Friday 2 December 2022

 

ஆயிரமும் கோடிகளும்

தன்னேரில்லா தலைவனான் இராமன், தந்தை அரசவையில் அறிவித்தபடி, மறுநாள், பட்டாபிஷேகத்திற்காக, விரதம் இருக்கத் தொடங்குகிறான்.  கைகேயியின் அரண்மனையிலிருந்து வந்த கட்டளையைச் சிரமேற்கொண்டு அங்கு செல்லும் இராமனுக்கு, அரசனின் கட்டளையாக இரு செய்திகள் கிடைக்கின்றன.  ஒன்று, இராமனுக்கு பதினான்கு ஆண்டு வனவாசம்.  மற்றது, பரதனுக்கு இளவரசுப் பட்டம்.  மனமகிழ்ச்சியோடு அவ்விரண்டையும் ஏற்ற இராமன் தன் இருப்பிடம் சேர்கிறான்.  கோசலையிடம், மன்னனின் இரு ஆணைகளையும் தெரிவித்து, வனம் செல்ல அனுமதியை வேண்டுகிறான்.  கோசலைக்கோ, பரதன் நாடாள்வதில் எள்ளளவும் துன்பமில்லை.  ஆனால், இராமனைக் காட்டுக்கு அனுப்ப மனம் ஒப்பவில்லை.  கம்பன் இக்காட்சியை,

“முறைமை அன்றென்பது ஒன்று உண்டு மும்மையின்

 நிறைகுணத்தவன் நின்னிலும் நல்லனால்

 குறைவிலன் எனக் கூறினாள் நால்வர்க்கும்

 மறுஇல் அன்பினில் வேற்றுமை மாற்றினாள்”

 

என்று பாடுகிறான்.  கோசலை, தசாதனின் நான்கு பிள்ளைகளிடத்தும் வேற்றுமை பாராட்டாதவளாய், வழிவழியாய் மூத்த மகனுக்கேப் பட்டம் என்பது வழக்கமானாலும், குணக்குன்றான, இராமனைக் காட்டிலும் நல்லவனான பரதனுக்கு முடிசூட்டுவது பற்றிச் சிறிதும் வருந்தவில்லை.  இங்கு பெற்ற தாயான கோசலையே, இராமன் முன்னிலையில், உன்னைக் காட்டிலும் பரதன் நல்லவன் என்று கூறினாளென்றால், பரதனின் குணவிசேஷம் எத்தகையது?  இதில், ‘மும்மையின் நிறை குணத்தவன்’ என்னும் சொற்றொடரால், கோசலை, பரதனை எக்காலத்தும் குணக்குறைவு இன்றி இருப்பவன் எனக் குறிப்பிடுகிறாள்.  பாதுகையைப் பெற்ற காலத்தும், பின்னர், இராமன் அயோத்திக்கு திரும்பும் போதும் பரதன் ‘குணமென்னும் குன்றேறி நின்றான்’ என்பது யாவரும் அறிந்ததே.  இங்கு கோசலை தன் வாயால் பரதன், குணத்தால் மேம்பட்டவன் என்பது பொருத்தமே.  ஆண்டவனை விட அடியவர் பெருமையுடையவர் அல்லவா?  இராமனுக்கு பரதனைக் காட்டிலும் சிறந்த பக்தன் யாரிருக்க முடியும்.? ‘தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே’.

 

காட்டிலிருக்கும் இராமனை நாட்டிற்கு அழைத்து வரச் செல்கிறான் பரதன்.  கங்கைக் கரையில் குகன் பரதன் காட்டிற்குச் செல்ல விழைகிறான் என்று அறிந்து, பரதனின் நோக்கம் பற்றி சந்தேகம் கொள்கிறான். 

 

'அஞ்சன வண்ணன், என் ஆர் உயிர் நாயகன், ஆளாமே,

வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே!

செஞ் சரம் என்பன தீ உமிழ்கின்றன, செல்லாவோ?

உஞ்சு இவர் போய்விடின், "நாய்க்குகன்" என்று, எனை ஏசாரோ?’

 

மை போன்ற மேனி நிறமுடைய இராமன் அரசு ஆளாமல், சூழ்ச்சியால் பட்டத்தப் பெற்ற அரசன் இங்கு வந்தானே.  எங்களுடைய அம்புகள் எல்லாம் நெருப்பைக் கக்கிக் கொண்டு முன் செல்லாதவையோ?  எம்மை மீறி இவர்கள், இராமனிருக்கும் இடத்தை அடைந்து விட்டால் உலகத்தார் என்னை ‘நாய் குணமுடைய குகன்’ என்று ஏச மாட்டாகளா?  எப்படியாயினும் பரதன் என்னை வெல்லாமல், இராமனிடம் சேரமாட்டான் என்று சூளுரைக்கிறான்.  பின்னர், பரதன் அருகே வந்த போது, அவன் நிலையைக் கண்டும், அவன் வனத்திற்கு வந்த காரணத்தை அறிந்தும் தன்னிலையை மாற்றிக் கொள்கிறான்.   பரதனின் கோலம் – இடையிலே மரவுரி,  மாசடைந்த மேனி,  கல்லும் உருகும்படி துயரம் நிறைந்த நிலை – அதைக் கண்ட அளவில் பரதனின் நல்ல  குணங்களை தெளிவாக புரிந்து கொண்ட குகன், அதுவரை எதிரியென நினைத்தவன், தன் கையிலுள்ள வில் நழுவி வீழ்ந்ததையும் அறியாமல் வியப்புற்று  நின்றான்.  அவன் மனதில், ஓடிய எண்ணத்தால்,

 

“நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான்; அயல் நின்றான்

 தம்பியையும் ஒக்கின்றான்; தவ வேடம் தலைநின்றான்;

 துன்பம் ஒரு முடிவு இல்லை; திசை நோக்கித் தொழுகின்றான்;

 எம்பெருமான் பின் பிறந்தார் இழைப்பரோ பிழைப்பு?' என்றான்.”

பரதனோ இராமனைப் போல இருக்கிறான்.  பக்கத்தில் நின்ற சத்ருக்னனோ லக்ஷ்மணனை ஒத்திருக்கிறான்.  பரதன், முனிவேடம் பூண்டவனாய், துயரத்தின் எல்லையைக் காணாதவனாக,  இராமன் இருக்கும் திசை நோக்கி, வணங்குகிறான்.  எம் தலைவனான இராமனுக்கு பின் பிறந்தவர்கள் தப்பு செய்யமாட்டார்கள் என்று எண்ணி, பரதனின் வருகைக்குக் காரணத்தை வினவுகிறான்.  பரதன், இராமனை அரசபதவி ஏற்றுக் கொள்ள வேண்ட வந்ததாகக் கூறுகிறான்.  குகனின் வியப்பிற்கு எல்லை இல்லை.  உன் தாயின் வரத்திற்கேற்ப, தந்தை தந்த அரசை, இது தகாது என்று விட்டுவிட்டு, இராமனை அரியணையேற்றிப் பார்க்க விரும்பும் பரதனே!  ஆயிரம் இராமர்கள் சேர்ந்தாலும் உனக்கு இணை ஆகமாட்டார்கள் என்று கோசலயி முன் பரதனைப் புகழ்கிறான்.

 

“தாயுரை கொண்டு தாதை உதவிய தாரணி தன்னை

  தீவினையென்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி

 போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்

 ஆயிரம் ராமர் நின் கேழ் ஆவரோ தெரியின் அம்மா!”

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்னும் பழமொழிக்கு இணங்க, பரதனின் முகத்தில் அவன் மனவெழுச்சியைக் கண்ட குகன்,  ஆயிரம் இராமர் உனக்கு ஒப்பாக மாட்டார்கள் என்று முடிவு செய்கிறான். 

இப்படி தீர ஆலோசித்து முடிவு கண்டதனால், குகன் ‘தீவரன்’ என்று அழைக்கப்பட்டு, அவன் குலத்திற்கே ‘தீவரகுலம்’ என்னும் பெயர் நிலைபெறுகிறது.  ஸம்ஸ்குதத்தில் தீவரன் (धीवरः) என்ற சொல்லுக்கு  மீனவன் என்று பொருள்.  அச்சொல்லுக்கே புத்திமான் (धीः वरः यस्य सः – धीवरः) என்ற பொருளும் உண்டு.  அதிகம் ஞானமில்லாத மீனவனை தீவரன் (புத்திசாலி) என்று அழைக்க, குகனின் இச்செய்கையே காரணம் என்று மஞ்ஜு ராமாயணத்தில் ஸ்ரீநிதி ஸ்வாமிகள் விளக்குகிறார்.

“इति तत्र विकल्प्य यद्गुहः भरतं निश्चितवान् गुणोत्तरम् ।

 अत एव बभूव धीवरः परथा नाम कथं घटेत तत् ॥“

கோசலை, பரதன் இராமனைக் காட்டிலும் நல்லவன் என்றாள்.  குகனோ ஆயிரம் இராமர்கள் ஒன்று சேர்ந்தாலும் பரதனுக்கு சமமாக மாட்டார்கள் என்கிறான்.  பரதன் ஒருவனே இராமனை விட மேலானவன் என்பது முதலில் தெரிய வந்தது.  பின்பு, குகனுடைய புகழுரையால் அவன் ஒருவனே ஆயிரம் இராமர்களுக்கு மேம்பட்டவன் என்பது பெறப்பட்டது.

காலகெடுவான பதினான்கு ஆண்டுகள் நிறைவடையும் சமயத்தில், இராமன் வராதபோது, பரதன், தீக்குளிக்க முற்படுகிறான்.  இச்செய்தி அறிந்த கோசலை ஓடோடி வருகிறாள்.  கோசலை பரதனைப் பார்த்துச் சொல்வதாகக் கம்பன்,

“எண்ணில் கோடி இராமர்கள் ஆயினும்

 அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ?

 புண்ணியம் எனும் நின்னுயிர் போயினால்

 மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?

என்று பாடியுள்ளார்.  கோசலை, பரதனே!  உன் அண்ணனான இராமனுக்காகவா உயிர் விடத் துணிந்தாய்.  கணக்கற்ற கோடி இராமர்கள் சேர்ந்தாலும் உன் பக்கத்தில் வைத்து எண்ணத் தக்கவர்களா?  புண்ணியமே வடிவான நீ இறந்தால்,  இந்த பூவுலகும், வானுலகும் மற்ற எல்லா உயிர்களும் வாழமாட்டா.  ஆகையால், அப்பேர்ப்பட்ட நீ இராமனுக்காக உயிர் துறத்தல் சர்யன்று. இச்செய்கையிலிருந்து விலகு என்று அறிவரை கூறுகிறாள்.  இவ்விடம் பரதன் கணக்கற்ற இராமர்களை விட உயர்ந்தவன் என்பது கோசலையின் கூற்று. 

பரதன், கேகய தேசத்திலிருந்து அயோத்திக்கு திரும்புமுன், கோசலை அவனைப் பற்றி இராமனிடம், பரதன் உன்னை விட சிறந்தவன் என்கிறாள்.  சிறிது காலத்திற்குப் பின் குகன், கோசலையின் முன்னிலையில், ஆயிரம் இராமர்கள் பரதனுக்குச் சமமாக மாட்டார்கள் என்கிறான்.  இப்பொழுது கோசலை, எண்ணற்ற கோடி இராமர்கள் ஒன்று சேர்ந்தாலும் பரதனுக்கு அருகினில் வர  தகுதிய்ள்ளவர்கள் அல்லர் எங்கிறாள்.

பரதன், பதினான்கு ஆண்டுகள், எப்படிப்பட்ட சேவையைச் செய்திருந்தால், இராமனுடைய தாயான கோசலையின் வாய்மொழியாலே, அவன் அளவிட முடியாத எண்ணிக்கையிலுள்ள இராமர்களை விட உயர்ந்தவன் என்று புகழப் படுவான்.  பதினான்கு ஆண்டுகள் என்பது நெடுங்காலம்.  அதில் ஒரு நாளேனும் பரதன் குணம் தவறி நடக்கவில்லை என்பதற்கு கோசலையின் இந்த வார்த்தைகளே சாட்சி.

இராமயணத்தில், இராமனே நாயகன்.  இக்காவியத்தில் இன்னொருவர் புகழ் பாடுவது சரியல்ல.  ஆனால், கவிஞர்கள், இப்படி பரதனை இராமனை விட உயர்த்திப் பேச,  பகவானை விட பாகவதனே மேலானவன் என்ற கருத்தே காரணம்.  அப்படிப்ப்ட்ட இறையடியார்களைப் போற்றிப் பரவுவோம்.

No comments:

Post a Comment