஸம்ஸ்க்ருதக் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், பங்கு கொண்ட எல்லா நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஸ்ரீராமநவமி சந்தர்பத்தில் ராமகாதையைப் பற்றி பேச  வைத்த சக்கரவர்த்தித் திருமகன் திருவடியை தொழுது என் சிற்றுரையை முடிக்கிறேன்.  ஜெய் ஸ்ரீராம்.

No comments:

Post a Comment