Friday 2 December 2022

 

பாரதியாரின் கண்ணோட்டத்தில் கல்வி

பண்டைய பாரத மணித் திருநாட்டில் கல்விக்கே முக்கியத்துவம் தரப்பட்டது.  ‘எது விடுதலையைத் தருமோ அதுவே கல்வி’ என்பது பாரதியர்களின் திடமான நம்பிக்கை.  ஔவையாரும், ‘இளமையில் கல்’ என்று கல்வி கற்பதற்கு உரிய பருவமாக இளமையைக் கூறினாள்.  தந்தை சான்றோனாக்க வேண்டும், அதற்குரிய சூழலை மன்னன் ஏற்படுத்த வேண்டும் என்பது பொன்முடியார் என்னும் புறநானூற்றுப் புலவரின் விருப்பம்.  அக்காலத்தில், கல்வி பரவலாகவும், உயர்தரம் வாய்ந்ததாகவும் இருந்தது.  பெண்டிரும் கல்வியில் சிறந்து விளங்கிய நிலை, சங்க காலத்தில் ஐம்பதுக்கும் அதிகமான பெண்பாற்புலவர்கள் இருந்த செய்தியால் பெறப்படும்.  ‘ஓராண் ஒருவழி’ என்ற முறையில், அனைவரும் தத்தமக்குரிய கல்வியைப் பெற்றனர்.  பாடத்தோடு, செயல்முறைக் கல்வியும் பயிற்றுவிக்கப்பட்டது.  ஒரே இடத்தில் பற்பலக் கல்வியை கற்கவும் வாய்ப்பு இருந்தது. 

கடந்த நூற்றாண்டில், சென்னை மாகாணத்தில் மட்டும், 12,000 க்கும் மேற்பட்ட ‘திண்ணைப் பள்ளிகள்’ இருந்ததாக, மாகாண ஆளுநரான தாமஸ் மன்ரோ காலத்தியக் கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது.  இதன் பின்னர், ‘பள்ளி’ என்ற நிறுவனமும், அதில் மேலை நாட்டுக் கல்வி முறையில் கற்பித்தலும் புகுந்தது.  கல்வி பயில முடியாத சகோதரனின் நிலை கண்டு வருந்திய பாரதியார், தமது ‘வெள்ளைத் தாமரை பூவிலிருப்பாள்’ என்னும் பாடலில்,

‘அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்

 ஆலயம் பதினாயிரம் நாட்டல்……….

அன்ன யாவினும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்று புண்ணியம் விழைவோர் செய்ய வேண்டியதாக, ஏழைப்பிள்ளைக்குக் கல்வி அளிக்கச் சொல்கிறார். 

 

வயிற்றுக்கு உணவும், மனதிற்கு உணர்வும், வாழ்வில் ஏற்றமும் தருவது கல்வி.

ஆங்கிலக் கல்விக் கூடங்களில், கற்பிக்கப் பெறும் கல்வி, பாரதிய பண்புக்கு ஒவ்வாதது என்பது பாரதியின் எண்ணம்.  கற்கும் கல்வியின் பொருள் இன்னது என அறிந்து கொள்ளாமல், அயல் மொழி மோகத்தில் சிக்கி, பாரத நன்னாட்டு மக்கள் உழல்வதைக் கண்டு வெறுத்தார்.  ஆங்கிலப் பயிற்சி பெறும் மாணவர்கள், கம்பன், காளிதாசன், திருவள்ளுவர் போன்ற உள்நாட்டுக் கவிகளின் பாக்களை அறிய மாட்டார்கள்.  பாஸ்கராசார்யார், பாணினி முதலானப் பெரியோரின் மேதைமையைப் பாராட்ட மாட்டார்கள்.  சிவாஜி, சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வீரத்தைப் போற்றமாட்டார்கள்.  இதில் அவர்களுடைய தவறு ஒன்றுமில்லை.  கற்ற கல்வி, மேற்கண்ட விஷயங்களைப் பற்றி போதிக்காததால், அறியாமையால் அவ்விதம் நடந்து கொள்கிறார்கள்.

 

பாரத நாட்டில் நிலவிய கல்விச் சூழலைக் கண்டு, மனம் வெதும்பிய பாரதியார், தமது சுயசரிதையில்,

‘பேடிக் கல்விப் பயின்றுழல் பித்தர்கள்’ என்று அயல் மொழி வழியில் கல்வி பயில்பவரை, ‘பேடிகள்’ எனச் சாடுகிறார்.  கல்வியை அயல் மொழியில் படிப்பதை விட தாய்மொழியில் கற்றால் தெளிவு பிறக்கும். புதியவை படைக்கத் தோன்றும்.  நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரின் மொழியில், அவர் தந்த கல்வித் திட்டத்தின்படி, இந்த மண்ணுக்குப் பயன் தராத கல்வியைக் கற்பது பாரதியின் உள்ளத்துக்கண் தவிப்பையும் எரிச்சலையும் தந்தது.

 

ஆயினும், பாரதி, பிற்காலத்தில், தன் கண்ட கனவு நிறைவேறும் என்னும் உறுதியுடன்,

‘வாழி கல்வி செல்வம் எய்தி

 மனம் மகிழ்ந்து கூடியே

 மனிதர் யாரும் ஒருநிகர்

 சமானமாக வாழ்வமே’ என்று பாடுகிறான்.  பாரதியின் கனவை நனவாக்க, நாம் எல்லோரும் முயல்வோமாக!

No comments:

Post a Comment