Friday 2 December 2022

 அஞ்சிலன் பதில் !

 

தாரையின் கணவனான வாலியைக் கொன்று இராமன் சுக்ரீவனை வானர ராஜ்ஜியத்தின் அரசனாகச் செய்தான்.  வானரப்படை கொண்டு சீதையைத் தேடுவதாக வாக்களித்த சுக்ரீவன், அரசபோகங்களில் மூழ்கி நாள்களைக் கழித்தான்.  சினம் கொண்ட இராமன், சுக்ரீவனைச் சந்தித்து அறிவுரை கூற   செல்லும் இலக்குவனிடம்  சொல்லும் செய்தியாகக் கம்பன் எழுதிய பாடல் :

“நஞ்ச மன்னவரை நலிந்தா லது

 வஞ்ச மன்று மனுவழக் காதலால்

 அஞ்சிலம் பதில் ஒன்ற றியாதவன்

 நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்.”

இப்பாடலில் மூன்றாம் மற்றும் நான்காம் வரிகளில்,

அஞ்சிலம் பதிலொன்றறியாதவன் நெஞ்சில் நின்று நிலாவ நிறுத்துவாய்’, என்ற தொடரைப் பல்வேறு பொருள் தரும்படி கம்பன் தமிழ் மொழியைக் கையாண்டுள்ள சிறப்பு பற்றி இனி காண்போம்.

அஞ்சிலம்பதிலொன்றறியாதவன்–அஞ்சிலன் பதில் ஒன்று அறியாதவன்

இராமன் இலக்குவனிடம் சுக்ரீவனின் இயல்புப் பற்றிக் கூறுகிறான்.  சுக்ரீவன் என் ஆற்றலைக் கண்டவன்.  அவனுக்கு என்னிடம் பயமில்லை – அஞ்சிலன்.  ஒருவர் செய்த உதவிக்குக் கைம்மாறு செய்தல் உலக வழக்கு.  அரசபதவியை அடைய இராமன் செய்த உதவிக்கு பதில் செய்யவேண்டும் என்னும் எண்ணமில்லாதவனாக, சுக்ரீவன் இருக்கிறான் – பதில் ஒன்று அறியாதவன்.  கொடுத்த வாக்கை காப்பாற்றாவிட்டால், அதனால் ஏற்படும் இழுக்கு பற்றி அறியாதவன்.  நன்றி மறந்த சுக்ரீவன், அவனுடைய செயலால் எனக்கு ஏற்படும் சினத்தையும், அதனால் நான் செய்ய கூடியச் செயல்களின் பின்விளைவுகளை அறியாதவன்.

அஞ்சிலம்பதிலொன்றறியாதவன்–அஞ்சில் அம்பதில் ஒன்று அறியாதவன்

சுக்ரீவன் சிறு வயதிலேயே அண்ணனின் கொடுமைக்கு ஆளானவன்.  ஒன்றும் அறியாதவனாய் இருந்தான்.  இப்போது அரசபோகங்களில் திளைத்து ஒன்றும் அறியாதவனாய் இருக்கிறான். ஐந்து வயது அளவிலும், வளர்ந்த ஐம்பது வயதிலும் ஒன்றும் அறியாதவன் சுக்ரீவன்.

 அஞ்சிலம்பதிலொன்றறியாதவன்–அஞ்சில் அம்பு அதில் ஒன்று அறியாதவன்

இராமனுக்கு பெருமை சேர்ப்பவை மூன்று. ஒரு இல், ஒரு சொல், ஒரு வில் என்பன். சீதையைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனதிலும் நினையாதவன்.  சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றியவன். ஒரே அம்பால் தாடகை. சுபாகு, விராதன் ஆகியோரைக் கொன்றவன்.  ஏழு மரங்களைத் துளைக்கும்படி அஞ்சாமல் அம்பு செலுத்திக் காட்டியவன்.  சுக்ரீவன் தன் கண்ணெதிரே இராமனுடைய அம்பின் மாட்சியைப் பார்த்த பின்பும்,அந்த அம்பு வாலியின் மார்பில் ஊடுருவி சென்றது  குறித்து உண்மை நிலையை அறியாதவனாய் இருக்கிறான்.  இராமனிடம் அதே போல பல அம்புகள் உள்ளன. இது குறித்து ஏதும் தெரியாதவனாய் சுக்ரீவன் இருக்கிறான்.   இராமனின் அம்புகள் அச்சமில்லாமல் தடையின்றி செல்பவை என்று கண்ட பின்னும், தான் அஞ்சாமல் இருக்கிறான்.

 அஞ்சிலம்பதிலொன்றறியாதவன்-அஞ்சில் அம்பு அதில் ஒன்று அறியாதவன்

இராமன் தன் மனைவியைப் பிரிந்து, காமனால் துன்புறுத்தப்பட்டவனாக இருப்பதை சுக்ரீவன் உணரவில்லை.  சுக்ரீவன், காமனின் ஐந்து கணைகளில் ஒன்றால் வருந்தும் இராமனைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை.  முன்பு, வாலியால் துரத்தப்பட்டு, மனைவியைப் பிரிந்திருந்த சுக்ரீவனுக்கு இராமனின் நிலைமை விளங்காதிருத்தல், சுக்ரீவனின் மடமையைக் காட்டுகிறது.

அஞ்சிலம்பதிலொன்றறியாதவன்-அம் சிலம்பு அதில் ஒன்று அறியாதவன்

சுக்ரீவன், உலகில் பல மலைகள் இருந்தாலும், வாலி புகமுடியாத ரிஸ்யமூக பர்வதத்தைச் சென்றடைந்து உயிர் தப்பினான்.  சிலம்பு என்ற சொல்லுக்கு மலை என்பது பொருள்.  மலைகளுள் ஒன்றான ரிஸ்யமூக மலையைச் சுக்ரீவன் மறந்து போனது, அவன் பேதைமையை வெளிக்காட்டுகிறது.

அஞ்சிலம்பதிலொன்றறியாதவன்-அம் சிலம்பு அதில் ஒன்று அறியாதவன்

வானரர்கள், சீதை கீழே விட்டெறிந்த நகைகளைச் சுக்ரீவன் முன்னிலையில், இராமலக்குவரிடம் காட்டியபோது, இலக்குவன், தினந்தோறும் சீதையின் திருவடிகளில் வணங்கிய பழக்கத்தின் காரணமாக சீதையின் நூபுரத்தை அடையாளம் கண்டு கொள்கிறான்.  இராமன் அத்தகைய சிலம்பணிந்த சீதையின் மேல் காதல் கொண்டு பிரிவால் தவிப்பதை அறியாதவனாகச் சுக்ரீவன் இருக்கிறான்.

இராமன், இலக்குவனிடம் இப்படிப்பட்டச் சுக்ரீவனிடம் சென்று, தன்னுடைய துன்பத்தை எடுத்தியம்பி, அவனால் செய்யப்படவேண்டிய செயல்களைச் செய்ய தூண்டுமாறு  கூறுகிறான். முன்பு தான் துயரத்தில் ஆழ்ந்திருந்த போது உதவிச் செய்ய வந்த இராமனின் ஆற்றலைக் கண்ணெதிரே கண்டவனான சுக்ரீவன் இராமன் தன் நண்பன் என்னும் எண்ணத்தினால் பயம் நீங்கியவனாய் இருக்கிறான்.  அந்த அஞ்சாமை எனும் குணம் இராமனிடத்திலும் கூட உண்டாயிற்று. இதைக் குறிக்க ‘அஞ்சிலன்’ எனும் சொல்லாட்சி. அரசபோகத்தில் தன்னிலை மறந்த சுக்ரீவனின் நெஞ்சில் தைக்குமாறு பேசும்படி இலக்குவனிடம் இராமன் கூறுகிறான், இலக்குவனின் சொற்கள் சுக்ரீவனுடைய மனதில் நீங்கா இடம் பெறும்படி பேசவேண்டியது இலக்குவனின் கடமை என்பது இராமனின் கருத்து. அதனாலேயே ‘நெஞ்சில் நின்று நிலவ நிறுத்துவாய்’ என்று கூறுகிறான்.

கம்பன், படிப்போர் உள்ளத்து பல வகைகளில் பொருள் தரும்படி சொற்களை அமைத்து காவியம் படைத்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலாகும்.  பலவிதமாகப் பொருள் கொள்வதால், இக்காட்சியின் அவலச்சுவை மேன்மேலும் பெருகுகிறது. அன்பர்களின் உள்ளத்தை உருக்குகிறது. கம்பன் கவிச்சக்கரவர்த்தி என்பது இதனால் பெறப்படும்.

No comments:

Post a Comment